உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிர் நீத்த தியாதி திலீபனை நினைந்து தியானமிருப்போம்!
Share
17-09-2021 கதிரோட்டம்
அமைதிப் படை என்ற பெயரோடு எம் மண்ணில் பெருமளவு ஆயுதங்களோடு நிலை கொண்டிருந்த இந்தியப் படைகள் பார்த்திருக்க தியாகி திலீபனின் இன்னுயிர் பிரிந்தது அன்று. உண்ணா நோன்பிருந்த காரணத்தால் உடல் உபாதைகள் அதிகம் அவன் உடலுக்கு வலிகளைக் கொடுத்தாலும், சற்றும் மனம் தளராமல் தன் சாவை எதிர் கொண்டவன் எம் மண்ணன் மைந்தன் மகத்தான தியாகி திலீபன் அவர்கள்.
எம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னராக தந்தை செல்வா அவர்கள் நடத்திய அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு எம் இளைஞர்கள் தங்கள் கரங்களில் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுதங்களை எடுத்தனர்.
இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகளை தனது கோசங்களாகக் கொண்டு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் தியாகி திலீபன் அவர்கள்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாள் செப்டம்பர் 26 1987 ல் வீரச் சாவடைந்தார்.
அவர் இந்திய அரசை நோக்கி முன்வைத்த ஐந்து கோரிக்கைகள் பின்வருமாறு;-
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான கோரிக்கைகள் இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பெற்று அவைகள் ஏற்றுகொள்ளப்பட்டால் தங்களுக்கு ஓரு அங்கீகாரமும் தம் தமிழ் மக்களுக்கு நிம்மதியும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளும். ஏன் எம் தமிழ் மக்களும் கூடவே.
ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அந்த வாலிபனின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அவன் முன்வைத்த கோரிக்கைகள் ஒன்று கூட நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு இலங்கை இந்திய அரசுகள் மாத்திரமல்ல. இலங்கையில் எம் மக்களிடம் வாக்குகளைப் பெற்ற எமது பிரதிகளுமே காரணம் என்று மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
இவ்வாறான தலைவர்களை நம்பியே தவமாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அவனது நினைவு வாரத்தில் திலீபன் என்னும் தியாகிக்காக தியானம் அனுஸ்டிப்போமாக.