கனடா ஸ்காபுறோ நகரில் தமிழ் மக்களுக்கான ஒரு சமூக மையம் 32 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்படவுள்ளது
Share
** மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு – 14.3 மில்லியன் .மாகாண அரசின் நிதி ஒதுக்கீடு- 12 மில்லியன்: மிகுதி நிதி கனடிய சமூகம் திரட்டவேண்டியது.
** தமிழர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எமது அரசாங்கம் எப்போதும் தயாராகவுள்ளது- ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட்
** தமிழ்க் கனடியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் நாள் மிக அருகில்- ஹரி ஆனந்தசங்கர் எம். பி
** சவால்களை எதிர்கொள்ளும் சமூகமாக தமிழர் வெற்றிகளை ஈட்டி வருகின்றார்கள்- லோகன் கணபதி,மாகாண சபை உறுப்பினர்
** தமிழ்க் கனடியர்களின் வெற்றியானது அவர்களது கனவு மட்டுமல்ல, கடின உழைப்பிலும் தங்கியிருக்கின்றது- விஜேய் தணிகாசலம், மாகாண சபை உறுப்பினர்
** கனடாவின் மூன்று வகை அரசுகளும் இணைந்து தமிழ்க் கனடியர்களுக்கு தமிழர் சமூக மையத்தை பரிசளித்துள்ளன- கிறிஸ்ரினா பிரிலாண்ட்- கனடிய பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சரும்
** தமிழ் மொழியின் பண்டைய சிறப்புக்களை அறிந்து நான் வியப்படைந்தேன்- ஜோன் ரோரி- ரொறன்ரோ நகர பிதா
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடாவில் தமிழ் மக்களது நீண்ட நாள் கனவாகவும் பெரும் முயற்சியாகவும் நீண்ட காலமாக இருந்த ‘தமிழர் சமூக மையம் இன்னும் சில வருடங்களில் கம்பீரமாக எழுந்து நிற்கும் நாளை தமிழ் மக்கள் வரவேற்க காத்திருந்தார்கள். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 16ம் திகதி தமிழர் சமூக மையம் அமைவதற்கான உறுதியான முடிவுகள் எடுக்கப்பெற்று அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான அறிவிப்புக்களும் நேற்று வெளியிடப்பெற்றன.
அந்த அறிவிப்புக்களின் படி கனடாவின் மத்திய அரசின் நிதியாக 14.3 மில்லியன் டாலர்களும், ஒன்றாரியோ மாகாண அரசின் நிதியாக 12 மில்லியன் டாலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் உத்தியோக பூர்வமான முறையில் அறிவிக்கப்பெற்றது. அத்துடன் இந்த ‘தமிழர் சமூக மையம்’ அமைவதற்கான காணியை ரொறன்ரோ நகரசபை இலவசமாக வழங்கியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஸ்காபுறோ நகரில் தமிழர் சமூக மையம் அமையவுள்ள 311 ஸ்டெயின்ஸ் வீதி என்னும் விலாசத்தில் பரந்த காணியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
திருமதி கீர்த்தனா தமிழர் சமூக மையத்திற்காக அமைக்கப்பெற்ற குழுவின் சார்பாக முதலில் உரையாற்றினார்.
தமிழர் சமூக மையத்திற்காக தமிழ்மக்களால் நியமிக்கப்பெற்ற குழுவில் பத்துக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றார்கள். அவர்களின் கடின உழைப்பினால் தான் இவ்வளவு பெரும் நிதி எமது தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்துள்ளது என்று கீர்த்தனா தெரிவித்தார்.
தொடர்ந்து மூன்று வகையான அரசுகளின் சார்பில் பலர் உரையாற்றினார்கள்.
திருமதி ஃப்ரீலேண்ட், கனடாவின் துணை பிரதமரும் மத்திய நிதி அமைச்சரும், திரு பில் பிளேய்ர், பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகாலத் தயார்நிலைக்கான மத்திய அமைச்சர் – திருமதி மேரி எங் மத்திய சிறு வணிக ஏற்றுமதி மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் மத்திய அமைச்சர், திரு ஹரி ஆனந்தசங்கரி, முடியரசுக்கும் பூர்வகுடிகளுக்குமான உறவுகள் அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளரும், ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்.
திரு டக் ஃபோர்டு ஒன்ராறியோவின் முதல்வர் மற்றும் கிங்கா சுர்மா – ஒன்றாரியோவின் உட்கட்டுமான அமைச்சர், திரு விஜய் தணிகாசலம் – ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி மாகாண சபை உறுப்பினரும் ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளரும், திரு லோகன் கணபதி – மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதி மாகாண சபை உறுப்பினர், திரு ஜோண் டோரி – ரொரன்ரோ மாநகர முதல்வர். மற்றும் திருமதி ஜெனிபர் மெக்கெல்வி ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க் நகரசபை அங்கத்தவர் ஆகியோர் அங்கு சிறந்த உரைகளை ஆற்றினார்கள்.
அனைவரது உரைகளும் உண்மைத் தன்மை கொண்டவையாகவும் தமிழ் மக்கள் மீது கொண்ட நேசத்தையும் மரியாதையையும் பிரதிபலிப்பன ஆகவும் அமைந்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுக்காக அமையவுள்ள இந்த ‘தமிழர் சமூக மையத்திற்கு தேவையான மிகுதி நிதியை கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து திரட்டப்பட வேண்டும் என்பதும் இங்கு முக்கியமான ஒரு அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.