LOADING

Type to search

கதிரோட்டடம்

விரிவடையும் வெறுப்புணர்வு கனடாவின் கனிவையும் விழுங்கிடுமோ?

Share

11-06-2021   கதிரோட்டம்

கனடா என்னும் இயற்கை வளங்கள் நிறைந்திருந்த தேசத்தில் மனித வளம் குன்றியிருந்த ஒரு காலத்தில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக வெளிநாட்டவர்களை வரவேற்கும் அரசியல் நெறி அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பல மேற்குலக நாடுகளிலிருந்து கனடாவிற்கு மக்கள் சிறிய எண்ணிக்கையில் குடியேறத் தொடங்கினார்கள்.

ஆனால் நாளடைவில் மனித வளத்தோடு தொழில் சார்ந்த நிபுணத்துவம், அறிவியல், ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் கனடாவின் கதவுகள் திறந்தேயிருந்தன. இவ்வாறான அரசியல் நெறியானது நேர்மையாகவும் நிதானமாகவும் கடைப்பிடிக்கப்பெற்றதனால் கனடா வளர்ச்சி கண்டது. புதியவர்களின் வருகையால் புத்துணர்வு பெற்றுது போன்று இந்த கனிவான தேசம் எழுந்து நிற்கத் தொடங்கியது.

தொடர்ச்சியாக இலங்கை இந்தியா, சோமாலியா, மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் தோன்றி இன முரண்பாடுகள், போராட்டங்கள் ஆகியவற்றால் அங்கிருந்து வெளியேறிய இலட்சக் கணக்கானவர்களை கனடா ‘அரசியல் அகதிகள்’ என்ற அங்கமாக ஏற்றுக்கொண்டு அவ்வாறு வந்தவர்களுக்கு ‘புதுவாழ்வு’வழங்கியது.

இவ்வாறாக, வந்தாரை வரவேற்கும் நாடாக இருந்து உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் அனைவரையும், அவர்களது மதம், இனம், பேசுகின்ற மொழி, நிறம், கலாச்சாரம், மத வழிபாடு, பண்பாடு போன்றவற்றை தடைக் கற்களாகப் பார்க்காமல், வரவேற்று உறைவிடம் வழங்கி உதவிய கனடாவில் இன்று உலகெங்கும் பின்பற்றப்படுகின்ற அனைத்து மதங்களின் ஆன்மிக அடையாளங்களும் எப்போதும் ஒளிர்ந்த கொண்டே இருக்கின்றன. அனைத்து மதங்களுக்கு சுதந்திரத்தை வழங்கி பார்க்கும் இடமெலலாம் பல்வேறு மதங்களின் வழிபாட்டுச் சின்னங்கள் எழுந்து நின்று தர்மத்தையும் சமாதானத்தையும் போதித்த வண்ணம் உள்ளன.

இவ்வாறாக உலகின் பார்வை படும் அளவிற்கு ஒரு சுதந்திர பூமியாகவும் தர்மத்தின் விளைநிலமாகவும் விளங்கிய நாம் வாழும் கனடிய மண்ணில் ‘கரும்புள்ளிகள்’ தோன்றி அனைவர் மனங்களிலும் கலக்கத்தை ஏற்படுத்தி அமைதி குன்றிய நிலை காணப்படுகின்றதை நாம் அவதானிக்கலாம்.

பல வருடங்களாக, கரிய மேகங்கள் சூழ்ந்த காட்சியை நாம் கனிவு நிறைந்த இந்த புண்ணிய பூமியின் காண வேண்டிய தேவை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.

ஓவ்வொரு மதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. அதற்கென மரியாதை உண்டு, பெருமை உண்டு. அதனால் அந்த மதம் சார்ந்த மக்கள் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைந்து பின்னர் சமூக ரீதியாக வளர்ச்சியை எட்டுகின்றார்கள். இதனால் ஒரு குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது வெறுப்படைய வேண்டிய அவசியம் ஏனையோர் மத்தியில் தோன்ற வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் இந்த கனிவான கனடிய தேசத்தில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர் போன்றவை அதிகரித்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பலியெடுத்துள்ளது. ஒரு பாலகனை அனாதையாக்கி விட்டது.

இதனால் நாட்டின் பிரதமர் தொடக்கம் மாநகரத்தின் மேயர் வரை அனைத்து அரசியல் தலைவர்களின் கண்களிலும் கண்ணீர் மல்கி நிற்பதைக் காண்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் உயிர்களை இழந்து தவிக்கும் அந்த பாலகனுக்காகவும், அந்த குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களுக்கும் நாம் ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டியது எமது கடமை என்பதை உணர்வோம். அதற்காக தேவையான வழிகளில் நாம் இணைந்து நின்று எங்கள் கரங்களை அவர்களுக்காக நீட்டிடுவோம்.