LOADING

Type to search

மலேசிய அரசியல்

2020 எஸ்பிஎம் தேர்வு எழுதிய அனைவருக்கும் எம்ஏபி கட்சி வாழ்த்து

Share

கோலாலம்பூர், ஜூன் 10:

மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) 2020 தேர்வு எழுதிய அனைவருக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அதன் தேசியப் பொருளாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

மலேசிய வரலாற்றில் எஸ்பிஎம் தேர்வு முடிவை முதன் முதலாக இணையம் வழி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமையை கொரோனா நச்சில் ஏற்படுத்திவிட்டது. இதே நச்சில் பரவல் காரணமாக கடந்த ஆண்டு இரண்டு முறை ஒத்துவைக்கப்பட்டு இவ்வாண்டு தொடக்கத்தில் நடத்தப் பட்ட இந்தத் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. மலேசிய மாணவர்-களின் கல்விப் பயணத்தில் எஸ்பிஎம் தேர்வு ஒரு முக்கியமான கட்டமாகும்.

2020 எஸ்பிஎம் தேர்வில் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்ற 9411 மாணவர்கள் உட்பட வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை, இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பை வழங்கி சம்பந்தப்பட்டவர்களின் கல்விப் பயணத்திற்கு துணை நிற்கும்படி தேசியக் கூட்டணி அரசை எம்ஏபி கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மெட்ரிகுலேஷன் கல்வியைத் தவிர, மலேசிய உயர்க்கல்வி சான்றிதழ் என்னும் எஸ்டிபிஎம் கல்வி மூலமாகவும் மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடரக் கூடும். இவ்வாறெல்லாம் கல்வியைத் தொடர முடியாத அளவிற்கு குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மனம் சோர்ந்துவிடாமல், தொழில் கல்வியில் சேர்ந்து தங்களை வளப்படுத்திக் கொள்ளலாம்.

நாடு தற்பொழுது 4-ஆவது தொழில் புரட்சியில் அக்கறைக் கொண்டிருப்பதால், தொழில் கல்வி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் முன்னுரிமை கிடைக்கக்கூடும். இன்று ஜூன் 10-இல் வெளியான 2020 எஸ்பிஎம் தேர்வு முடிவில் நாடு முழுவதிலும் 4416 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை.

இவர்களில் மீண்டும் தேர்வில் அமர விரும்பாத மாணவர்கள், தத்தம் இலக்கு அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் தாங்கள் விரும்பும் ஏதாவது தொழில் சம்பந்தமான திறன் கல்வியைப் பெற முனைப்பு காட்டலாம். இதன் தொடர்பில் வழிகாட்ட எம்எபி கட்சியும் தயாராக இருக்கிறது என்று எம்ஏபி சிலாங்கூர் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவருமான மணிமாறன் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.