‘குட்டி’ நாடு ஈன்ற ‘குட்டி’யொன்றை தத்தெடுத்துள்ள தந்திரம் மிக்க தேசம் ஒன்று
Share
கதிரோட்டம் 21-05-2021
இந்தப் பக்கத்தில் இலங்கை நாட்டை மாங்கனித் தீவு என்று முன்னர் பல தடவைகள் குறிப்பிட்டு எழுதியிருந்தோம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால், மாங்கனியைப் போன்ற எப்போதும் இனிப்பான விடயங்களை அள்ளி வழங்கக் கூடிய வளங்கள் பல அங்கு இயற்கையாகவே தோன்றியுள்ள போதிலும் அங்கு கசப்பான அனுபவங்களைப் பெற்றவர்களே எண்ணிக்கையில் அதிகம் என்று சொல்லலாம்.
இலங்கை ஒரு சிறிய நாடு என்ற காரணத்தாலும் அதனை ‘மாங்கனித் தீவு’ என்று சுட்டியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. இவ்வாறான ஒரு குட்டி நாட்டில் கடந்த சில தசாப்த்தங்களாக ‘பெரிய’ நாடுகளின் பார்வை பட்டுத் தெறிப்பது உலகத்தவர்களால் நன்கு உணரப்பட்ட ஒரு விடயமாகும். இவ்வாறான பெரிய நாடுகள் இந்த குட்டி நாட்டை குறி வைத்திருந்தன என்ற கணித்தவர்களுக்கு கால ஓட்டம் சரியான பதிலைச் சொல்லவில்லை.
ஆனால் மாசேதுங் என்ற அந்த தேசத்தின் சிற்பி தலைமை தாங்கி நடத்திய வீரம் செறிந்த போராட்டம், அவர்கள் வகுத்த சமூதாயக் கொள்கைகள், சமூக விடுதலைக்கான வழிமுறைகள், மக்களின் ஒன்றியமாக அந்த தேசம் வளர்ச்சியடைந்து வந்த வழிகளை படித்து உணர்ந்தவர்களுக்கு நன்கு புரியும்.
ஆனால் காலங்கள் கடந்து செல்ல முன்னவர்கள் வகுத்த பாதைகள் சிதைக்கப்பெற்று, அந்தத் தலைவர்களின் சிந்தனைகள் புதைக்கப்பட்டு தற்போது உலகத்தை அச்சுறுத்தும் ஒரு தந்திரமான தேசம் என்ற நாமத்தோடு வலம் வருகையில் இலங்கை என்னும் ‘குட்டி’யான நாட்டில் பிறந்த ஒரு ‘குட்டி’யை தத்தெடுத்து தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான அங்கீகாரம் சில நாட்களுக்கு முன்னர் இந்த குட்டி நாட்டின் அதிகாரம் மிக்க பீடமான பாராளுமன்றத்தில் கிட்டியுள்ளது. இனிமேல் அராஜகத்திற்கான கதவுகள் திறக்கப்பட்டதற்கு சமமான ஒரு தளம் அங்கே போடப்பட்டுள்ளது. கதவுகளின் திறவுகோலும் அவர்களிடம் தரப்பட்டுள்ளது.
இந்த ‘குட்டியை’ தத்தெடுக்கும் முயற்சிக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பலரும் தங்கள் எதிர்ப்புக்களை காட்டியிருந்தார்கள்.
ஒரு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, ஆளும் கட்சி அங்கத்தவர்கள் ஆதரித்து கையை உயர்த்துவதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் எழுப்பி கண்டிப்பதும் ஒரு நியதி என்பது போலவே வழமைக்கு மாறாக ஒன்றுமே இடம்பெறாத வகையில் அன்றைய வாக்கெடுப்பும் பாராளுமன்ற உரைகளும் இடம்பெற்றுள்ளன.
குட்டி நாடு ஈன்ற குட்டியை தத்துக் கொடுப்பதை ஆதரித்து உரையாற்றிய நீதி அமைச்சர் சட்டத்திற்கு எதிராகவா பேசப்போகின்றார?. வழமைபோல ஆதரவுக் குரல். ஏதோ ஆதாரங்களை கைகளில் வைத்துப் பேசுவது போன்று ‘எதிர்க்கட்சிகள் இந்த ‘குட்டி’யை தத்துக் கொடுக்கும் நிகழவிற்கு எதிர்ப்பைக் காட்டுவது முட்டாள் தனம் என்று கூட அவர் குறிப்பிட்டுள்ளார்
நீதி அமைச்சரான அவர் தீர விசாரிக்காமல் நீதி வழங்கும் நீதிபதி போல சட்டத்தை எதிர்த்து நின்ற எதிர்க்கட்சிகளைப் பார்த்து உரத்துச் சத்தமிட்டார். “இந்தச் சட்டம் எமது தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு திருப்புமுனை என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்” என்று கொக்கரித்தார்.
இன்னொரு பக்கத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான தமிழ்க்கட்சியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் புதிதாக ஒன்றையும் குறிப்பிடாமல் ‘புராணம்’ பாடினார்.
நீண்டக் காலமாக தமிழர்கள் இழந்த இறைமைக்காகப் போராடி வருகிறார்கள். தமிழர்களோடு இறைமைய பகிர்ந்து வாழ விரும்பாத சிங்களத் தலைவர்கள், மற்றொரு நாட்டுக்கு இந்நாட்டின் நிலத்தை விற்கிறார்கள். இதன் பாரதூரம் விரைவிலேயே வெளிப்படும்.
இந்தக் கூற்று நமது தமிழ் ஆசானுடையது. ஆனால் இவர்கள் முன்னைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் பேசும் சிறைக் கைதிகளுக்காகவும் அந்த தளத்தைப் பயன்படுத்தாமல் தங்கள் சொந்த நலம் கண்டு மகிழ்ந்தார்கள். பாராளுமன்றத்தில் மிகவும் மோசமான பிரேரணைகளுக்கே ஆதரவு வழங்கி அந்த பெரும்பான்மைக் கட்சியின் தலைவரைக் காப்பர்றறிய் அணியின் உறுப்பினரே இந்த ஆசான் ஆவார்.
இவ்வாறாக இந்த சட்ட மூலம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் சபையில் எழுந்து நின்ற பின்னர் எதிர்பார்க்கப்பட்ட வகையில் ‘குட்டி’ நாட்டில் பிறந்த அந்த குட்டியை’ தத்துக் கொடுக்கும் தந்திரம் மிகவும் தைரியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தந்திரமான நாடு ஏற்னெவே எண்ணற்றவர்களை கொண்டு சென்ற அந்த குட்டி நாட்டில் கும்மாளங்கள் இடம் பெற இனி மேல் கொண்டாட்டம்! கொண்டாட்டம்!!. ஆனால் அந்த ‘குட்டி’ நாடு கரைந்து போய், மக்கள் கரைசேர முடியாமல் தவிக்கும் காலத்தை எப்படித் தாங்குவார்கள் என்றே எம் இதயங்கள் கனக்கின்றன.