செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக கூறி 7 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது
Share
சேலம் பழைய சூரமங்கலம் அருகில் உள்ள சித்தனூரை சேர்ந்த சகாயமேரி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, InSite Towers PVT LTD என்ற நிறுவனத்தில் இருந்து சகாயமேரிக்கு வந்த குறுஞ்செய்தியில், அவரது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதித்தால், அதற்கு மாத வாடகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணை சகாயமேரி தொடர்பு கொண்டு பேசியபோது, குறைந்தது 1,300 சதுர அடி நிலம் இருந்து, அதில், செல்போன் கோபுரம் அமைக்க அனுமதித்தால், ரூபாய் 30 லட்சம் முன்பணம், மாத வாடகை ரூபாய் 35 ஆயிரம் தருவதாக கூறியுள்ளனர்.
தனக்கு சேலம் ஜங்சன் அருகில் நிலம் இருப்பதாக சகாயமேரி கூறியபோது, தொலை தொடர்பு துறை அனுமதி பெற, பல அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதற்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தந்திரமாக கூறியுள்ளனர். அந்த பணத்தை தங்களுக்கு கொடுத்தால், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூலம் அட்வான்ஸ் தரும் போது சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என ஆசை காட்டியுள்ளனர். இதை நம்பிய சகாயமேரி வங்கி மூலம் ரூபாய் 7 லட்சம் தொகையை கட்டியுள்ளார். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து எந்த தகவலும் இல்லாததால், தொடர்பு எண்ணை அழைத்தபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
பல முறை முயற்சித்தும் பலன் இல்லாததால், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம், சகாயமேரி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி செல்வம், ஆய்வாளர் சந்தோஷ்குமார் தலைமையிலான 3 தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், திருப்பூரைச் சேர்ந்த மல்லையா, சந்திரசேகர், நவீன், சுதாகரன், டெல்லியை சேர்ந்த சிவா மற்றும் சூர்யா, திண்டுக்கல்லைச் சேர்ந்த தனசேகர், மோகன், பிரபு, குணசேகரன், சவுந்தரபாண்டியன், அருண்குமார், சதீஷ்குமார் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் பெங்களூரில் லாட்ஜ் ஒன்றில் தங்கி, செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி, பலருக்கும் தூண்டில் போட்டுள்ளனர்.
தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்ட மீன்களைப் போல சிக்கியவர்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு லேட்டாப்புகள், 34 செல்போன்கள், 45 சிம்கார்டுகள், 20 வங்கி கணக்கு புத்தகங்கள், சுமார் 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 பேரையும் காவலில் எடுத்து, யார் யாரிடம் கைவரிசை காட்டியுள்ளனர் என போலீசார் விசாரிக்க உள்ளனர். அதேசமயம், லட்டு போல வரும் ஆஃபர்களை தீர விசாரிக்காமல் நம்பினால், ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு சாதகமாக அமையும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.