கனடாவின் பருவ – இணைய இதழ் உதயன் படைப்பில் தமிழும் சைவமும் கமழ்ந்த மலேசிய மாணவர் குரல் 2021 (2)
Share
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை 30:
பாடசாலையை மறக்கவும் வீட்டையே கல்விச்சாலையாக மாற்றவுமான சூழலை உலக மாணவர்களைப் போலவே மலேசிய மாணவர்களும் எதிர்-கொண்டிருக்கின்றனர். இதற்கான அடிப்படைக் காரணம் கொரோனாவின் பெருந்தாக்கம்.
இந்த நிலையில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மன இறுக்கத்தைப் போக்கவும் அவர்களின் பேச்சுக் கலையை வெளிக்கொணரவும் அதன்வழி தமிழ் மாணவர்களின் எண்ணவோட்டத்தையும் அளவிடவும் விழைந்த உதயன் இதழ் கடந்த இரு மாதங்களாக நாவண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
கனடாவாழ் தமிழ் நெஞ்சங்களையும் கடந்து ஏனைய மேலை நாடுகள், ஈழ தேசம், தமிழினத்து தலைநிலமாம் தமிழகம், வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள், இன்னும் குறிப்பாக அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் வாழ்கின்ற தமிழர்கள் உட்பட இலட்சக் கணக்கான தமிழர்களை இணைய ஏட்டின் மூலமாகவும் வாராந்திர அச்சு இதழ் மூலமாகவும் இணைத்து தமிழ் உறவை வளர்க்கும் உதயனின் செம்மாந்த பாங்கை என்னவென்று சொல்வது?
இந்த நிலையில், மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களையும் தன் பயணத்தில் இணைத்துக் கொண்டுள்ளது கனடா உதயன்.
கடந்த 25-07-2021 ஞாயிறு மாலை 7:00 மணி அளவில் இயங்கலை ஊடாக தொடங்கிய இந்த இரண்டாவது நிகழ்ச்சியில், நல்ல தமிழர்கள் மகிழும் வண்ணமாக சைவ நெறி சிந்தனையும் மலர்ந்து மணம் பரப்பியது இன்பத்தைத் தந்தது.
சமண சமயம் வீழ்ந்தபின் சைவ சமயம்தான் தமிழர்களின் பிரதான சமயாக விளங்கியது. இந்தியாவை ஒருங்கிணைக்கவும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவ சமயத்தினர் போக மீதி உள்ளவர்கள் எந்தெந்த சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற புள்ளிவிவரம் ஏதும் இல்லாத நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் அடிமை இந்தியாவைச் சேர்ந்த பாலகங்காதர திலகர் என்னும் சித்பவன பார்ப்பனர் போன்றவர்களும் கூட்டு சேர்ந்து இந்தியாவில் யாரெல்லாம் இஸ்லாமியர் அல்லரோ, எவரெல்லாம் கிறிஸ்துவர் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று பிரகடனம் செய்தனர்.
இந்தக் கட்டத்தில்தான் சமணத்துடன் சேர்ந்து சைவம், ஜைனம்,, பௌத்தம், சீக்கியம் போன்ற சமயங்கள் தத்தம் தனி அடையாளத்தை இழக்க ஆரம்பித்தன.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 12,13-ஆம் நூற்றாண்டுகள்வரை தமிழையும் வளர்த்து தானும் செழித்துவந்த சைவ சமையம், தமிழர்தம் இரு விழிகளில் ஒன்றெனத் திகழ்ந்தது.
காலப் போக்கில் இந்து சமயம் என்னும் கட்டமைப்பில் கரைந்துவிட்ட சைவத்தை மீண்டும் பேச வைத்தை இந்த மாணவர் நிகழ்ச்சி, இதில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களையும் உள்ளம் குளிர வைத்தது என்றால் அதில் மிகையில்லை.
