LOADING

Type to search

கனடா சமூகம்

கனடியப் பூர்வகுடி மக்களுக்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய தேசிய நாளை அனுஸ்டிக்கும் இன்றைய நாளில் கோர்ட் டவுனி & சேனி வென்ஜாக் நிதியத்துக்கு 20,000 கனடிய டொலர்களை, கனடியத் தமிழர் பேரவை வழங்குகிறது

Share

கனடியத் தமிழர் பேரவை கனடிய மக்களோடு இணைந்து பூர்வகுடி மக்களுக்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாளையும், ஒறேஞ் நாளையும் அனுசரிக்கிறது. வதிவிடப் பள்ளிகளில் பலியான சிறுவர்களுக்கும் மற்றும் அதிலிருந்து உயிர் தப்பி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், அவர்கள் அனைவரது குடும்பங்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை இன்றைய நாளில் கௌரவத்தைச் செலுத்துகிறது.

பழங்குடியின மக்கள் அனுபவித்த திட்டமிடப்பட்ட முறைமையிலான ஒடுக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகள், தொடர்ச்சியாக அவர்கள் இன்றும் அனுபவிக்கும் வலி மற்றும் அவர்கள் மீது இன்றும் தொடரும் அநீதிகள் ஆகியவற்றில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகளைப் பிரகடனப்படுத்தும் நாள் இன்றைய செப்ரெம்பர் 30!

இந்த ஆண்டு ஸ்காபுரோவில் உள்ள தொம்சன் பூங்காவில் கனடியத் தமிழர்களின் பதின்மூன்றாவது வருடாந்த நிதிசேர் நடை கனடியத் தமிழர் பேரவையால் பூர்வகுடி மக்களுக்கான ஆதரவை வழங்குமுகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன்போது 20,000 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டது. இந்த ஆண்டு நடைப்பயணத்திலிருந்து கிடைத்த இந்த நிதி “டவுனி மற்றும் சேனி வென்ஜாக் நிதியத்துக்கு” (DWF) வழங்கப்படுகிறது. கனடாவின் பூர்வீக குடிகளுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தை இந்த நிதியம் ஊக்குவிக்கிறது. மேலும் இந்த நிதியம், கனடாவில் உள்ள பழங்குடி மக்களின் உண்மையான வரலாறு மற்றும் வதிவிடப் பள்ளிகளின் சரித்திரம், அவர்களது மரபு பற்றிய கல்வியைக் கற்க உதவுகிறது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இன்றைய தேசிய நாளை முன்னிட்டு, கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் Six Nations of the Grand River பிரதேசத்தில் அமைந்த இருப்பிடமொன்றில் DWF நிதியத்துக்கான 20,000 கனடிய டொலர்கள் காசோலையை வழங்குவார்கள்.

DWF நிதியத்துக்குக் கனடியத் தமிழர் பேரவை பங்களிப்பதன் ஊடாக கனடா, பழங்குடியின மக்களுக்கு இழைத்த மிக மோசமான வரலாற்றை உணர்ந்து தமிழ்க் கனடிய குடியிருப்பாளர்களுக்கு இது குறித்த கல்வியைக் கற்பிப்பதில் கனடியத் தமிழர் பேரவை உறுதியாக உள்ளது. இது பூர்வீக்குடி மக்களின் தொடரும் போராட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றியும் கனடியத் தமிழர்கள் அறிய உதவும் எனக் கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் சிவன் இளங்கோ கூறியுள்ளார்.

Six Nations of the Grand River, சமாதானச் சுமூகச் சூழ்நிலையின் கீழ் அனைத்து “ஹவுடெனோசௌனி” மக்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த ஆற்றுப்படுக்கையானது “ஹவுடெனோசௌனி” தேசிய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரேயொரு பழங்குடித் தேசியச் சமூகமாகும். கிராண்ட் ஆற்றின் கரையில் அமைந்துள்ள, Six Nations of the Grand River கனடாவில் பழங்குடி மக்கள் அதிக தொகையில் வாழும் பிரதேசம் ஆகும்.

கனடாவின் பழங்குடியின மக்களின் வரலாறு மற்றும் அவர்களைப் பற்றிய நமது விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான கூட்டுப் பொறுப்பை அடையாளம் காணவும், நல்லிணக்கத்தை நோக்கிப் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து உறுதியான வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதைக் கனடியத் தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்துகிறது.

கனடியத் தமிழர் நிதிசேர் நடை வலைத்தளம்: http://www.tamilcanadianwalk.ca
ட்ருவிற்றர்: https://twitter.com/ctconline

ஊடகத் தொடர்புகளுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

விதுசாயினி பரமநாதன்,
இணைத் தலைவர்,
2021 கனடியத் தமிழர் நிதிசேர் நடை