LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசியாவில் பெட்ரோல் டீசல் விலை 10 வாரங்களாக தொடர்ந்து ஏற்றம்

Share

கோலாலம்பூர், ஜன.22:மலேசியாவில் டீசல், பெட்ரோல் விலை தொடர்ந்து பத்து வாரங்களாக ஏற்றம் கண்டுள்ளது. நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையும் அவசரகால சட்டமும் ஒருசேர நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில் ஜனவரி 22  வெள்ளிக்கிழமை மீண்டும் 11-ஆவது வாரமாக அத்யாவசிய பண்டமான இந்த எரிபொருள் விலையேற்றம் கண்டால், அது வருமானமும் வாழ்க்கைச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு சுமையாக அமையும் என்று பெரும்பாலான மலேசியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மலேசியாவில் விலை மாறிக் கொண்டே இருக்கும் பொருட்களில், எரிபொருளான பெட்ரோலும் டீசலும் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த நவம்பர் 2-ஆவது வாரத்தில் 1.61 வெள்ளியாக இருந்த ரோன் 95 பெட்ரோல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 16-ஆம் நாள் பத்தாவது வாரமாக விலை உயர்ந்து வெ.1.89க்கு விற்கப்பட்டு வருகிறது.

அதைப்போல, 2020 நவம்பர் 7-14 காலக்கட்டத்தில் வெ.1.91 ஆக இருந்த ‘ரோன் 97’ பெட்ரோல் விலையும் வெள்ளி 1.68ஆக இருந்த டீசல் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு முறையே வெ.2.19, வெ.2.01 என்ற அளவில் இப்போது விற்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் நாளில் முதல் முறையாக நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் ரோன் 95 பெட்ரோல் விலை வெ.1.82 ஆக விற்கப்பட்டது. அடுத்த வாரம் அதிரடியாக 38 காசுகள் விலை குறைக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களிலும் விலை குறைந்து, 2020 ஏப்ரல் மாத நடுப் பகுதியில்(11 – 17) ரோன்95 வெ.1.25க்கு விற்கப்பட்டது. அப்பொது, ரோன்97 வெ.1.55க்கும் பெட்ரோல் வெ.1.46க்கும் விலை குறைந்தன.

ஏறக்குறைய ஒரு மாதம் நீடித்த இந்த நிலை 2020 மே 16-ஆம் நாள் உயர ஆரம்பித்தது. தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இருந்த எரிநெய்(பெட்ரோல்) விலை, 2020 நவம்பர் 2ஆவது வாரத்தில் இருந்து தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் மலேசியாவும் ஈடுபட்டுள்ள நிலையில் எரிபொருளுக்கான விலையேற்றத்தையும் விலை நிர்ணயத்தையும் உள்நாட்டு வாணிகம் பயனீட்டாளர் நலத்துறை செய்வதில்லை. நிதி அமைச்சகம்தான் செய்கிறது. கோவிட்-19 தாக்கத்தால் எரிபொருள்-எரிவாயு பன்னாட்டு சந்தை வெகுவாக பாதிக்கப்படும் என்றும் இதன் விளைவு மலேசிய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மலேசியாவிற்கான புதிய முதலீட்டு நிதி இழப்பு 1.7 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்றும் இதனால் மலேசியாவின் வருவாய் நிதியில் ரி.ம.30.9 பில்லியன் வரை பாதிப்பு ஏற்படும் என்று மேலும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எனபது ஆண்டிற்கு இரண்டு, மூன்று முறை என்ற அளவில்தான் முன்பு இருந்தது. பின்னர், மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யும் முறை உருவானது. தொடர்ந்து, வாரந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை 2017 ஏப்ரல் முதல் அறிமுகமானது. இன்றளவும் அந்த நடைமுறை தொடர்கிறது.

மலேசியாவில் ஒரு நாளில் சராசரியாக 524 ஆயிரம் பீப்பாய்கள் என்ற அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது; பன்னாட்டு சந்தையிலும் முதல் தர கச்சா எண்ணெய் விலை கணிசமாக இறங்கியுள்ளது. அப்படி இருந்தும் பெட்ரோல், டீசல் விலை இரண்டரை மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது ஏன் என்னும் கேள்வி மக்களின் மனதில் எழுந்துள்ளது.

மலேசியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணை உற்பத்தி, அதன் தரம் மட்டும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்வதில்லை. பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஏபிஎம் என்னும் ‘தானியக்க விலை நிர்ணய’(Automatic Pricing Mechanism) முறையில்தான் பெட்ரோல்-டிசலுக்கான விலை வாரந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

அரசாங்க மானியம், எண்ணெய் நிறுவனங்களின் இலாப அளவு, பெட்ரோல் விநியோகஸ்தர்களின் இலாபம், எம்.ஓ.பி.எஸ்., நடைமுறைச் செலவு, ஆல்ஃபா என்னும் கூறு ஆகிய தரவுகளை உள்ளடக்கியதுதுதான் ஏபிஎம்  முறை.

 

இருந்தாலும் பன்னாட்டு சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை அறுபது டாலரை தாண்டாதபோது, மலேசியாவில் சில்லரை விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து  ஏற்றம் காண்பது ஏன் என்பதுதான் பயனாளர்களின் கேள்வியாக  இருக்கிறது.

 

ஒருவேளை, இந்த வாரம் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் நடுவே நிலவுகிறது.