LOADING

Type to search

மலேசிய அரசியல்

12-வது மலேசியத் திட்டம் அறிவிப்பு இந்திய மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், செ. 28:

மலேசியாவின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை திட்டமிட்டபடி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று செப்டம்பர் 27-இல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அந்த சூட்டோடு நேற்று மாலையே இந்தியர் விவகார ஆலோசனைக் குழுவின்(ஐஏஏசி) கூட்டம் சுடசுட நடைபெற்றது. மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தை புறநகர் மேம்பாட்டுத் துறை மேநாள் துணை அமைச்சரும் சுங்கை பூலோ தொகுதி மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்) நாடாளுமன்ற உறுப்பினருமான சுவராசா ராசையாவும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக செயல் கட்சி இந்திய தலைவர்களில் ஒருவருமான சாரலஸ் சந்தியாகோ ஆகிய இருவரும் வழிநடத்தினர்.

மலேசியவாழ் இந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வு, சமூக ஒருமைப்பாடு, இந்தியர்களின் அரசியல்-பொருளாதார-கல்வி-சமூக மேம்பாடு குறித்தெல்லாம் விவாதிக்கவும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து முடிவு செய்யவும் அண்மையில் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவின் இரண்டாவது கூட்டம் இது.

சிவராசா தலைமை வகிக்கும் இந்த ஐஏஏசி-யின் நேற்றையக் கூட்டத்தில், சிவராசா, சுங்கை சிப்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியன், பேராக் மாநில பத்து காஜா நாடாளுமன்ற ஜசெக உறுப்பினர் வ.சிவகுமார், பேராக் ஈப்போ பாராட் ஜசெக எம்பி மு.குலசேகரன், சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் ஜசெக எம்பி சார்லஸ் சந்தியாகு, பினாங்கு மாநிலத்தின் பத்து காவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய நாடாளுமன்றத்திர்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே தமிழ்ப்பெண் எம்பியுமான கஸ்தூரி பட்டு, கெடா மாநிலத்தின் பாடாங் செராய் எம்பி கருப்பையா முத்துசாமி, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச பத்து தொகுதி எம்பி பி.பிரபாகரன் ஆகியோருடன் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ், ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களான கணபதி ராவ், ப. குணா, க. சாமிநாதன், மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் ஆகியோருடன் இன்னும பலரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் எதிரணியைச் சேர்ந்த 14 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்திருந்தாலும் இந்திய சமுதாய நலன் சார்ந்து குரல் கொடுப்பதற்காக ஒர் அணியினராக செயல்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

12-ஆவது ஐந்தாவதுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான சிறப்பு அம்சம் ஏதும் இடம்பெறாவிட்டாலும் வழக்கமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள், இந்திய சமுதாயத்திற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்காக அனைத்து இந்திய எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்கு முன் நாட்டில் நிறைவேற்றப்பட்ட 11 ஐந்தாண்டுத் திட்டங்களின்வழி இந்திய சமுதாயம் எட்டிய பலன், நிறைவேறாத வாக்குருதிகள் குறித்தெல்லாம் முறையாக தொகுக்கப்பட்டு, அது அரசின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றனர்.

நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை. நான்கு, ஐந்து மணி நேரம் காத்திருக்கும் வேளையில், ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதால் தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினை பற்றி எடுத்துரைக்க போதிய காலஅவகாசம் கிட்டுவதில்லை என்ற புகாரும் முன்வைக்கப்பட்டது.

ஐந்தாறு எம்பிக்களைக் கொண்டிருக்கும் கட்சிகள் எல்லாம் அமைச்சர் பதவிகளையும் மற்ற பொறுப்புகளையும் பெறுகிறபோது, நாம் 14 பேரும் ஒன்றுசேர்ந்து பிரதமரிடம் நமக்கான கோரிக்கையை முன்வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

இந்திய சமூக நலத்திற்காக மித்ரா என்னும் அமைப்பு மூலம் ஒதுக்கப்படும் நிதி பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதுடன் அதனால் இந்திய சமுதாயம் அடையும் முன்னேற்றம் குறித்தும் எந்தத் தரவும் இல்லை என்பதால், இதை ஓர் அறவாரியத்தின் மூலம் நிருவகிக்க முயற்சி மேற்கொள்ளலாம். இதன் தொடர்பில் நாம் வரையறை செய்துகொண்டு அதன் பின் அரசாங்கத்தை அணுகலாம என்றும் கருத்து பரிமாறப்பட்டது.

சாதாரண பொதுமக்களுக்கு ஐந்தாண்டுத் திட்டம் என்றால் என்னவென்றே தெரியவில்லை; இது என்ன 12-ஆவது திட்டமா? அப்படி யென்றால் இதற்கு முன் பதினோரு ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா என்றுகூட ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர் என்று இரண்டொரு மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அனுபவத்தை தெரிவித்தனர்.

மலேசியத் தமிழர்களின் தாய்மொழி வளர்ச்சிக்கு ஆதாரமான தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து முறையான அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை அனைவரும் ஒருமுகமாக அரசுக்கு கொடுக்க வேண்டும். இதன் தொடர்பில், ஒவ்வொரு பள்ளி குறித்தும் துள்ளியமான விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்றனர்.

இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுவது பரவலாக்கப்பட வேண்டும். அதைப்போல உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா, லெபோ பண்டார் உத்தாமாவில் அமைந்துள்ள பண்டார் உத்தாமா சிட்டி செண்டர் வளாகத்தில் சிவராசா தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் சமூக நலம், கல்வி, தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி, இந்து அறப்பணி வாரியம், பி-40 தரப்பு குடும்பங்களுக்கான மறுமலர்ச்சி போன்ற தலைப்புகளில் தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு அவற்றில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

அக்டோபர் 27-இல் அறிவிக்கப்பட இருக்கும் 2022 நிதி நிலை அறிக்கையில், இந்திய சமுதாயத்திற்கான சிறப்புத் திட்டங்கள் இடம்பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட வேளையில், அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நிதி யாவும் முறையாக பயன்படுத்தப் பட வேண்டுமே அல்லாமல் அதில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளித்தால், அதனால் காலப்போக்கில் பின்னடைவு ஏற்படும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தெக்குன் சிறு-குறு தொழில் கடன் சம்பந்தமாக பெறப்பட்ட நிதியில் ஒருபகுதி திருப்பி அளிக்கப்பட்டதும் குறித்து நினைவுகூரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றும் சேவை குறித்து, பொதுமக்களிடம் அதிருப்தி நிலவுவதற்குக் காரணம் அவர்களுக்கு உரிய முறையில் தகவல் கிடைக்கவில்லை என்பதுதான். எனவே, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு, கடப்பாடு குறித்தெல்லாம் அடிக்கடி நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்த வேண்டும் அல்லது செய்தி அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்ற கருத்தையும் ஒருசிலர் முன்வைத்தனர்.

நக்கீரன் – Nakkeeran 013-244 36 24