LOADING

Type to search

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி: பாரபட்சம், ஏற்றத்தாழ்வுகள், சமமற்ற சந்தோஷம்

Share

சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்

இன்றைய இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போதோ அல்லது இணய வாயிலாக வாசிக்கும்போதோ  உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்கியிருக்கும்.

உலகெங்குமுள்ள பல்துறை விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி தமக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஒன்றுகூடும் ஒரு திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். இப்போட்டியில் பங்கேற்பதே பெரிய கௌரவம் மற்றும் தனி நபருக்கு மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக  32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் என்று அழைக்கப்படுகின்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இவை இரண்டுக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆக மொத்தம் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் (ஐ ஓ சி) ஒரு பன்னாட்டு பெரு நிறுவனம் போன்று ஆண்டு முழுவதும் வேலை செய்கிறது.

இந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் என்று கூறப்படுவதே முரண்பாடான ஒன்றாகத் தோன்றுகிறது. ஏனென்றால் தென் துருவப் பகுதியில் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஜூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை குளிர்காலம். அதேபோன்று கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கும் போது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சற்று ஊடச்சத்து குறைந்த பிள்ளையாகவே இருக்கும். ஒலிம்பிக் வெற்றி, ஒலிம்பிக் வீரர் என்றெல்லாம் பேச்சு வரும் போது அது பெரும்பாலும் கோடைக்கால போட்டிகளைப் பற்றியே இருக்கும்.

இதுவரை நடைபெற்றுள்ள 31 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை ஒப்பிடும் போது டோக்கியோவில் நடைபெறும் 32 ஆவது பலவகைகளில் வித்தியாசமானது, தனித்துவமானது என்றே சொல்ல வேண்டும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் போனஸ்அயர்ஸில் நடைபெற்ற ஐ ஓ சியின் 125ஆவது கூட்டம் நடைபெற்றது. தொடர்ச்சியாக ஐ ஓ சியின் உயர்நிலைக் கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் ஆனால் இந்தக் கூட்டம் சற்று வித்தியாசமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதற்கான சூழல்களைக் கொண்டிருந்தது. 13 ஆண்டுகள் அந்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பெல்ஜியம் நாட்டின் யாக் ரக்கர் பதவிக் காலம் முடிந்து விடைபெறுகிறார். விளையாட்டு உலக நிர்வாகத்தின் மாமன்னர் பதவி என்று கருதப்படும் அந்தப் பதவிக்கு அடுத்து யார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உரையாற்ற எழுந்தார் யாக் ரக்கர். அது தலைவர் என்கிற வகையில் அவரது அதிகாரபூர்வமான கடைசி உரை.

அடுத்து யார், எங்கு, எப்படி, என்ன போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் காத்திருந்தன. எழுந்தார், வந்தார், பெற்றார், பிரித்தார், காட்டினார்…….உடனே ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் தொடங்கியது.

…………2020…….. டோக்கியோ………… என்று மூடப்பட்டிருந்த உரையிலிருந்த அந்தச் செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தினார்………. அரங்கத்தில் அமர்ந்திருந்த அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே உட்பட அந்நாட்டுக் குழுவினர் துள்ளிக் குதித்தனர். ஜப்பான் முழுவதும் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன….. இன்னும் ஏழு ஆண்டுகளில் பாருங்கள் எங்கள் வல்லமையை என்று ஜப்பானியர் பறைசாற்றினர்.

2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பல நாடுகள் விண்ணப்பித்திருந்தன. படிப்படியாக வடிகட்டப்பட்டு இறுதிப் போட்டிக்கு மூன்று நாடுகளின் நகரங்கள் தகுதி பெற்றன.

துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல், ஸ்பெயின் தலைநகர் மட்ரிட் மற்றும் ஜப்பானியத் தலைநகர்டோக்கியோ ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி. இதில் 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது. எனவே அது அந்த வாய்ப்பு எமக்கே வேண்டும் என்பதில் துருக்கி விடாப்பிடியாகவும் பல நாடுகளின் ஆதரவையும் கோரி வந்தது. ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயினுக்கு ஆதரவாக நின்றன. ஜப்பானுக்கு பரந்துபட்ட ஆதரவு இருந்தது.

