LOADING

Type to search

அரசியல்

தமிழ்நாடு அரசால் இடமாற்றப்படும் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவ வசதியற்ற கூடலூருக்கு மாற்ற வேண்டும்!

Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கவிருப்பதால் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ள தமிழக அரசு அதனை மருத்துவ வசதியற்ற, அருகில் வேறு எந்த நகரத்திற்கும் எளிதாக செல்ல வழியற்ற மலைப்பகுதியான கூடலூருக்கு மாற்றுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

கூடலூர் சட்டமன்றத் தொகுதி முழுமைக்கும் உள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது மருத்துவத் தேவைக்குக் கூடலூர் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மலைப்பகுதி என்பதாலும், மிக நீண்ட பயணத் தூரம் காரணமாகவும் மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு சேர்க்கும் முன்னரே பல நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்ற அவலநிலை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் கூடலூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கூடலூர் பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உதகையில் செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை மருத்துவமனையைக் கூடலூருக்கு மாற்றவதோடு பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்தது. அதுமட்டுமின்றித் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சரும் கூடலூருக்குத்தான் மருத்துவமனை மாற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மாவட்ட மருத்துவமனையைக் குன்னூருக்கு மாற்றி அரசாணை வெளியிடப்போவதாக வரும் அச்சு ஊடக செய்திகளால் கூடலூர் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது நீண்ட நாட்களாக மருத்துவ வசதிக்கேட்டு போராடி வரும் கூடலூர் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், மனத்துயரத்தையும் அளித்துள்ளது.

ஏற்கெனவே கொரானா பெருந்தொற்றுக் காலத்தில் மேல்சிகிச்சைக்காகக் கேரள மருத்துவமனையைத் தேடிச் சென்ற கூடலூர் மக்கள் பலர் முறையான சிகிச்சை கிடைக்கப் பெறாமல் உயிரிழந்தனர் என்பது வேதனை தரும் உண்மையாகும். எனவே எந்தவிதத்தில் பார்த்தாலும் உதகை மற்றும் கோவை நகரங்களுக்கு மிக அருகில் உள்ள குன்னூருக்கு மாற்றுவதைவிட, எல்லா நிலையிலும் பாதிக்கப்பட்ட கூடலூர் பகுதிக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையை மாற்றுவதே மருத்துவ வசதியின்றி அல்லலுறும் மக்களுக்கு இன்றியமையாத பயன்பாடாக இருக்கும். அதுமட்டுமின்றி மேல்சிகிச்சை வேண்டி கேரள போன்ற வெளிமாநிலங்களுக்குப் பயணிப்பதும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும். மேலும் குன்னூர் பகுதி மக்களுக்காகத் தனியாக ஒரு சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனையைக் குன்னூரில் அமைக்கவும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்

ஆகவே தற்போதைய அவசர உடனடித் தேவையாக, மருத்துவ வசதியின்றித் தவிக்கும் கூடலூர் மக்களுக்குப் பயன்படும் விதமாக, தமிழ்நாடு அரசு இடமாற்றப்படும் நீலகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையைக் கூடலூருக்கு மாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியிறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.