LOADING

Type to search

அரசியல்

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

Share

மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றாமல் தமிழக அரசின் பொருளாதார நிபுணர் குழுவுடன் இணைந்து நிதிநிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தின் நிதி இருப்பு, நிதிச் சுமை, கடன் அளவு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையான அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையாக மக்கள் மன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக இன்று வெளியிட்டுள்ளார்கள். தமிழகத்தின் உண்மையான நிதி நிலை என்னவென்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்ட தமிழக அரசை பாராட்டுகிறோம். மேலும், இந்த வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்திலும் வெளியிட்டு, இதுதொடர்பான விவாதங்களை ஜனநாயக அடிப்படையிலும் நடத்த வேண்டும். அத்தகைய நடவடிக்கையே ஒரு சரியான தீர்வை நோக்கி செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

இந்த வெள்ளை அறிக்கை மூலமாக தமிழகத்தின் நிதிநிலை மோசமானதற்கும், தமிழக மக்களின் மீதான கடன் சுமை அதிகரிப்புக்கும் காரணம் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடும், மாநிலங்களுக்கான வரி வருவாய்க்கு தடை ஏற்படுத்தும் தற்போதைய ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளும் தான் காரணம் என்பது தெளிவாகின்றது. இந்த வெள்ளை அறிக்கையை முன்வைத்து மக்களின் மீது வரிச்சுமையை அதிகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் பேச்சும், பல்வேறு மாநிலங்களில் உள்ள வரிகளை தமிழகத்துடன் ஒப்பிட்டும் பேசிய பேச்சானது மக்களின் மீது வரிச்சுமை ஏற்றப்படும் என்பதாகவே உணர முடிகிறது.

திமுக ஆட்சி அமைந்த சில நாட்களில் தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் ஒரே இரவில் வரியில்லா பட்ஜெட்டை தன்னால் தயாரிக்க முடியும் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது ஜீரோ வரி பட்ஜெட் என்பது அர்த்தமற்றது என தான் முன் சொன்ன அறிக்கைக்கு மாறாக கூறியுள்ளார். எனினும், பொருளாதார வல்லுநரான தமிழக நிதி அமைச்சர் அவர்கள், தமிழக அரசு நியமித்துள்ள பொருளாதர வல்லுநர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து, மக்களை பாதிக்கும் நேரடி அல்லது மறைமுக வரிகள் இல்லாமல், தமிழகத்தின் நிதி நிலையை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தற்போதைய வரி விதிப்பை சரியான முறையில் அமல்படுத்துவதோடு, கூடுதல் வரிச்சுமை இல்லாத வருவாய்க்கான வழிவகைகளை ஆராய்ந்து அதனை நோக்கி தமிழக அரசு நகர்ந்து, தமிழகத்தின் நிதி நிலையை மேம்படுத்த வேண்டும். மேலும் ஒன்றிய அரசிடமிருந்து பெறவேண்டிய தமிழகத்தின் வரி வருவாயை உடனுக்குடன் பெறவும் முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம்
ஒருங்கிணைப்பாளர்