LOADING

Type to search

மலேசிய அரசியல்

கோலாலம்பூர் பத்துமலை சுற்றுலா தலத்தில் இடம்பெற்ற ‘கொரோனா’ பொங்கல்!

Share

-நக்கீரன்

தைத் திங்கள் முதல் நாளில் பத்துமலை அருள்மிகு திருமுருக திருத்தலத்தில்  பொங்கல் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு, தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களை உள்ளடக்கிய முப்பெரும் விழா அண்மைய ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது.

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் இவ்விழா நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த வேளையில், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி பெரும் பரபரப்புக்கிடையே நடைபெறும்.

ஆன்மிகத் தலைவர்கள், சுற்றுலா பிரமுகர்கள், அரசியல் புள்ளிகள், சமூக இயக்கத் தலைவர்கள், பன்மொழிப் பிரிவினர் கொண்ட தேசிய ஊடகத்தினர், பொதுமக்கள், பால்குடம்-கரும்பு காவடியுடன் தைப்பூச நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்கள் என இடம் கொள்ளாத அளவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆனால், இந்தத் திருவள்ளுவர் ஆண்டு 2046 தை முதல் நாளில் ஆலயப் பணியாளர்களைத் தவிர வேறு ஒருவரும் காணப்படவில்லை. அர்ச்சனை செய்ய விரும்பி வந்த ஒரு சிலரும் திருப்பி  அனுப்பப்ட்டனர்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தளர்த்தப்பட்டிருந்த அண்மைய மாதங்களில் மிதமான அளவில் பக்தர்கள் வந்துபோய்க் கொண்டிருந்த வேளையில், கோவிட்-19 நச்சுயிரியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அண்மை வாரத்தில் நான்கு இலக்க அளவில் நீடித்ததைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் நேற்று(13-01-2021) முதல் முதல் மலேசிய அரசு பிறப்பித்தததுடன் அவசரகால சட்டத்தையும் பிரகடப்படுத்தி உள்ளது.

இதனால், புறா மற்றும் குரங்குக் கூட்டங்களின் நடமாட்டம்தான் சுதந்திரமாக தென்பட்டனவேத் தவிர, பக்த அன்பர்களும் சுற்றுலப் பயணியரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது பத்துமலை வளாகம்.

இதற்கிடையில் ஆலய சிப்பந்தியரும் குருக்கள்களும் என ஏழெட்டு பேர் சேர்ந்து பொங்கல் வைத்தனர். தலைமைக் குருக்கள் சா.ரவி, க.ரு. ஜெயராம பண்டாரம், பெ.சுப்பையா பண்டாரம், க. செல்வம், சோ.சிவக்குமார் குருக்கள், சொ.முத்துக்குமார் குருக்கள் ஆகியோர் சூரிய ஒளியில் பொங்கல் வைத்து, பொங்கல் பானை பொங்கிய வேளையில் “பொங்கலோ பொங்கல்” என கூவி மகிழ்ந்தனர்.

தமிழ் நேசன் ‘யூ ட்யூப்’ செய்தி ஒளிபரப்பின் சார்பில் சுந்தரும் வந்திருந்தார்.