LOADING

Type to search

அரசியல்

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் மக்கள் விவேகமுள்ளவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

Share

விசாகன் எழுதும் இவ்வாரக் கட்டுரை

ஒரு பக்கத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் நடைபெற்று முடிந்து பதவியேற்பு வைபவம் நடைபெற்று முதல்வர் பதவியில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, இலங்கையில் உள்ள தமிழ் பேசும் அரசியல்வாதிகள் சில் தமிழினத்தின் மத்தியில் நிறைவேறாக் கனவுகளை விதைத்துவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு இவர்கள் கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றியது போன்று தொடர்ச்சியாக ஏமாற்றும் கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைக்க முயல்வதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை விட தமிழ் மக்கள் விவேகமுள்ளவர்களாக உள்ளனரென்பதையும் முதலில் அனைவரும் புரிந்து கொள்வோம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈட்டிய தனிப்பெரும்பான்மையுடனான பெருவெற்றியையடுத்து, அக்கட்சியின் தலைவரான மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்; இந்தியாவில் கொவிட் தொற்று மிகத் தீவிரமடைந்திருப்பதன் காரணமாக முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெறாமல், ஆளுநர் மாளிகையில் சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வருவதே வழமையாகும். ஆனாலும் அ.தி.மு.கவுக்குத் தலைமை வகித்த முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமை காரணமாக தி.மு.கவினால் சில காலம் எழுச்சி பெற முடியாதிருந்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து அ.தி.மு.க அணியின் வசமே தமிழகத்தின் ஆட்சி இருந்து வந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பாரிய ஆளுமை வெற்றிடமொன்று தோன்றியதாலும், அ.தி.மு.கவின் தலைமைக்கு அரசியல் மற்றும் நிர்வாகத் திறமையற்ற விவேகமற்றவர்கள் வந்து சேர்ந்ததாலும் அ.தி.மு.க சிதறுண்டு போனது. உட்கட்சிப் பூசல்கள் காரணமாக தமிழக மக்கள் மத்தியில் அ.தி.மு.க மீது வெறுப்பும், அவநம்பிக்கையும் உருவாகியதனால் அக்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியுற்றது.

அ.தி.மு.கவின் வீழ்ச்சி நிலைமை அவ்வாறிருக்கையில், தமிழக அரசியலில் மற்றொரு ஆளுமையாக திகழ்ந்து வந்தவரும், தி.மு.கவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் கட்சித் தலைமையைப் பொறுப்பேற்ற அவரது புதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை சரியான முறையில் புரிந்து கொண்டவராக நகர்வுகளை முன்னெடுத்ததன் பயனாக இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்துள்ளது.
தி.மு.கவைப் பொறுத்த வரை இன்றைய பெருவெற்றியானது நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாக ஈட்டியதாகும். இவ்வெற்றிக்காக ஸ்டாலின் கடந்து வந்த பாதை கரடுமுரடானது, நீண்டது. மத்தியில் பலம் வாய்ந்ததாகத் திகழும் ஆளும் பா.ஜ.கவின் வியூகங்களையும், கடும்போக்கு காய்நகர்த்தல்களையும் தாண்டி இந்த வெற்றியை ஈட்டியிருக்கின்றார் ஸ்டாலின் என்பதே உண்மை.

அதேசமயம், நீண்ட கால அரசியல் பின்னடைவுக்குப் பின்னர் தி.மு.க இப்போது மீண்டும் ஆட்சிபீடமேறியுள்ளது. தி.மு.கவின் சளைக்காக உழைப்பும், அ.தி.மு.கவின் உட்கட்சி முரண்பாடுகளால் உருவான பலவீனமுமே தமிழகத்தின் இன்றைய தேர்தல் முடிவுக்கான பின்னணிக் காரணங்களென்பது புலனாகின்றது. எவ்வாறாயினும் கடினமானதொரு காலகட்டத்தில் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் ஸ்டாலின்.

தமிழக அரசியல் நிலைமைகள் இவ்வாறிருக்கையில், ஸ்டாலினின் வெற்றி தொடர்பாக அவருக்கு உலகின் பல பாகங்களிலுமிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளன. விசேடமாக தமிழ் கூறும் உலகில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழர் அரசியல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகின்ற பாராட்டுகளும் இவற்றில் அடங்குகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளே பெருமளவில் ஸ்டாலினுக்கு தமது வாழ்த்துகளை அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் வெறுமனே வாழ்த்துகளை மாத்திரம் அனுப்பி வைப்பதில் தவறேதும் கிடையாது. வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதே அரசியல் நாகரிகமும், பண்பும் ஆகும். ஆனால் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் மற்றொரு விடயத்தையும் குறிப்பிடுவதைத்தான் அபத்தமானதாக கருத வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வென்றெடுத்து தருவாரென்ற தோரணையில் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் சிலர் மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கைகளை விதைக்க முற்படுவதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலாகட்டும், இல்லையேல் தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலாகட்டும்… வடக்கு, கிழக்கு தமிழர்கள் மத்தியில் சாத்தியமற்ற வீணான நம்பிக்கைகளை விதைப்பதே தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு வாடிக்கையாகி போய் விட்டது.

இலங்கையில் நடைபெறுகின்ற ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழினத்தின் மத்தியில் வடக்கு_கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்றெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் மாயைகளை காண்பிப்பது போன்று, இந்தியத் தேர்தல்களின் முடிவுகளின் பின்னரும் போலி நம்பிக்கைகளை ஏற்படுத்த முற்படுவது ஏமாற்று வித்தையே தவிர வேறொன்றுமில்லை. இன்று ஸ்டாலினின் வெற்றி குறித்தும் போலி நம்பிக்கைகளே ஊட்டப்படுகின்றன.

இலங்கை விவகாரத்தில் இணக்கப்பாடான அரசியல் தீர்வு ஒன்றுக்காக இந்திய மத்திய அரசையோ அன்றி தமிழக அரசையோ நம்பியிருப்பது விவேகமற்றதென்பதை வரலாறு நன்றாகவே புலப்படுத்தியுள்ளது. உள்நாட்டு இனமுரண்பாட்டுக்கான தீர்வில் மற்றொரு நாட்டின் ஆதரவையும், உதவியையும் நாடுவது பொருத்தமானதல்லவென்பதே நாம் கற்றுக் கொண்ட பாடம். உள்நாட்டு இணக்கப்பாடுகளின் மூலமே எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வு காண முடியுமென்பதே யதார்த்தமாகும். இலங்கையில் குறிப்பாக மாவை சேனாதிராஜா, சிவஞானம் ஸ்ரீதரன், மனோ கணேசன், இராதாகிருஸ்ணன் போன்றவர்கள் இந்த ஏமாற்று வேலைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளார்கள்.

இந்த நால்வரில் மலையக மக்கள் முன்னணியை தன் வசப்படுத்தியுள்ள அவர் கூட ஒரு ஏமாற்று அரசியல் செய்யும் மலையக அரசியல்வாதி. முhவை சேனாதிராஜா முன்னைய ஆட்சியாளர்களோடு கூட்டுச் சேர்ந்து அவர்களுக்கு ‘விலை’ போயிருந்து, பொருள் சேர்த்து வைத்த பின்னர் தற்போது ‘ஞானம்’ வந்தது போன்று அறிக்கைகள் விடுகின்றார். இவற்றைப் படித்து மக்கள் ஏமாந்து விடமாட்டார்கள் என்பதே உண்மை.