LOADING

Type to search

அரசியல்

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்போவதாக கூறி தனியார் நிறுவனம் பெயரில் 2,600 ஏக்கர் நிலம் வாங்கி மோசடி

Share

சென்னை ஐகோர்ட்டில், திருவண்ணாமலையை சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சிவபாபு தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பொருளாதார மண்டலம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தோல், ஜவுளி உள்ளிட்டவைகளுக்காக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் முடிவு செய்தது. இதற்காக குன்நம், வேப்பந்தட்டை கிராமங்களில் 2 ஆயிரத்து 937 ஏக்கர் நிலம் கடந்த 2007-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலம் கையகப்படுத்தும் பணியில் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஈடுபட்டது.

இந்த கிராமங்களில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகள். அவர்களிடம் பொருளாதார மண்டலம் வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று கூறி, அவர்களிடம் இருந்து தனியார் நிறுவனத்தின் பெயருக்கு சுமார் 2 ஆயிரத்து 600 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளது,

இந்த முறைகேட்டில் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.580 கோடியாகும். தற்போது இந்த நிலங்களை வங்கிகளில் அடமானம் வைத்து, அந்த தனியார் நிறுவனம் பெரும் தொகையை கடன் பெற்றுள்ளது.

எனவே, இந்த மிகப்பெரிய முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், தனிநபர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெ.அசோக் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 15 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.