இவ்வாரச் செய்திகளில் தொங்கி நிற்கும் கனடாவின் ஆதிப் பழங்குடி வம்சாவளிப் பெண்மணிகள் இருவர்
Share
09-07-2021 கதிரோட்டம்
கனடாவின் ஆதிப் பழங்குடி இனத்தின் முழு வரலாற்றையும் அறிந்து கொள்வதில் எத்தனை பேருக்கு ஆர்வம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கின்றது. இவ்வாறான ஒரு பழங்குடி இனத்தில் கூட பல பிரிவுகள் உள்ளதை அறிந்து கொண்ட போது ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரு பாதிக்கப்பட்ட இனத்தில் பிரிவுகள் தோன்றுவது என்பது அவர்களின் பலத்தை பலவீனமாக்கும் அல்லவா?
அண்மைக் காலத்தில், கனடாவில் இந்த ஆதிப் பழங்குடிகள் தொடர்பான பல செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அவையெல்லாம் அந்த இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் பட்டியல்களாகவே தெரிந்தன.
கடந்த ஐம்பது வருடங்களில் இந்த தேசத்திற்கு குடியேற்ற வாசிகளாக வந்தவர்களுக்கும் இந்த நாட்டில் பல நூறு வருடங்களாக வாழ்ந்து வரும் ஆதிப் பழங்குடி மக்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் கிட்டவில்லை. வந்தவர்கள் தங்களை தக்க வைப்பதற்காக போராடிக்கொண்டிருந்தார்கள், ஆனால் இங்கு இயற்கையோடு போராடி வாழ்ந்து வந்தவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்களோடு போராடிக் கொண்டிருந்தார்கள். இவைதான் நிச்சயமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் வட இலங்கையில் தாழ்ப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, தரிசு நிலங்களைக் கொடுத்து உப்புத் தண்ணீர் நிறைந்த கிணறுகளோடு அதில் சிரமப்பட்டு விவசாயம் செய்து வாழுங்கள் என்று கட்டாயப்படுத்தியது போன்று, கனடாவிலும் இந்த ஆதிப் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் எந்தவிதமான வளங்களும் அற்று காணப்பட, அந்த மக்களுக்கு அரச உதவிகளும் சிகரட் போன்ற வாழ்வதற்கு அவசியமற்ற பொருட்கள் தாராளமாக மலிவு விலைகளில் வழங்கப்பட்டன என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான சூழ்நிலையிலும் இந்த இனம் சார்ந்த பலர் கல்வியில் ஆர்வம் காட்டி முன்னேறியிருந்தார்கள் என்பது வெளிப்படுகின்றது. இடையில் கனடாவின் சில மாகாணங்களில் கிறிஸ்த்துவ தேவாலயங்கள் சார்ந்து நிறுவப்பட்ட ‘வதிவிடப் பாடசாலை’களிலும் அங்கு பலவந்தமாக தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட இளம் வயதுப் பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை நாம் தற்போது அறிந்து வருகின்றோம்.
எனினும் கனடாவில் ஆதிப் பழங்குடி வம்சாவளியினர் மீது ஒரு மறைமுகமான புறக்கணிப்பு பிரயோகிக்கப்பட்டது என்பது உண்மையானது என்றே நம்பக்கூடியதாக உள்ளது. இன்னொரு பக்கத்தில் தங்கள் இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகின்ற அரசும் அது சார்ந்த நிறுவனங்களும் அறிந்து கொள்ளும் வகையில் போராட வேண்டிய சமூகமாக கனடாவின் ஆதிப் பழங்குடியினரின் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்தது. அதற்காக அவர்கள் தங்கள் இனம் சார்ந்த பல அமைப்புக்களை தோற்றுவித்து அவர்களின் பலத்தைக் காட்ட வேண்டியிருந்தது.
