LOADING

Type to search

கதிரோட்டடம்

நம்பியிருந்தவர்கள் மோசம் செய்துவிட, நம்பிக்கைகளை இழக்காமல் போராட்டங்களை நடத்தும் ‘நம்மவர்கள்’ வாழ்க!

Share

கதிரோட்டம் 12-03-2021

இலங்கை அரசு அரங்கேற்றிய மிகவும் மோசமான இனப்படுகொலை இடம்பெற்று 11 வருடங்களை கடந்தும் போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, உள்ளக விசாரணை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் போன்ற சொற்கள் இன்னமும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல ஈழத்தமிழ் அரசியல்வாதிகளாலும் தமிழ்நாட்டின் மக்களாலும், அங்குள்ள அரசியல்வாதிகளாலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எத்தனையோ ஆண்டுகளாக இந்தச் சொற்களை உச்சரித்து, உச்சரித்து அரசியல் செய்த தமிழ் அரசியல்வாதிகள் ஓய்ந்து போய்விட்டார்களா என்று கேள்வி எழுப்புகின்ற அளவிற்கு அவர்களின் குரல்களைக் காணவில்லை. அதற்கு காரணங்கள் பல உண்டு.

எமது அரசியல்வாதிகளில் பலருக்கு ஐக்கிய நாடுகள் சபையை எவ்வாறு பயன்படுத்தலாம், அல்லது அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளை யார் கேட்கின்றார்கள் என்பதெல்லாம் தெரியாமல் ஒரு உல்லாசப் பயணம் போன்று அங்கு சென்று வந்தார்கள். இத்தனை வருடத்திற்குள் எத்தனையோ தடவைகள் “நான் ஜெனிவா போகின்றேன்” என்று தமிழ் மக்களிடம் சொல்லி நம்பிக்கைகளை ஏற்படுத்திவிட்டு, மறுபக்கத்தில் ஆட்சியாளர்களிடம் சென்று “நீங்கள் அஞ்சவேண்டாம், நாங்கள் அங்கே போய் பேசுவதால் உங்களுக்கு ஒன்றும் ஆபத்து வந்துவிடாது” என்று சமாதானம் கூறிய படி இத்தனை ஆண்டுகளும் கடந்திருக்க வேண்டும்.

அண்மையில் பிரான்ஸ் நாட்டில் எமது ஈழத்தமிழ் மக்கள் நலன்களுக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவரும் பொஸ்கோ என்னும் அன்பர் வெளிப்படையாகவே ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களில் பல விடயங்களை குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார். அன்பர் பொஸ்கோ அவர்கள் ஒரு தீவிரமான கருத்துப் போராளி என்பதை புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பலருக்குத் தெரியும், ஆனால் அரசியல் பேசி பொருள் சம்பாதிக்க விரும்புகின்றவர்களுக்கு இவர் ‘வேண்டாதவர்’ மனித் உரிமைகள் கவுன்சிலின் பல உயர் அதிகாரிகள் கூட இவர் சொல்லுகின்ற கருத்துக்களுக்கு ‘ஆமாம்’ என்று ஆதரிக்கின்ற தன்மைதான் அங்கு காணப்படுகின்றது.

இவ்வாறான பொஸ்கோ அவர்கள் எமது தமிழ் அரசியல்வாதிகள் பற்றி கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்.  “இத்தனை நாட்களும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று வந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் என்ன பேசுகின்றோம். அதனால் என்ன பலன் கிடைக்கும் என்றெல்லாம் அறிந்திருக்கவில்லை” என்று தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சர்வதேச நீதி மன்றத்திற்கு இலங்கை அரசை கொண்டு செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தேவையில்லை” என்று கூறியிருக்கின்றார்.

உயர்நீதி மன்றத்தின் நீதியரசராக இருந்த எமது முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கூட இந்த விடயங்களில் தெளிவில்லை என்று கூறியிருக்கின்றார்.

இவ்வாறாக தமிழ் பேசும் அரசியல்வாதிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது. உலகின் பல நாடுகளிலும், மிகுந்த அச்சுறுத்தல் நிறைந்த இலங்கையில் மக்கள் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர் அமர்ந்திருக்கும் பந்தல்களின் கீழே ஒரு அரசியல்வாதிகளையும் காண முடியவில்லை.

இன்னொரு பக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் எத்தனையோ ஆண்டுகளாக வீதியில் நின்று போராடுகின்றார்கள். அவர்களை உதாசீனம் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு பல தடவைகள் செருப்பு அபிசேகம் செய்ய அந்த உறவுகள் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களிடத்தில் விசாரணைக்காக என்று கூறியபடி செல்லும் காவல்துறையினர் “உங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகின்றதா? என்று மிரட்டுகின்ற நிலை அங்கு இருந்தாலும், அவர்கள் எவ்வித தளர்ச்சியுமின்றி போராட்டத்தை நடத்துகின்றார்கள். ஆனால் வாக்குக்காக காத்திருக்கும் அரசியல்வாதிகள் ‘தலைமறைவு’ வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ என்ற பலமிக்க பேரணியை நடத்திய பல சாத்வீகப் போராளிகளே தொடச்சியாக இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டங்களுக்கும் வழி சமைத்துக் கொடுத்து;ளளார்கள் என்பது புலனாகின்றது.

ஆனால் பாராளுமன்ற அரசியலில் இறங்கி, தாங்கள் எதிர்பார்த்திராத சொத்துக்களுக்கும் சுகபோகங்களுக்கும் அதிபதிகள் ஆகிவிட்ட சில தமிழ் பேசும் அரசியல்வாதிகள் “வடக்கு எனக்கு, கிழக்கு உனக்கு” என்று தங்கள் எண்ணப்படி அரசியல் செய்துவருவதைக் காணமுடிகின்றது. அது ஒரு சக அரசியல்வாதியின் குரலாக தங்கள் விருப்பத்தை மக்களுக்கு தெரிவிப்பது போன்று அறிவிக்கும் தந்திரம், பாதிக்கப்பட்ட  மக்களுக்கு விளங்காமல் இல்லை.

ஆமாம் எமது மக்கள் நம்பியிருந்த தமிழ் பேசும் அரசியல்வாதிகள் ‘மோசம்’ செய்து விட்டு மௌனமாக தங்கள் அடுத்த ‘நகர்வு’களைக் கவனிக்க, பாதிக்கப்பட்ட மக்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் உலகின் அனைத்து நாடுகளிலும்..  பொறுத்திருந்து பார்ப்போம். மோசம் செய்த அரசியல்வாதிகள் கோசம் போடுவதற்கு வருகின்றார்களா என்று?