மலையகத்திற்கும் தமிழகத்திற்கும் ஒரேத் தமிழர்: சரவணன்
Share
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.28:
மலேசியத் திருநாட்டின் புதிய அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழருக்குத்தான் கேபினட் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் நால்வருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதே என்று மலேசியவாழ் தமிழ் நெஞ்சங்கள் வருந்துகின்றன. உண்மையில் இந்த அளவிற்காவது வாய்ப்பு கிடைத்ததே என்று மலேசியத் தமிழர்கள் ஆறுதலும் தேறுதலும் பெற வேண்டும்.
எட்டு கோடி தமிழர்கள் வாழ்கின்ற இந்தியாவில் ஒரு தமிழருக்குக்கூட கேபினட் அமைச்சர் பொறுப்பை ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் செலுத்தும் பாஜக அரசு வழங்கவில்லை; இன்று, நேற்றல்ல; கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழர்கள் தங்களின் தலைநிலத்திலேயே இப்படி அவமானத்திற்கும் சிறுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில், ‘மலாய் முஸ்லிம் அதிகாரம்’ என்ற கட்டமைப்பில் பாஸ் கட்சி வடிவமைத்துள்ள இன்றைய மலேசிய அரசாங்கத்தில் ஒரு தமிழருக்காவது வாய்ப்பு கிடைத்துள்ளதே என்று மலேசியத் தமிழர்கள் தங்களை தேற்றிக் கொள்ள வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை சிங்களரை அண்டிப் பிழைக்கும் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள், சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கும் கருணா போன்றவர்களை சிங்கள ஆதிக்க அரசியல்வாதியர் கொண்டணைப்பதில் வியப்பில்லை.
சிங்கப்பூர் அமைச்சரவையில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றிருக்கின்றனர் என்றாலும் அவர்களில் துணைப் பிரதமராக இருக்கும் தர்மன் சண்முகரத்னம், ஈழத் தமிழர்வழிவந்தவர்; வெளியுறவு அமைச்சராக இருக்கும் விவியன் பாலகிருஷ்ணன் தமிழ தந்தைக்கும் சீனத் தாய்க்கும் பிறந்தவர்; உள்துறை அமைச்சராக இருக்கும் கே. சண்முகம் சட்ட வல்லுநர் ஆவார்.
மலேசிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் டத்தோஸ்ரீ மு. சரவணன், மலேசிய இந்தியர் காங்கிரஸ் இயக்கத்தின் மேநாள் தலைவர் துன் ச.சாவிவேலுவால் உருவாக்கப்பட்டவர். கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் இருக்கும் இவர், மலேசிய இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் ஒரே அமைச்சராக இன்றைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
தமிழகத் தமிழர்களைப் பொறுத்தவரை 1999 முதல் 2014-ஆம் ஆண்டுவரை 15 ஆண்டு காலம் பொற்காலமாகும். 1999 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்திய அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக பிரதமராக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் 23 கட்சிகளை துணை சேர்த்துக் கொண்டு ஐந்து ஆண்டு தவணைக் காலத்தை சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றி முடித்தார்.
அந்தக் காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் புதுடில்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். 2000 மார்ச்-இல் பிரதமர் வாஜ்பாயை சந்தித்தபோது, “தான் சார்ந்த ஜனநாயகக் கட்சியை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறபோது, நீங்கள் உங்கள் கட்சியையும் சேர்த்து 24 கட்சிகளை எப்படி சமாளித்து ஆட்சியை வழிநடத்துகிறீர்கள். இந்த வித்தையை எனக்கும் கொஞ்சம் சொல்லித் தாருங்களேன்” என்று நகைச்சுவையாக கேட்டபோது, அதற்கு வாயார சிந்திய சிரிப்பையே பதிலாகத் தந்தார் வாஜ்பாய்.
ஆந்த 23 கட்சிகளில் ஒன்றான திமுக-விற்கு நான்கு கேபினெட் அமைச்சர்கள், 4 துணை அமைச்சர்கள் என எட்டு பேரை புது டில்லி அமைச்சரவையில் இடம்பெற வைத்தார் தமிழ் மூதறிஞரும் அரசியல் சாணக்கியருமான கலைஞர் மு.கருணாநிதி. அடுத்த பத்து ஆண்டுகள் மன் மோகன் சிங் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டாட்சியிலும் அதே நான்கு கேபினெட் அமைச்சர்களாக தமிழர்களை இடம்பெற வைத்து, தமிழினம் நெஞ்சை நிமிர்த்தும்படி கலைஞர் செய்தார்.
2014-இல் நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது, பாஜக-விற்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றும் அவருக்கு பயனற்றுப் போனது. பிரதமர் அல்லது துணைப் பிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கியவர் மோடி.