இவ்வாறு கனடிய தேசத்தின் வரலாறுகளில், மறைக்கப்பட்ட பக்கங்களில் ஆதிப் பழங்குடியினர் தங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான நிலையில் இந்த வாரத்தில் முன்னெப்போதும் நிகழாத வகையில் மேற்படி ஆதிப் பழங்குடி வம்சாவளியைச் சார்ந்த இரண்டு பெண்மணிகளின் பெயர்கள் செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கனடாவின் ஆதிப் பழங்குடி வம்சாவளிப் பெண்மணியான மேரி சைமன் என்பவர் நாட்டின் ஆளுனர் நாயகமாக நேற்று முன்தினம் ஒட்டாவா மாநகரில் பதவியேற்றார். ஒரு வழக்கறிஞராகவும் இராஜதந்திரியாகவும் விளங்கிய இவருக்குரிய ‘ஆளுனர் நாயகம்’ நியமனத்தை பிரித்தானிய மகாராணியின் அனுமதியோடு, கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து மற்றுமொரு பெண்மணியான ஓரு முன்னாள் அமைச்சர் செய்திகளில் இடம்பெறுகின்றார். கனடாவின் முதல் பழங்குடி வம்சாவளியைச் சார்ந்த நீதி அமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற ஜோடி வில்சன்-ரெய்போல்ட் நேற்று வியாழக்கிழமை ஒரு பகிரங்க அறிவிப்பை விடுத்ததார். இவர் தற்போது ஒரு கட்சியையும் சாராது ஒரு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தற்போது கனடாவின் மத்திய பாராளுமன்றத்தை அலங்கரித்து வருகின்ற ஒருவர். இவருடைய அறிவிப்பின் படி அடுத்த பொதுத் தெர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற செய்தியை தனது தொகுதி வாக்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது உள்ள கனடாவின் லிபரல் அரசாங்கத்திற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மந்திரி சபையிலேயே ஜோடி வில்சன்-ரெய்போல்ட் என்னும் இவர் நீதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது தற்போதைய பிரதமரான ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களே பதவியிலிருந்தார்.
வில்சன்-ரெய்போல்ட் அவர்கள் நீதி அமைச்சராக இருந்த காலத்தில், கனடாவின் மொன்றியால் நகரைத் தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமான எஸ்.என்.சி-லாவலின் மீது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்வது தொடர்பான விடயத்தில் கனடியப் பிரதமர் அலுவலகத்துடன் மோத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏனென்றால் மேற்படி பொறியியல் நிறுவனம்; செய்த மோசடிகளை பிரதமர் அலுவலகம் அறிந்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் நீதி அமைச்சரான அவரது குற்றச்சாட்டாக இருந்தது. அரசாங்கத்தை ஏமாற்றும் வகையில் இயங்கிய அந்த பொறியியல் நிறுவனத்த்திற்கு பிரதமரும் அவரது அலுவலகமும் சாதகமாக விளங்கினார்கள் என்ற குற்றச்சாட்டை அப்போது அவர் துணிச்சலாக முன்வைத்தார்.
இதனால் நீதி அமைச்சராக இருந்த அவரின் பதவியை பிரதமர் பறித்தெடுக்க வேண்டிய தேவை வந்தது. எனவே ஜோடி வில்சன்-ரெய்போல்ட் என்னும் அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டியேற்பட்டது.
இந்து இரண்டு பெண்மணிகள் சார்ந்த விடயங்களை நாம் கவனத்துடன் நோக்கினால் சில வருடங்களுக்கு முன்னர் நீதி அமைச்சராக இருந்த ஒரு ஆதிப் பழங்குடி வம்சாவளி வந்த ஒரு பெண்மணியின் அமைச்சர் பதவியை பறித்தெடுத்த பிரதமரே சில நாட்களுக்கு முன்னர் மற்றுமொரு ஆதிப் பழங்குடி வம்சாவளி வந்த ஒரு பெண்மணிக்கு கனடாவின் “ஆளுனர் நாயகம்’ என்னும் மிக உயர்ந்த பதவியை வழங்கிவைத்தார்.
இந்த பதவி இவருக்கு வழங்கப்பெற்ற ஒரிரு நாட்களில் தற்போது சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் ஜோடி வில்சன்-ரெய்போல்ட் தான் அடுத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார். பதவிகளைப் பறிப்பதும் அளிப்பதும் கனடாவில் மட்டுமல் உலகெங்கும் அரசியலில் இடம்பெறு நிகழ்வுகளாக இருந்தாலும், கனடாவின் ஆதிப் பழங்குடி வம்சாவளிப் பெண்மணிகளுக்கும் இடம்பெற்றது, காலம் பதில் சொல்ல வேண்டியதொன்று என்று நாம் கருதுகின்றோம். ஏனென்றால் தர்மம் தோற்பதில்லை என்ற எழுதி வைத்த வரிகள் எமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன.