திருமண இணையதளம் மூலம் ஏராளமான பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது
Share
கர்நாடக மாநிலம் விஜயபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாத். இவர் ஷாதி டாட்காம் உள்ளிட்ட மேட்ரிமோனியல் இணயதளத்தில் வரன் தேடுவது போல வேறு வேறு பெயர்களை பயன்படுத்தி புது புது கெட்டப்களில் தனது போட்டோக்களை அப்லோடு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
கணவனை இழந்த மற்றும் பிரிந்த பெண்களுக்கு வாழ்வளிக்க விரும்புவது போல காட்டிக் கொள்ளும் இவர், தன்னை என்ஜினீயர் என்று கூறி 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறிப் பழகி, அவர்களை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
ஓரளவு தன் மீது நம்பிக்கை வைக்கும் பெண்களிடம் ஏதாவது சென்டிமெண்டான காரணங்களை கூறி லட்சக்கணக்கில் பணத்தையும், பணம் இல்லாத பெண்களிடம் ஏராளமான நகைகளையும் ஏமாற்றிப் பறித்து விட்டு கம்பி நீட்டுவதை வழக்கமாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி அவர்களை தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச்செல்லும் ஜெகன்னாத், அந்த பெண்களிடம் தேவையான அளவு நகை- பணம் பறித்தவுடன் செல்போன் நம்பரை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பலர் அவமானம் கருதி புகார் அளிக்க முன்வராத நிலையில், தங்கள் வாழ்க்கையை சீரழித்த ஜெகன்னாத் மீது சிலர் துணிச்சலுடன் புகார் அளித்ததால், திருமண மோசடி திருடன் ஜெகன்நாத் கையும் களவுமாக பெங்களூரு போலீஸ் பிடியில் சிக்கியுள்ளான்.
அவனிடமிருந்து 115 கிராம் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 5 செல்போன்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விஜயபுரத்தில் வசிக்கும் ஜெகநாத் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வேலைதேடி வந்துள்ளான். ஆரம்பத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்த ஜெகநாத்திற்கு பணமோசடி செய்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்து மேட்ரிமோனி இணையதளமான ஷாதி டாட் காம் உள்ளிட்ட பல்வேறு திருமண இணையத்தளங்களில் ரமேஷ் , விஜய், மஞ்சுநாத், பசவராஜ் என பல்வேறு பெயர்களில் போலியான சுயவிவரங்களை உருவாக்கி அதில் பெரும்பாலும் விவாகரத்து செய்த பெண்கள் மற்றும் கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து பல்வேறு பெயர்களில் அறிமுகமாகியுள்ளான்.
பி.ஏ.வரை மட்டுமே படித்த இவன், தன்னை சிவில் இன்ஜினியர் எனக் கூறிக்கொண்டு ஏராளமான பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது உறுதியாகி உள்ளது.
இதற்கு முன் பெங்களூர் பானசவடி காவல் நிலையத்தில் இது போன்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ள ஜெகன்நாத், பல பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளான் எனச்சுட்டிக் காட்டுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.