சளைக்காத மக்கள் சேவையில் ‘தமிழச்சி’ காமாட்சி.
Share
மலேசியாவின் ஒரே தமிழ்ப் பெண் சட்டமன்ற உறுப்பினர்
(நக்கீரன்)
கோலாலம்பூர், ஜூன் 03:
மலேசியாவில் 14 மாநிலங்கள் இருந்தாலும் ஒரேயொரு மாநிலத்தில் இருந்து ஒரேயொரு தமிழ்ப் பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றிருக்கிறார். அவர்தான் ‘தமிழச்சி’ காமாட்சி.
மலேசியாவின் மேற்கு மண்டலமாகவும் பெரிய மாநிலமாகவும் விளங்கும் பகாங்கு மாநிலத்தின் பெந்தோங் மாவட்டத்தில் உள்ள சபாய் என்னும் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் திருமதி காமாட்சி துரைராஜு, இரவு பகல் என பாராமல் எந்த நேரமும் தன் சேவைக் கரங்களை நீட்டுவதற்கு அணியமாக இருக்கிறார்.
அரசியல் ஈடுபாட்டுடன் தமிழ்ப் பற்றும் இலக்கிய தாகமும் மிக்க திருவாட்டி காமட்சியின் பெயருடன் தமிழச்சி என்னும் சொல்லும் ஒட்டிக் கொண்டதால், மலேசியவாழ் தமிழர்களிடத்தில் தமிழச்சி என்றால், அது காமாட்சி என்றாகிவிட்டது.
அரசியலில் நீண்ட பாரம்பரியம் இல்லாவிட்டாலும் ஜசெக என்னும் ஜனநாயக செயல் கட்சியில் இணைந்த மூன்று ஆண்டுகளிலேயே தேர்தல் களம் காணும் பொன்னான வாய்ப்பை கட்சி இவருக்கு வழங்கியது. அதற்கு ஏற்ப தன்னையும் தக அமைத்துக் கொண்டு சீனர்களின் மேலாண்மைமிக்க அந்தக் கட்சியில் ஒரு துடிப்புமிக்க அரசியல்வாதியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் சமூகத் தொண்டராகவும் தொடர்கிறார் திருமதி காமாட்சி.
அரசியலில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுமுன், மலேசியத் தமிழ் அறவாரியத்தின் சார்பில் மாத வெளியீடாக வந்துகொண்டிருந்த செம்பருத்தி இதழ்வழி தமிழ்ப் பணியும் சமுதாயப் பணியும் ஆற்றி வந்தவர் காமாட்சி.
துன் மகாதீர் முதல் முறை பிரதமராக இருந்த காலத்தில், நாட்டில் உள்ள தேசிய(மலாய்ப்) பள்ளிகள், தமிழ், சீனப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப பாடசாலைகளிலும் கணித, அறிவியல் பாடங்கள் ஆங்கில மொழியில்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு அதை நிறைவேற்றுவதற்கான காரியமெல்லாம் மளமளவென்று நடைபெற்றன.
புத்தாயிரத்தாம் ஆண்டு தொடங்கிய நேரத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. அவ்வேளையில், தமிழ் மற்றும் சீன சமுதாயங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், மொழி ஆர்வலர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த இரு முக்கியப் பாடங்களும் தாய் மொழிவழியேதான் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதை பாரிய அளவில் தேசிய மட்டத்தில் முன்னெடுத்தனர்.
தேசிய முன்னணி ஆட்சியில் இணைந்திருந்த மலேசிய இந்தியர் காங்கிரஸ்(மஇகா) கட்சியும் அதன் அப்போதைய தலைவர் துன் ச.சாமிவேலுவும் இந்த விடயத்தில் மகாதீருடன் அணிகோத்தனர்.
அந்தக் கட்டத்தில் செம்பருத்தி மாத இதழ் மூலம், அறிவியல்-கணிதப் பாடங்கள் தாய்மொழியில்தான் படிப்பிக்கப்பட வேண்டும் என்று பலவகையாலும் அழுத்தமான சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், திருமதி காமாட்சியும் அதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.
தமிழ்ப் பற்று, இனப்பற்றுடன் சேவை மனப்பான்மையும் இணைந்திருந்த காமாட்சிக்கு, இயல்பாகவே அரசியல் எண்ணம் துளிர்விட்டதில் வியப்பில்லை. அவர் அரசியலில் இணைந்த அடுத்த ஆண்டில் 2007 நவம்பர் 25-ஆம் நாள் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சி, இலண்டன், சென்னை வரையெல்லாம் பிரதிபலித்தது.
