LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசியாவின் 9-ஆவது பிரதமர் இஸ்மாயில் சப்ரி அடங்கியது அரசியல் கொந்தளிப்பு

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், ஆக.20:

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கனடாவின் உதயன் இதழ், மலேசியவாழ் தமிழ் நெஞ்சங்களுடன் இணைந்து புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது.

அம்னோ கட்சியின் தேசிய உதவித் தலைவரும் 13-ஆவது துணைப் பிரதமராக பொறுப்பு வகித்தவருமான இஸ்மாயில் நாளை சனிக்கிழமை பிற்பகலில் புதிய பிரதமராக பதவிப் பிரமானம் ஏற்க இருக்கிறார்.

இதன்வழி நாட்டைச் சூழ்ந்திருந்த அரசியல் கொந்தளிப்பு அடங்கியுள்ளதாக நாட்டு மக்கள் கருதலாம். இது, நிரந்தரமா அல்லது இடைக்காலத்திற்குத்தானா என்பது இந்தக் கூட்டணி மேற்கொள்ள இருக்கும் அடுத்தக் கட்ட நகர்வைப் பொறுத்தே தெரியவரும்.

உண்மையில் நாட்டின் பெரிய மாநிலமான பகாங்கிற்கு இஸ்மாயில் பெருமையை தேடித் தந்திருக்கிறார். அந்த மாநிலத்தில் இருந்து நாட்டின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்றாவது தலைவர் இவர்.

இரண்டாவது பிரதமர் துன் ரசாக்கும் ஆறாவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பும் மேற்கு மண்டல மாநிலமான இதே பகாங்கைச் சேர்ந்தவர்கள்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆரம்பித்த அரசியல் முறுகல் நிலை, இந்த வாரத் தொடக்கத்தில் டான்ஸ்ரீ மகியாடின் யாசின், பிரதமர் பதவியில் இஉர்ந்து விலகியதால் அரசியல் கொந்தளிப்பாக உருமாறியது.

கடந்த வெள்ளிக்கிழமை தேசியக் கூட்டணி அமைச்சர்கள் புத்ராஜெயாவில் உள்ள தங்கள் அலுவலகங்களை காலி செய்ய ஆரம்பித்ததுமே, மஹியாடின் பதவி விலகப் போவது உறுதியானது. அப்போது ஆரம்பித்த அரசியல் பரபரப்பு இந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்திருக்கிறது.

இன்று மாலையில் அரண்மனை முத்திரைக் காப்பாளர் அகமட் ஃபாடில் ஷம்சுடின் மாட்சிமைக்குரிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா சார்பில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் அடுத்த பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

முன்னதாக மலாய் ஆட்சியாளர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. கிளந்தான், ஜோகூர் மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் பெர்லிஸ் ராஜா ஆகியோரின் வாகனங்கள் அரண்மனை நுழைவாயிலில் தென்படாத நிலையில், மாலை 4:00 மணிக்குப் பின் கூட்டம் முடிந்து ஒவ்வொரு மாநில ஆட்சியாளராக வெளியேறிய நிலையில் அடுத்த பிரதமருக்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பு ஊடகத்தினரை மட்டுமல்ல; நாட்டு மக்களையும் தொற்றிக் கொண்டது.

அதன்படியே அரண்மனையில் இருந்து அறிவிப்பும் சுடச்சுட வெளியானது.

ஆகஸ்ட் 21 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் புதிய பிரதமர் பொறுப்பு ஏற்க இருப்பதன்வழி, கொரோனா பரவலால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சுகாதாரப் பணிகள் தொய்வின்றி தொடரும் என்றும் அதைப்போல பொருளாதார மீட்சி நடவடிக்கையும் புது உத்வேகம் பெறும் எனவும் மாமன்னர் தெரிவித்த தகவலையும் முத்திரைக் காப்பாளர் தெரிவித்தார்.

220 எம்பி-க்களில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதன்வழி இஸ்மாயில் சாப்ரி, நாட்டின் 9-ஆவது பிரதமராக அரண்மனை சார்பில் அறிவிக்கபடுகிறார் என்றும் முத்திரைக் காப்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில் மழைவிட்டும் தூவானம் விடாத கதையைப் போல, இஸ்மாயில் சப்ரிக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவைத்தான் பெர்சத்து கட்சி வழங்கும் என்று மகியாடின் அறிவித்துள்ளதால் மிரண்டுபோயிருக்கும் அம்னோ நேற்றிரவே இரகசியக் கூட்டத்தை நடத்தியுள்ள நிலையில் நாளை மீண்டும் அதன் உச்சமன்றக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது

நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் இடம்பெற இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில், இஸ்மாயில் சப்ரி உண்மையில் ஓர் இடைக்கால பிரதமராகத்தான் பொறுப்பு வகிக்கக்கூடும். அதுவரையாவது, தன்னுடைய தலைமையிலான ஆட்சியை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்வாரா, அல்லது எதிரும் புதிருமான மனநிலையைக் கொண்டவர்கள் அடங்கிய இந்தக் கொல்லைப்புறக் கூட்டணி மீண்டும் பழையபடி முட்டி மோதிக் கொண்டு கவிழுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

61 வயதான இஸ்மாயில் உண்மையில் அமைதியான தலைவரும் திறமையான அரசியல்வாதியும் ஆவார்.

அடிப்படையில் ஒரு வழக்கறிஞரான இவர், 1987-இல் தெமர்லோ மாவட்ட மன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து தெமர்லோ முனிசிபல் கவுன்சிலாரகவும் பொறுப்பேற்று தன் பொதுவாழ்வைத் தொடங்கினார். அதே ஆண்டில்தான் அம்னோ தெமர்லோ தொகுதியில் உறுப்பினாராக தன்னை இணைத்துக் கொண்டு அதன்பின் படிப்படியாக அரசியலில் உயர்ந்த நிலையை எட்டினார்.

இருந்தாலும், பினாங்கு மாநிலத்தில் உள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இஸாவை தேசத் துரோகி என்று துடுக்குத் தனமாக பேசியதற்காக இஸ்மாயில் அவதூறு மற்றும் மானநட்ட வழக்கை எதிர்கொள்ள நேர்ந்தது. 2015-இல் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இஸ்மாயில் சப்ரி ஆறு இலட்ச வெள்ளியை நூருலுக்கு செலுத்த நேர்ந்தது.

இஸ்மாயிலின் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு கறுப்பு அத்தியாயம்.

எது எவ்வாறாயினும் புதிய பிரதமர் அரசியல் விளையாட்டைவிட நாடும் மக்களும் எதிர்கொண்டுள்ள சிக்கலைக் களைவதற்காக பாடுபடுவார் என்ற நம்பிக்கையை நடுநிலையாளர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

நாமும் அப்படியே நம்புவோம்!.

(அண்ணா,இஸ்மாயில் படத்தை இணைக்க முடியவில்லை; தங்களுக்கு புலனத்தின்வழி அனுப்பி உள்ளேன். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)