கடந்த நிகழ்ச்சியைப் போல இந்த நிகழ்ச்சியையும் உதயனின் நிருவாக தலைமை ஆசிரியர் திருமிகு நாகமணி லோகேந்திரலிங்கம் தொடக்கி வைத்தார். மலேசியாவில் மாலை 7:00 மணி என்றால், கனடாவில் அதே தினம் காலை 7:00 மணியாகும்.
அன்றாட பத்திரிகை பணிகளை நிறைவு செய்துவிட்டு தாமதமாக உறங்கச் செல்வதை வழக்காகக் கொண்டிருக்கும் அண்ணன் லோகேந்திர லிங்கம், மலேசிய இளம் மாணவர்களை சந்திக்கும் ஆவலில் காலை ஏழு மணிக்கெல்லாம் சரியாக இணைந்து தலைமை உரையை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பேசுவதற்கு தயாராக இருந்த மாணவர்களை உற்சாகப் பெருக்குடன் கண்டு, மேலும் ஆக்கமும் ஊக்கமும் பெற்ற உதயன் ஆசிரியர், எதிர்பார்த்ததற்கும் மாறாக சற்று அதிக நேரம் உரையாடியதைக் காண முடிந்தது.
நம் தமிழ் மொழி, தமிழகத்திற்கு அப்பாலும் பரவி விரவி இருக்கிறது என்று சொல்லப்படுவதற்கு தமிழ் ஈழத்தை அடுத்து மலேசியாவிற்கு முக்கிய பங்குண்டு. அந்த வளமார்ந்த மண்ணைச் சேர்ந்தவர்களிடையே உரையாடுவது இன்பம் அளிக்கிறது என்றவர், மலைகள் நிறைந்திருப்பதால் இலங்கையை மலையகம் என்போம்; அதைப்போல மலேசியாவையும் மலையகம் என்று அழைக்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களை தோட்டப்புற மாணவர்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்?. மலையக மாணவர்கள் என்று அவர்களை அழைத்தால் இன்னும் சிறப்பாயிற்றே என்றெல்லாம் பேசியவர், இந்த நிகழ்ச்சிக்கு அடியும் ஆதாரமுமாக இருக்கும் பாடகர் ரவாங் ராஜாவையும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் இடைநிலைப்பள்ளி மேநாள் முதல்வர் என்னும் சிறப்புக்கெல்லாம் உரிய பெ.இராஜேந்திரம், நிகழ்ச்சியின் இரு நெறியாளர்களான தாட்சாயணி முத்து மாணிக்கம், அறிவிற்கரசி செல்வராசன் ஆகியோரையும் பாராட்டி தன் நன்றியையும் உதயன் இதழின் சார்பில் தெரிவித்து ஆசிரியர் லோகேந்திரலிங்கம் விடைபெற்று அமைந்தார்.
மு. தாட்சாயிணி தமிழ் வணக்கப்பாடலுடன் தொடக்கி வைத்த இந்த நிகழ்ச்சியை செ. அறிவரசி தொடர மாணவர்கள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினார்.
ஐந்து மாணாக்கர்களில் ஒருவர் மட்டுமே மாணவர். அவர்தான் முதலில் பேச அழைக்கப்பட்டார். பெர்லிஸ் கங்கார் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஜெஸ்வின் ராஜ் த/பெ அசோக் செல்வன் என்ற அம்மாணவர் உணர்ச்சிப் பெருக்கோடும் உற்சாகக் குரலோடும் பேசினார்.
‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற தலைப்பில் பேசியதால் பாவேந்தர் புனைந்த அப்பாடலின் வரிகளை உச்சரிக்க ஐவருமே தவறவில்லை. இளையவர்களான இந்த ஐவரும் மூத்தவளா அல்லது இளையவளா என்று அடையாளம் காண முடியாத தமிழன்னையின் பெருமைதனை எடுத்துரைத்தனர்.
