LOADING

Type to search

பொது

ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை – 969

Share

திருமதி. வசந்தாநடராசன் B.A.,
416- 332-0269

கல்லாதமாந்தரின் கண்ணீரை நீக்கிடும்
கருவண்ண அன்னை நீயே
கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான
காவியச் சுடரும் நீயே
வில்லாகவேலாக வினைதீர்க்கும் மருந்தாக
விளங்கிடும் சக்திநீயே
வேண்டிடும் நல்வரம் விரைவாகத் தந்திடும்
ஆவட்டுடைக் காளி உமையே.”

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழ் ஈழத்தின் தன்னிகர் இல்லாச் சிறப்புடன் குரைகடல் ஓத, நித்திலம் கொழிக்கும் புண்ணிய பூமியாகத் திகழ்வது விளங்குவது திருகோணமலை. இந்நிலப்பரப்பின் அழகை வர்ணிப்பது எளிதன்று. அலையெறிந்து ஆர்ப்பரிக்கும் கடல் முப்புறமும் காணப்பட, இயற்கையின் எழில் கொஞ்ச மிகப் பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் தன்னகத்தே கொண்டதோடு, ஐம்பதுக்கும் மேற்பட்ட
ஆலயங்களையும்; தன்னுள் அடக்கிய புண்ணிய பூமியாகத் திருகோணமலை திகழ்கின்றது.

பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றாகத் திகழும் திருக்கோணேஸ்வரத்திற்குச் சற்றுத் தூரத்தில் அருளும், புகழும் கொண்ட ஸ்ரீ பத்திரகாளி கோயில் அமைந்துள்ளது. திருகோணமலைப் பட்டினத்தின் இருதயம் போல விளங்கும் இக்கோயிலைக், காளிகோயில் என இவ்வூர் மக்கள் அழைப்பர். இக்கோயில், திருகோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து ஏறக்குறைய ஒரு கிலோ மீற்றர் தூரத்தில், பேருந்து நிலையத்திற்குச் சமீபமாக, டொக்கியாட் வீதிக்கு அருகாமையில், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்குச் சமீபத்தில் அமைந்துள்ளது. அருகே ஆலடி விநாயகர் ஆலயம் காணப்படுகின்றது.

ஆலயத்திற்கு எதிரே பரந்து காணப்படும் விளையாட்டு மைதானமும், அதையடுத்துக் காணப்படும் ஆர்ப்பரிக்கும் இந்துசமுத்திரமும் இவ்வாலயத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றது. இவ்வாலயம் கிழக்கு நோக்கிய சந்நிதியுடன் காணப்படுகின்றது.

இவ்வாலயத்தில் நின்றவாறு திருக்கோணேஸ்வரத்தைத் தரிசிக்க முடியும். ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வரலாறு தொன்மையுடையது. வாய்மொழிக்கதைகள், பாடல்கள்
போன்றவற்றின் மூலம், இவ்வாலயம் குளக்கோட்டு மன்னனால் கட்டப்பட்டதென்று அறியமுடிகின்றது.

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த குளக்கோட்டு மன்னன், திருக்கோணேஸ்வரத்தைப் புதுப்பித்துக் கட்டியதோடு, காவல் தெய்வமாக ஸ்ரீ பத்திரகாளி கோவிலை நிறுவினான். அக்காலந்தொட்டு ஸ்ரீ பத்திரகாளி அன்னையானவள், எல்லைக் காளியாக விளங்கி வருகின்றாள்.

இக்காலந்தொட்டு இவ்வாலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கி வருவதோடு, சோழர் இலங்கையை ஆண்ட காலத்தில் மிகச் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளது. இவ்வாலயத்திற்குரிய கல்வெட்டுக்கள், பழைய சான்றுகள், கர்ண பரம்பரைக் கதைகள் மற்றும் வாய்மொழிக்கதைகள் இவற்றை ஆதாரமாகக் காட்டியும், ஆலய அமைப்பு, மற்றும் ஆலயத்திலுள்ள விக்கிரகம், வாகனம், தகளி, மற்றும் இங்குள்ள பொருள்களையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள், இவ்வாலயம் முதலாம் இராஜேந்திர சோழனுடைய காலமாகிய கி.பி 11 ஆம் நூற்றாண்டில், சிறப்புற்று இருந்திருக்க வேண்டுமெனச் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்கூற்றுக்களிலிருந்து இவ்வாலயம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மிகத் தொன்மை வாய்ந்த ஆலயம் என்பதும்
புலப்படுகின்றது.

இவ்வாலயத்தின் தோற்றம் பல நூற்றாண்டுகளைக் கொண்டதோடு, செல்வச்சிறப்புமிக்க ஆலயமாகவும் விளங்கியுள்ளது. போத்துக்கேயர் கி.பி 1505 ஆம் ஆண்டு இலங்கையுள் காலடி எடுத்து வைத்தனர். பின்னர் ஈழத்திலுள்ள ஆலயங்களின் செல்வங்களைக் கொள்ளையிடும் நோக்கோடு அவற்றை நிர்மூலமாக்கி அழித்துள்ளனர். கி.பி 1624 ஆம் ஆண்டு கொள்ளையிடப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆலயங்களுள், திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயமும் அடங்கும். இதன் பின்னர் இவ்வாலயம்
புதுப்பிக்கப்பட்டமைக்கு கர்ண பரம்பரைக் கதையொன்று வழக்கிலுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து அந்தணரொருவர் தவம் செய்வதற்காக வடகயிலை நோக்கிப் புறப்பட்டார். அன்னை ஸ்ரீ பத்திரகாளி அவர் கனவிலே தோன்றி, வட கயிலை செல்ல வேண்டாம், தென்கயிலை நோக்கிப்பபுறப்படு. தக்கிணகைலாயம் என்று அழைக்கப்படும்
திருகோணமலையில், தொங்கிச் சிதம்பரத்தம் பூமரத்துக்கு அடியில் நான் ஒரு கிடாரத்தினுள் இருக்கின்றேன். என்னை வெளியே எடுத்துப் பூசை செய்து தவத்தை மேற்கொள் என்று பணித்துள்ளாள்.

அந்நியர் ஆக்கிரமிப்பின்போது, ஆலய அந்தணர்களும், ஏனையோரும் விக்கிரகங்களையும், ஆலயப்பொருட்களையும் மண்ணுள் புதைத்து வைத்தும், கிணறுகளில் போட்டு மூடியும், தூர இடங்களுக்கு விக்கிரகங்களையும், ஏனைய பொருட்களையும் எடுத்துச் சென்று காப்பாற்றிய பல சம்பவங்களை ஆலய வரலாறுகளை ஆராயும் போது அறியலாம். இவ்வாறான விக்கிரகங்கள் காலதேச வர்த்தமானப்படி குறிப்பிட்ட அருளாளர்களின் மனதிலே தமது இருப்பிடத்தைக் காட்டி, வெளிக்கொண்டுவந்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறான ஒரு சம்பவமாகவே மேற்கூறிய சம்பவமும் காணப்படுகின்றது.

-வளரும்……