LOADING

Type to search

அரசியல்

ஊட்டியில் அத்தனைபேர்க்கும் ஸ்வெட்டர் வாங்கி கொடுத்தார் எம்.ஜி.ஆர். – “அன்பே வா” படபிடிப்பை நினைவு கூர்ந்த எஸ்.பி.முத்துராமன்‘

Share

அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார். ஒளிப்பதிவாளர் மாருதிராவ் ஏவி.எம்மின் முதல் கலர் படத்தை வண்ணக் கோலமாக்க நவீன உத்திகளை கையாண்டார். ஆர்ட் டைரக்டர் ஏ.கே.சேகர் பெரிய மாளிகைகளை செட் போடுவதற்காக ஸ்கெட்ச் வரைய ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர் அவர் களுக்கான காஸ்ட்யூம்களை எம்.ஜி.நாயு டும், சரோஜாதேவிக்கான மாடர்ன் உடை களைத் தைப்பதற்காக காஸ்ட்யூம் டிசைனர் கே.ஏ.ரஹ்மானும் பொறுப் பேற்றனர். இதற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த இந்தியா சில்க்ஸ் கடையைத் தேர்ந்தெடுத்தோம். வார நாட்களில் கூட்டமாக இருக்குமென்ப தால் ஞாயிறன்று கடையை திறக்கச் சொல்லி விலையுயர்ந்த, வண்ணமிகு துணிகளைத் தேர்தெடுத்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் இரண்டு மூன்று உடைகள் விதவிதமாக தைக்கப்பட்டன. அதிலிருந்து எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் ஒரு உடையை விருப்பத்துடன் தெரிவு செய்வார்கள். இப்படி ‘அன்பே வா’ படத்தின் முதல்கட்ட வேலைகள் தொடங்கின.

படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

அதை நான் அணிந்துகொண்டு நிற்கும் காட்சியை இங்கே புகைப்படத் தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.

நல்ல வெயில் இருந்தால்தான் கலர் படத்தை சிறப்பாக ஷூட் செய்ய முடியும். அப்போது ஸ்டீட் (Steed) பிலிம் எல்லாம் இல்லை. நாங்கள் சென்ற நேரம் ஊட்டியில் ஒரே மேக மூட்டம். இரண்டு நாட்கள் படப்பிடிப்பு இல்லை. தயாரிப்பாளர்களுக்கு முகத் தில் வாட்டம். அடுத்த நாட்களில் வெயில் வந்தது. இரண்டு நாட்கள் வேலையே இல்லாமல் இருந்ததால் அந்தக் காட்சிகளையும் சேர்த்து படமாக்கும் முயற்சியில் யூனிட் முழு கவனத்தையும் செலுத்தியது. தயாரிப்பாளரின் முக வாட்டம் நீங்கியது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் பாடி ஆடும் ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் அழகி என்பேன்’ என்ற பாடலை படமாக்கினோம். ஊட்டி குளிரைப் போல பாட்டும் ஆடலும் குளுகுளுவென்று இருந்தது.

ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.

முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.

சிம்லா படப்பிடிப்புக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தோம். மறுநாள் காலை 6 மணிக்கு விமானம். திடீரென கேமராமேன் மாருதிராவுக்கு குளிர் ஜுரம். அவரால் புறப்பட முடியாத நிலை. வேறு எந்த ஒளிப்பதிவாளரை அழைத்துச் செல்லலாம் என்று யோசித்தோம். அப்போது பிரபலமாக இருந்த ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட் – சுந்தரம் நினைவுக்கு வந்தார்கள். அவர்களில் பி.என்.சுந்தரத்தை சிம்லாவுக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதை எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் சொன்னபோது அவரும் ஏற்றுக்கொண்டார். சுந்தரத்தை ஒரு படப்பிடிப்பில் சந்தித்து விஷயத்தை சொன்னதும் அவர் பதறிவிட்டார். படத்தின் டைரக்டரிடம் போய் விவரங்களைச் சொல்லி வின்சென்ட் குழுவில் இருந்த ஒரு ஒளிப்பதிவாளரை தனக்கு பதில், தொடர்ந்து பணியாற்றும் பொறுப்பை ஒப்படைத்தார். எங்களிடம் வந்து,

‘‘வீட்டுக்கு போய் துணிமணிகளை எடுத்துக்கொண்டு, மனைவியிடம் சொல்லாவிட்டால் கூட தப்பித்துக் கொள்வேன். என் தாயிடம் சொல்லாமல் வரமுடியாது’’ என்று ஓடினார். இந்த ஏற்பாடுகளை செய்ய காலை 3 மணி ஆகிவிட்டது.

இந்த நிகழ்வு பி.என்.சுந்தரத்துக்கு திரில். அவரை விட எங்களுக்கு திரில்லோ திரில். இதெல்லாம் சினிமா எடுத்துப் பார்த்தால்தான் தெரியும்.