மலேசிய அரசியலில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில் ஆழிப் பேரலை ஏற்பட்ட அளவிற்கு அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. 60 ஆண்டு சுதந்திர மலேசியாவில் முதல் முறையாக ஐந்து மாநிலங்களை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது. இதற்கெல்லாம் ஹிண்ட்ராப் பேரணிதான் காரணம். ஆனாலும், மேற்கு மாநிலமான பகாங்கில் தேசிய முன்னணியே ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
அந்தத் தேர்தலில், தமிழ்ப் பெண்ணுக்கு வாய்ப்பு என்னும் அடிப்படையில் சபாய் தொகுதியில் போட்டியிட ஜசெக கட்சியில் வாய்ப்பு கிடைத்த காமாட்சி, சொற்ப வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிக்கோட்டை கோட்டைவிட்டார். ஆனாலும், அடுத்தத்(2013) தேர்தலில் வென்று மக்கள் பணி ஆற்றிய காமாட்சி, அதற்கு அடுத்த முறையும் வென்று தற்பொழுது இரண்டாவது தவணையாக சமூக வெளியிலும் அரசியல் தளத்திலும் களமாடி வருகிறார்.
சபாய் சட்டமன்றத் தொகுதியில் மலாய் வாக்காளர்கள் அதிகமாக இருந்தாலும் சீன வாக்காளர்களும் ஏறக்குறைய அவர்களுக்கு இணையாக 37 விழுக்காட்டளவில் உள்ளனர். இந்திய(தமிழ்) வாக்காளர்கள் 21 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கின்ற சபாய் வட்டாரம், சற்று பின் தங்கிய பகுதிதான் என்றாலும் நடுத்தர மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
அத்துடன் தோட்டப்புறங்களும் நிறைந்த இந்தத் தொகுதியில் இனம், மொழி என பாராமல் மலாயர், சீனர், இந்தியர், பூர்வ குடியினர் என்றெல்லாம அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி, மருத்துவம், சமூக நலம் சார்ந்து இரவு பகல் என பாராமால் எந்த நேரத்தில் அழைத்தாலும் கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்த்து சம்பந்தப்பட்ட இடத்தில் அடுத்த அரை மணி நேரத்தில் காணப்படும் காமாட்சியை பொதுவாக அனைத்து மக்களுக்கும் பிடித்திருக்கிறது.
கோலாலம்பூரில் எந்த இடத்தில் இலக்கிய நிகழ்ச்சி, நூல் வெளியீட்டு விழா நடைபெற்றாலும் காமாட்சியின் காட்சி அங்கேத் தென்படும். மொழி-இனம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அரசியல் வேறுபாட்டை அடியோடு ஒதுக்கி வைக்கும் பண்பு நலம் நிறைந்த காமாட்சி வரும் பொதுத் தேர்தலிலும் களம் காண்பாரா என்பது அப்போது தெரியும் என்றாலும், களமிறங்கும் நம்பிக்கையில் காரியமாற்றி வருகிறார் திருமதி காமாட்சி.
அண்மையில் தமிழ் மலர் நாளேட்டின் சார்பிலும் அண்ணல் அம்பேத்கார் இயக்க ஆதரவிலும் தலைநகரில் சுதந்திர சதுக்கத்தை ஒட்டியுள்ள சிலாங்கூர் ரோயல் கிளப்’பில் சட்ட மேதை அம்பேத்கார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறப்பாக கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் திருவாட்டி காமாட்சியும் கலந்து கொண்டார்.
அதில் அம்பேத்கரைப் பற்றிய அரிய செய்திகளை அன்வார் தன்னுரையில் குறிப்பிட்டார். பொதுவாக அரசியல் நாட்டமும் சேவை மனப்பான்மையும் மிகுந்திட்ட தமிழச்சி காமாட்சி, சற்றுமுன்னர்கூட, கொரோனா பாதிப்பினால் நாட்டில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நடைமுறையில் இருக்கும் இந்த நேரத்தில், தோட்டவாசிகளிடம் காய்கறிகளை சேமித்து வந்து அவற்றை நெகிழிப் பைகளில் பகிர்ந்து கட்டி, தன் வீட்டு முகப்பிடத்தில் வைத்து தேவையான அன்பர்கள் வந்து எடுத்துச் செல்லும்படி புலனத்தில் தகவல் அனுப்பிவிட்டு, அதன்படி வருகின்ற தன் தொகுதி மக்களை வரவேற்று காய்கறிப் பையை வழங்கி வருகிறார்.
கோலாலம்பூரில் அட்டியின்றி சேலையில் தென்படும் அரசியல் தலைவர்களில் ஒருவரான தமிழச்சி காமாட்சியின் குடும்பம் அளவானது. கணவர் பாலச்சந்திரன் செல்வரத்தினம், மகள் யாழினி வினோஷா, மகன் அறிவன் வினோதன், தாயார் மாரியம்மாள் ஆகியோர் கொண்ட குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் காமாட்சியின் பொது வாழ்க்கை தொடர்கிறது. அவர்களுக்கு கனடாவின் உதயன் இணைய இதழ் மற்றும் பருவ இதழ் சார்பில் இன்னுங்குறிப்பாக அதன் நிருவாக தலைமை ஆசிரியர் அண்ணன் திரு. என்.லோகேந்திரலிங்கம் சார்பில் டொரொண்டோ நகரில் இருந்து வாழ்த்துகள்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24