போட்டிக்கு முன்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. முதல் சுற்று: இஸ்தான்புல்:26/ டோக்கியோ:42/மட்ரிட்:26. இதில் இரு நகரங்கள் தலா 26 வாக்குகளைப் பெற்றிருந்தால் ஒருவரை அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்க மீண்டும் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இஸ்தான்புல்:49/மட்ரிட்:45. இதன் காரணமாக மட்ரிட் வாய்ப்பை இழந்தது.

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இஸ்தான்புல்லுக்கு 36 வாக்குகளும் டோக்கியோவிற்கு 60 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து 56 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஜப்பான் பெற்றது.

ஆனால் மிகவும் ஆர்வமாக பணிகளைத் துவக்கி முன்னெடுத்து வந்த ஜப்பானுக்கு- உலகைத் தொடர்ந்து ஆட்டிப்படைக்கும் கொரோனோ மிகப்பெரும் சவாலாக அமைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய போட்டி இந்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் ஜப்பானில் கொரோனா பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. சற்று தணிந்தது போலிருந்த தொற்றின் தாக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி விளையாட்டு வீரர்கள் டோக்கியோ செல்லும் ஆசையைக் கைவிட்டனர்.

இதுவரை இல்லாத வகையில்,  ரசிகர்கள் இல்லாத அரங்கத்தில் துவக்க விழா நடைபெறவுள்ளது. டோக்கியோ நகருக்குள் இருக்கும் எந்த விளையாட்டு அரங்கிலும் ரசிகர்களை அனுமதிக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை. நகருக்கு வெளியே உள்ள அரங்குகளில் சில கட்டுப்பாடுகளுக்கு அமைய குறைந்தளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் அதன் துவக்க விழா. ஒலிம்பிக் ஜோதி எப்படி ஏற்றப்படும் என்பது கடைசி வரையில் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.  அதைக் காணவே உலகெங்கும் கோடிக் கணக்கான ரசிகர்கள் கண்விழித்துக் காத்திருப்பார்கள். அதில் கலை அம்சமும் தொழில்நுட்பமும் இணைந்து ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

சினிமா என்றால் ஹாலிவுட், விளையாட்டு என்றால் ஒலிம்பிக் என்பதுதான் உச்சக்கட்ட அடையாளம் மற்றும் சாதனை. ஆனால் இந்த இரண்டிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏராளம் உண்டு. காலங்காலமாக ஒலிம்பிக் போட்டிகள் செல்வந்த நாடுகள் மற்றும் சற்று குறைந்த செல்வந்த நாடுகளுக்கு மட்டுமே ஏகபோக உரிமையாக இருந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை போட்டியை நடத்தியுள்ளன. இதில் லண்டன் மாநகர் மூன்று முறை நடத்தியுள்ளது, 2024 ஆம் ஆண்டில் பாரிஸும் அந்தப் பெருமையைப் பெறும். அமெரிக்காவில் அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகர்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுள்ளது. 2028ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக இப்போட்டி அந்நகருக்குச் செல்கிறது.

உலகெங்கும் தொடர்ச்சியாக கேட்கப்படும் ஒரு கேள்வி-ஒலிம்பிக் போட்டிகள் ஏன் பரந்துபட்ட அளவில் பயணிப்பதில்லை, ஏன் குறிப்பிட்ட சில நாடுகளின் ஆளுமையிலேயே உள்ளது? ஆனால் வழக்கம் போல் மௌனமே பதிலாகவுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் 17 முறை ஐரோப்பாவிலும், 8 முறை அமெரிக்காஸிலும், 4 முறை ஆசியாவிலும் நடைபெற்றுள்ள போட்டிகள் இதுவரை ஆப்ரிக்காவில் நடத்தப்படவில்லை என்பது கசப்பான உண்மை. மிகவும் வேதனையான விஷயமும் கூட. தடகளப் போட்டிகள், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச் சண்டை, கால்பந்து போன்ற விளையாட்டை எடுத்துக் கொண்டால் அதில் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் அல்லது ஆப்ரிக்க வம்சாவளி வீரர்களே ஆளுமை செலுத்துகின்றனர்.

