LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்.) தேர்வும் தமிழ்க் கல்வி சரிவும்

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், ஜூன் 10:

பள்ளிக் கல்விக்கு விடை கொடுத்து, உயர்க்கல்விக்காக கல்லூரியையோ பல்கலைக்கழகத்தையோ நாடும் அதேவேளையில் மாணவர்கள் விடலைப் பருவத்தைக் கடந்து இளைஞர் என்னும் தகுதியை எட்டுவதும் நடைபெறும்.

மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்.) தேர்வில் அமர்ந்து அதற்கான முடிவை கையில் பெறுவதுடன் பள்ளி வாழ்க்கை நிறைவு பெறும்.

ஏழு வயதில் ஆரம்ப பாடசாலையில் சேர்ந்து, அங்கே ஆறு ஆண்டுகள் பயின்றபின் இடைநிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கற்றபின் எழுதும் இந்த எஸ்பிஎம் தேர்வு 2020-ஆம் ஆண்டிற்கான முடிவை மலேசியத் தேர்வு வாரியம் ஜூன் 10-ஆம் நாள் வெளியிட்டது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் பொதுவாக முன்னேற்றம் என்று சொல்லப்பட்டாலும், இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை எடுப்பதும் தேர்ச்சி பெறுவதும் அண்மை ஆண்டுகளாக சரிந்து வருகின்ற நிலையில், இது குறித்து பேராக் மாநிலத்தில் தமிழ்ப் பயிர் வளர்க்கும் ஈப்போ முத்தழிழ் பாவலர் மன்றத்தின் தலைவரும் உலகத் தமிழ் கவிஞர்ப் பேரவையின் தலைவருமான காவல்துறை முன்னாள் அதிகாரியுமான முனைவர் அருள். ஆறுமுகம் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன் தொடர்பில், அவர் ஒரு காணொளியையும் பகிர்ந்திருந்தார்.

ஐயா அருள். ஆறுமுகனாரைப் போன்றே, இன்னும் ஏராளமான தமிழ்ப் பற்றாளர்களும் பொது அமைப்பினரும் மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் தமிழ், தமிழிலக்கியப் பாடங்களை தேர்வுப் பாடமாக எடுப்பதும் பலவித சவால்களை எதிர்கொண்டு அப்பாடங்களைப் படிக்கும் மாணவர்களிடையே தேர்ச்சி விகிதமும் குறைந்து வருவதைப் பற்றி மிகவும் வருத்தமும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, பேராக் மாநிலம் தஞ்சோங் மாலிம் என்னும் பழம்பட்டினத்தில் அமைந்துள்ள ‘உப்சி’ கல்வியியல் பல்கலைக்கழக தமிழ்ப் பிரிவின் தலைவரும் விரிவுரையாளருமான பேராசிரியர் முனைவர் அ.மனோண்மணி தேவி, தன் கருத்தை சமூக நோக்குடன் கீழ்க்கண்டவாறு பதிவு செய்தார்.

மலேசியத் திருநாட்டில் தமிழும் தமிழிலக்கியமும் அரசு இடைநிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும் தொடக்கநிலையில் தமிழ்க்கல்வி கற்ற மாணவர்கள் பலரும் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் தமிழ்மொழிப் பாடத்தையும் தமிழிலக்கியப் பாடத்தையும் அரசு தேர்வுகளில் ஒரு பாடமாக எடுத்துப் பயில்வதை அதிகம் விரும்புவதில்லை. விரும்புவோருக்கோ வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள.

பல இடைநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை. தமிழாசிரியர் பணியில் இருக்கும் பள்ளிகளில், பெற்றோரே தங்கள் பிள்ளைகள் தமிழ்மொழிப் பாடத்தை அரசு தேர்வுகளில் எடுப்பதைத் தடுக்கும் நிலையும் உண்டு என்பது கசக்கும் உண்மை. சில பள்ளிகளில் தமிழாசிரியர்கள் வாரம் ஒருமுறை வேறு பள்ளிகளிலிருந்து வந்து கற்பிக்கும் நிலையும் உண்டு. இப்படிப் பற்பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், தமிழின் மீது தீராப் பற்றுக்கொண்ட பெற்றோர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகள் அரசு தேர்வில் தமிழும் தமிழிலக்கியமும் எடுப்பதை ஊக்குவித்து வருகின்றனர்.

இதனால், நாளுக்கு நாள் அரசு தேர்வில் தமிழ்மொழியைத் தெரிவு செய்து படிக்கும் மாணவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றது. இந்நிலைக்குத் தீர்வு ஒன்று உண்டென்றால், தமிழ்மொழியையும் தமிழிலக்கியத்தையும் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அத்தோடு, எல்லா இடைநிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், முழுநேர ஆசிரியராகப் பணியில் அமர்த்தப்படவேண்டும். இவ்வாறு செய்வதன்வழி, தமிழும் தமிழிலக்கியமும் பாடவேளையில் கற்பிக்கப்படும் நிலை ஏற்படும். இச்செயல்பாடு, பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என்பதோடு மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும் அதன்வழி தேர்ச்சி விகித உயர்வுக்கும் அது வழிவகுக்கும் என்றார் பேராசிரியர் மனோன்மணி.

இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.