LOADING

Type to search

அரசியல்

கவிஞர் வைரமுத்துவின் புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல்

Share

நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக்கெழிலொழுகும்… எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல், தமிழ்நாட்டில் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டு வருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் இருந்து குறிப்பிட்ட  வரிகளை மட்டும் எடுத்து, மெல்லிசை மன்னர் எம்எஸ் விசுவநாதன் இசையில் பி.சுசீலாவை பாடவைத்து அரசு விழாக்களில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடுவதை 1970களில் முதல்-அமைச்சர் கருணாநிதி கட்டாயமாக்கி, மாநில அரசின் பாடலாகவே அதை அறிவித்தார். அன்று முதல் இன்று வரை இந்தப் பாடல் அரசு விழாக்கள் மட்டுமின்றி பள்ளி-கல்லு£ரி விழாக்களிலும் பாடப்பட்டு வருகிறது.

நாட்படு தேறல்

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து உலகத்தமிழர்களுக்காக புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

“நாட்படு தேறல்” என்ற பாடல் தொகுப்பை 100 பாடல்கள்… 100 பாடகர்கள்.. 100 இசையமைப்பாளர்கள்.. 100 இயக்குநர்கள் என்ற திட்டத்துடன் அவர் உருவாக்கி வருகிறார். அதில் தான் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

“நாட்படு தேறலுக்காக உலகத் தமிழர்கள் நிலம் கடந்து பாடும் பொதுவான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒரு பாடல் புனைந்திருக்கிறேன். உலகத் தமிழர்களுக்கு இது என் காணிக்கை…

“எழுத்தும் நீயே

சொல்லும் நீயே

பொருளும் நீயே

பொற்றமிழ்த் தாயே

அகமும் நீயே

புறமும் நீயே

முகமும் நீயே

முத்தமிழ்த் தாயே

உனக்கு வணக்கம் தாயே – எம்மை

உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள்

ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய்

உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்த

உழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்

ஆழி அலையிலும் ஆயுத மழையிலும்

அழிந்துபடாத பொருளாய் இருந்தாய்

நிலவும் கதிரும் நிலவும் வரையில்

நீயே தமிழே எங்கள் முதல்தாய்

உனக்கு வணக்கம் தாயே – எம்மை

உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!

காலக் கடலில் கரைந்த நாட்களை

ஓலைச் சுவடியில் ஓதி முடித்தாய்

காதல் வீரம் ஞானம் மானம்

கவியில் கலையில் கட்டி வளர்த்தாய்

அகிலத்துக்கே தமிழர் சேதி

அறமே அறமே என்று திளைத்தாய்

எத்துணை தலைமுறை மாறிய போதும்

எம்துணை யாக என்றும் நிலைத்தாய்

உனக்கு வணக்கம் தாயே – எம்மை

உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!”

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

 

–திருநெல்வேலியில் இருந்து

மணிராஜ்.