மூர்க்கமாய் நிற்கும் முதலாளித்துவத்திற்கு முன்பாக கனடாவின் ஜக்மீட் சிங்கின் கர்ச்சிப்பு
Share
13-08-2021 கதிரோட்டம்
உலக முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கவென எழுந்து நின்ற சோசலிச நாடுகளான சீனாவும் ரஸ்யாவும் தணிந்து போய்விட, சிறிதளவு மூச்சுவிடும் நிலையில் உள்ள கியூபாவையும் பூச்சியத்திற்கு கொண்டு செல்ல முயலும் கபடத்தனமாக செயற்பாடுகள் ஓங்கி நிற்கும் இந்த நாட்களில் கனடாவிலிருந்து ஒரு எழுச்சிக் குரல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆமாம்! இந்தியாவிலிருந்து கனடாவிற்கு குடியேறி, கல்வி கற்று சட்ட வல்லுனராகப் பட்டம் பெற்று தற்போது கனடாவின் மூன்றாவது தேசியக் கட்சியாக விளங்கும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக விளங்கும் ஜக்மீட் சிங் அவர்களது நேற்றைய சொல்வீச்சுக்கள் இன்றைய தினமும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன.
சீக்கிய கனடியராக இன்னமும் தனது அடையாளத்தை புறக்கணிக்காமல், ஒரு தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் அவரது ஆற்றல் சாதாரணமாக கணிப்பிட முடியாத ஒன்று. மாகாண அரசின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்று தொடர்ந்து தேசிய அரசியலில் கால் பதித்து தற்போது ஒரு கட்சியை வழி நடத்தும் பெருமகனாக அவர் விளங்குகின்றார்.
கனடாவின் பொதுத்தேர்தல் இந்த வருடத்திற்குள் நடைபெறவுள்ளது என்ற செய்திகள் வெளியாகியுள்ள இந்த நாளில், ஜக்மீட் சிங் அவர்களது கட்சியின் தேர்தல் கால அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் சிலவற்றை கனடிய பாராம்பரியத்தை கொண்ட மாகாணங்களுக்குச் சென்று வெளிப்படையாக தெரிவிக்கும் ஜக்மீட் சிங் கனடிய மக்களுக்காக தமது கட்சி தயாரித்துள்ள பொருளாதார மற்றும் சமூகத் திட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றார்.
அவற்றில் ஒன்று, கனடாவில் உள்ள செல்வந்தர்களிடமிருந்தும் பெரிய நிறுவனங்களிடமிருந்தும் இன்னும் அதிகமான வரியை அறவிட்டு சாதாரண கனடியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவுள்ளதாக அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். உதாரணமாக கனடாவில் உள்ள பெருந்தேசிய காப்புறுதி நிறுவனங்களில் கையை வைக்கும் அளவிற்கு ஒரு திட்டத்தை ஜக்மீட் சிங் அறிவிக்கின்றார். தமது கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தால், காப்புறுதி நிறுவனங்களிடம் உள்ள திட்டங்களை அரசாங்கமே பொறுப்பேற்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும் என்டிபி கட்சியின் தலைவராக அவர் வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் அறிவிக்கின்றார்.
ஆனால் இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக தங்கள் இலாபமீட்டும் வாய்ப்புக்களை விட்டுக்கொடுக்கப் போகின்றனவா? என்ற கேள்வி தற்போது அனைவர் மனங்களிலும் எழுந்து நிற்கப்போகின்றன.
அண்மையில் இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் விடுத்த அறிக்கையொன்றில் இந்த கோவிட் -19 தொற்றுக் காலத்தில் புதிதாகத் உருவெடுத்துள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அவர் நாட்டிற்கு பெருமை தரக்கூடிய ஒன்றாகவே வெளியிடுகின்றார். ஆனால் இதன் மறுபக்கத்தில் சாதாரண மக்களைச் சுரண்டியோ அன்றி அரசின் சொத்துக்களை சூறையாடியோ தான் புதிதாக செல்வந்தர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதை அவர் மறைக்க முயலுகின்றார்.
இதைப்போலத்தான் கனடாவிலும் புதிதாக செல்வந்தர் உருவாகியுள்ளார். அரசாங்கத்தின் பல தேவைகளுக்கு அதிக இலாபம் தரும் ஒப்பந்தங்களை பெறும் பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் செல்வந்தர்கள் ஆகின்றார்கள்.
இவ்வாறாக முதலாளித்துவதத்திற்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் உள்ள கனடாவில் பெரும் தேசிய நிறுவனங்களோடு எவ்வாறு சமாளிக்கப் போகின்றார் ஜக்மீட் சிங் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.