அடுத்தடுத்து பேச வந்த தனுசியா பார்த்தீபன்(ஜோகூர், செடினாக் தோட்ட தமிழ்ப் பள்ளி), மகேசா ஸ்ரீ த/பெ ஜெகன்ஜீவன்ராம்(நிபோங் தெபால், பைராம் தோட்ட தமிழ்ப் பள்ளி), நிரோஷா மணியரசு(எடின்பரோ தோட்ட தமிழ்ப் பள்ளி) ஆகியோரைத் தொடர்ந்து நிறைவுப் பேச்சாளராக வந்தவர் நர்மதா ஸ்ரீ ரகுராம்(ஜாசின், லாலாங் தோட்ட தமிழ்ப் பள்ளி).
இணைய இணைப்பு சிக்கலால், ஒரு சில நிமிட தாமதத்திற்குப் பின்னரே இந்த நிகழ்ச்சியில் சங்கமித்தார் நர்மதா.
அதற்கிடையில், இந்த குறுகிய இடைவெளியையும் வகையாகக் கையாண்டார் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள். தமிழுக்கும் அமுதென்று பேர் என்று தொடங்கும் பாடலை பாடும்படி கேட்க, உடனே இசைவு தெரிவித்து பாட முயன்ற பாடகர் ராஜா, அதற்கான இசைவட்டு பொருத்தமாக கிட்டாத சூழலில் ‘அமுதே தமிழே வாழி’ என்ற இன்னொரு பாடலைப் பாடி பங்கேற்பாளர்களை மகிழ்வித்தார்.
பேரறிஞர் அண்ணாவால் ‘கொடுமுடி கோகிலம்’ என்று பாராட்டப்பட்ட கே.பி. சுந்தராம்பாளின் பெயர்த்தியைப் போல நெற்றி முழுக்க திருமண் பூசிக் கொண்டு சைவ செல்வியைப் போல காட்சி தந்ததுடன் தமிழன்னையை வணங்குமுன் சைவ நெறி வணக்கத்தை முன்வைத்தார் நர்மதா.
மாணவர்களின் எழுச்சியான உரைக்குப் பின் நன்றியுரை ஆற்ற அழைக்கப்பட்டார் இராஜேந்திரம். இந்த வேளையில், பங்கேற்பாளர்களில் ஒரு சிலர் அடுத்தடுத்து விலகத் தொடங்கினர். ஆனாலும் மலேசியர்களும் கனடியர்களுமாக 70 பேர் நிறைவுக் கட்டம்வரை இணைந்திருந்தனர். இவர்களில் மற்ற நாட்டவர்களும் குறிப்பாக ஈழ நாட்டவரும் தமிழ் நாட்டவரும் இணைந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
நன்றியுரைக்குப் பின் பாராட்டுரை வழங்க கனடாவின் வர்த்தகத் திருமகனார் திரு. பாஸ்கரன் சின்னதுரை அழைக்கப்பட்டார். பரந்த மனதுக்காரரான பாஸ்கரன் அவர்கள் எல்லோரையும் பாராட்டினார். குறிப்பாக, மாணவர்களின் சைவ நெறி வெளிப்பாட்டை வெகுவாகக் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.
ஏடாசிரியர் அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்கள் ஏனோ அரசியலில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டிருந்தால், அவர் ஓர் அமைச்சராக விளங்கிக் கொண்டிருப்பார். இப்பொழுதுகூட அவர் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதை காண முடிகிறது என்று குறிப்பிட்டது பெருமைக்குரியதாக இருந்தது.
கற்றோரை கற்றோரேக் காமுறுவர் என்னும் முதுமொழியைப் போல நல்லோரை நல்லோரே உள்ளத்தால் ஏற்றுவர் என்பது நிரூபணமான அந்த உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைவரும் குழுப்படம் எடுத்துக் கொண்டபின் இந்த நிகழ்ச்சி முற்றுப் பெற்றது.
வாழ்க தமிழ்! வளர்க கனட உதயன்!!