அப்போது பாஜக சார்பில் ஒருவர் மட்டும் தமிழகத்தில் வென்றார். கன்னியாகுமரி வாக்காளர்களால் தேர்ந்தெடுடுக்கப்பட்ட பொன்.இராதா-கிருஷ்ணன் கனரக தொழில் துறைக்கு இணை அமைச்சராக மட்டும் நியமிக்கப்பட்டார். கேபினட் அமைச்சராக அவர் தகுதி பெறவில்லை எனக் கருதினால், பாஜக கூட்டணியில் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி தொகுதியில் வென்ற அன்பு மணிக்காவது அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். இத்தனைக்கும், மன் மோகன் சிங் அமைச்சரவையில் சுகாதாராத் துறை அமைச்சராக செயல்பட்டவர்தான் இந்த அன்புமணி.
8 கோடி தமிழர்களுக்கு இந்திய அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமே என்ற எண்ணம், பிராமண மேலாதிக்கம் உள்ள பாஜக-விற்கோ ஆர்எஸ்எஸ் சுட்டிக்காட்டும் திசையில் பயணிக்கும் மோடிக்கோ ஏற்படவில்லை.
2004 இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது, திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகம்-புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மொத்தமாக வென்ற நிலையில், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அடியோடு தோற்றது. ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வெல்லாத நிலையிலும் மலையாள மொழி பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கேரள காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கி அவருக்கு பாதுகாப்பு அமைச்சகத்தை காங்கிரஸ் மேலிடம் ஒதுக்கியது.
அதுதான் ஜனநாயகம்.
இப்பொழுது, பாஜக அந்த ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி தொல்குடியினரான தமிழர்களை மதித்திருக்கிறதா என்றால், இல்லை என்று நறுக்கென சொல்வதே சரியான பதிலாக இருக்கும்.
2019 பொதுத் தேர்தலில் பாஜக தமிழ் நாட்டில் படுதோல்வி அடைந்தது என்னவோ உண்மைதான்; ஆனாலும், மத்திய அமைச்சரவையில் தமிழ் பேசும் மக்களுக்கு உரிய மரியாதையும் பிரதிநிதித்துவமும் அளிக்க வேண்டுமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் தமிழருக்கான பிரதிநிதித்துவம் இல்லாமலேயே அமைச்சரவையை உருவாக்கினர். அவர்கள் நினைத்திருந்தால், பொன்.இராதாகிருஷ்ணன், கோவை சி.பி.இராதாகிருஷ்ணன் போன்ற யாராவது தமிழக பாஜக தலைவர் ஒருவரை ராஜ்யசபை உறுப்பினராக்கி, அதன்வழி ஒரு தமிழரையாவது அமைச்சராக்கி இருக்கலாம். அவர்களுக்கு மனமில்லை; இந்தியாவில் வாழும் ஒரே செம்மொழியான தமிழையும் அம்மொழியைப் பேசுவோரையும் அப்பட்டமாக பாஜக இழிவு செய்து வருகிறது.
கடந்த 16-ஆவது நாடாளுமன்றத்திலாவது பொன்.இராதா கிருஷ்ணன் என இணை அமைச்சர் ஒருவர் இருந்தார். நிகழும் 17-ஆவது நாடாளுமன்றத்தில் அதுவும் இல்லாமல் போனது.
அடுத்தப் பொதுத் தேர்தல் 2024 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், தற்பொழுதுஉர்காஅ தமிழக பாஜக தலைவரும் சாதி-மத அரசியலில் பெயர் பெற்ற சீர் மரபினத் தலைவருமான எல்.முருகனை ‘ஒப்புக்கு சப்பாணி’ என்னும் விதத்தில் தகவல் துறை இணை அமைச்சராக நியமித்து கண்கட்டி வித்தையைக் காட்ட முனைந்துள்ளது பாஜக தேசிய தலைமை; மோடியும் கூடத்தான்;
நிர்மலா சீத்தாராமனும், சு.ஜெய்சங்கரும் இந்திய கேபினெட் அமைச்சர்களாக இருக்கின்றரே என்று கருதினால், அவர்கள் இருவரும் தமிழர்கள் இல்லை.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழினத்தின்மீது பண்பாட்டு படை தொடுத்து தமிழினத்தை வேரொடும் வேரடி மண்ணோடும் சாய்த்த பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இருவரும்.
தமிழ் பேசுகிற அனைவரும் தமிழர்கள் இல்லை; உதாரணத்திற்கு, ஒரு தமிழர் சீன மொழியைக் கற்றுக் கொண்டால் அவரை சீனரென சீனர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஒருகாலும் மாட்டார்கள்.
ஆக, போனது போகட்டும்; ஆனது ஆகட்டும்.
மலேசியாவைப் பொறுத்தமட்டில் சரவணன் மத்தியக் கூட்டரசில் அமைச்சராகி இருப்பது, மலேசிய அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் தமிழர்க்குப் பெருமைதான்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24