ஜமைக்கா, கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, கியூபா, பஹாமாஸ் என்று எவ்வளவோ சிறந்த நாடுகளிலிருந்து ஏராளமான  விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக ஆளுமை செலுத்துகின்றனர். உசைன் போல்ட், ஷெல்லி ஆன் பிரேசர், அசாஃபா பவல், யொஹான் பிளேக், ஆண்டனி நெஸ்ட், வில்சன் கிப்லகாட், டிபாபா சகோதரிகள் எனு பட்டியல் நீளும்.

உலகத்தின் எதிர்காலம் ஆப்ரிக்காவில்தான் தங்கியுள்ளது என்று மேடைதோறும் முழங்கும் தலைவர்கள் ஏன் அந்தக் கண்டத்தின் ஒரு நாட்டுக்கு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை வழங்கக் கூடாது?

ஆப்ரிக்க நாடுகளுக்கு அந்தப் போட்டியை நடத்தும் நிதி வசதி இல்லையென்று வெள்ளைக்கார நாடுகள் சொல்லுமானால், அந்த நிதியுதவியை அவர்களுக்கு அளித்து உதவலாமே? அதற்கு ஏன் யாரும் தயாராக இல்லை. விளையாட்டின் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்றால் அதைச் செய்ய செல்வந்த நடுகள் தயங்க வேண்டிய அவசியம் இல்லை.

தென் ஆப்ரிக்கா, கென்யா, எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, போன்ற நாடுகளுக்கு அந்த வாய்ப்பை வழங்கினால் அவை சிறப்பாக அதை நடத்தும். தனியொரு நாடால் முடியவில்லை என்றால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, எத்தியோப்பியா, ருவாண்டா, புரூண்டி போன்ற நாடுகள் இணைந்து ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியும்.

மேலாதிக்க மனப்பான்மை, ஆண்டான் அடிமை நிலைப்பாடு, நிற மற்றும் இனத்துவேஷம் போன்றவை இன்னும் முற்றாக அழியவில்லை என்பதற்கு ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் ஆப்ரிக்காவுக்குச் செல்லவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படலாம். ஆப்ரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து தமது நாடுகளுக்கு வந்து திறமையை வெளிப்படுத்தும் கறுப்பின விளையாட்டு வீரர்களை ஏற்று அணைத்துக் கொள்ளும் நாடுகள் அந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளுக்கு ஒலிம்பிக் போட்டியைக் கொண்டு செல்வதில் தயக்கம் காட்டுவதில் நியாயம் இல்லை.

மறுபுறம் ஒரு வாதத்திற்காக-ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு ஆப்ரிக்காவுக்கு அளிக்கப்படாததை எதிர்த்து, ஆப்ரிக்க வீரர்கள் ஒலிம்பிக் போட்டியையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தால் என்னவாகும்? உலகின் மிகச் சிறந்த பல விளையாட்டு வீரர்களைக் கொண்ட ஆப்ரிக்காவுக்கு இதுவரை ஒலிம்பிக் போட்டிகள் செல்லாமல் இருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதுவரை காலமும் ஆப்ரிக்க நாட்டினர் ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றுள்ள பதக்கங்களின் அடிப்படையில் பார்த்தாலே அதை நடத்துவதற்கான தகுதிகள் ஆப்ரிக்காவிலுள்ள மக்கள் மற்றும் நாடுகளுக்கு உள்ளன என்பது புலப்படும்.

2032 ஆம் ஆண்டு போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த போட்டி 2036ஆம் ஆண்டிலாவது ஆப்ரிக்க நாடொன்றுக்கு செல்ல வேண்டும்.

பணமுள்ளவர்கள் மட்டுமே போட்டியை நடத்த வேண்டுமா? விளையாட்டிலும் இருப்பவர்கள்-இல்லாதவர்கள் பாகுபாடு ஏன்? இதை மாற்ற முடியாதா? அது மாற்றப்பட வேண்டும்.