LOADING

Type to search

பொது

சென்னையில் தொழிலதிபர் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளியான கார் டிரைவர் சிக்கியது எப்படி?

Share

சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா. இவர் ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக ஸ்ரீகாந்தும், மனைவி அனுராதாவும் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருக்கின்றனர்.

சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த ஸ்ரீகாந்தும், அனுராதாவும் சனிக்கிழமை அதிகாலை சென்னை வந்திறங்கினர். சென்னை வந்ததும் ஒரு செல்பி எடுத்து, தாங்கள் சென்னை வந்துவிட்டதாக அமெரிக்காவில் இருக்கும் மகனுக்கும், மகளுக்கும் புகைப்படம் அனுப்பியதோடு, தங்களை அழைத்துச் செல்ல கார் ஓட்டுநர் கிருஷ்ணா வந்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.

பின்னர், சில மணி நேரம் கழித்து ஒரு 8 மணியளவில் தம்பதியின் மகன் சஸ்வத் அழைக்கும் போது, தாய், தந்தையின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது.

உடனே கார் ஓட்டுநர் கிருஷ்ணாவின் செல்போன் எண்ணுக்கு அழைத்த சஸ்வத், அப்பா, அம்மா என செய்கிறார்கள் என கேட்டிருக்கிறார். இருவரும் பயண அசதியில் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறிய கிருஷ்ணா, தாம் காய்கறி வாங்க வந்திருப்பதாகவும், வீட்டுக்குச் சென்று பேச சொல்வதாகவும் கூறியிருக்கிறான்.

ஆனால், நீண்ட நேரமாகியும் திரும்ப அழைப்பு வராததால் மீண்டும் கிருஷ்ணாவுக்கு சஸ்வத் அழைத்த போது, அவனது பதில் தடுமாற்றமாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் இருந்துள்ளது.

சந்தேகமடைந்த சஸ்வத் அடையாறிலுள்ள உறவினர் வீட்டுக்கு போன் செய்து, தனது வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டுப்போட்டு பூட்டிக் கிடந்ததோடு, காரும் இல்லாததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் போலீசார், பூட்டை உடைத்து பார்த்த போது, நகை, பணம் திருடப்பட்டு இருந்ததோடு, வீட்டில் ஆங்காங்கே ரத்தக்கறையும் இருந்துள்ளது.

விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், கார் ஓட்டுநர் கிருஷ்ணைவை பிடிக்க தீவிரம் காட்டினர். செல்போன் சிக்னலை வைத்தும், கிருஷ்ணா ஓட்டிச் சென்ற ஸ்ரீகாந்தின் இன்னோவா கார் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபாளையம் சுங்கச்சாவடியை கடந்து சென்ற சிசிடிவியை வைத்தும் அவன் ஆந்திர மாநிலம் நோக்கி காரில் தப்பிச் செல்வது தெரியவந்தது.

பின்னர், ஆந்திர போலீஸ் உதவியுடன் சுமார் 60கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று ஓங்கோல் அருகே கிருஷ்ணாவை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த கிருஷ்ணாவின் கூட்டாளி ரவி ராயையும் கைது செய்தனர்.

விசாரணையில் கிருஷ்ணா போட்ட திட்டப்படி இருவரும் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அவரது மனைவியையும் கொலை செய்து, நெமிலிசேரியிலுள்ள பண்ணை வீட்டில் புதைத்தது தெரியவந்தது.

கிருஷ்ணாவின் தந்தை பதம்லால் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் விசுவாசமான காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார். இதன் மூலம் பதம்லாலின் மகன் கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு நெருக்கமானவனாக மாறியிருக்கிறான்.

ஓட்டுநராக வேலை செய்து வந்த கிருஷ்ணாவுக்கு, ஸ்ரீகாந்த் தனது வீட்டிலேயே ஒரு அறையும் ஒதுக்கி தங்க வைத்திருக்கிறார். ஒரு நாள் காரில் சென்ற போது 40கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை விற்பனை செய்வது குறித்து, ஸ்ரீகாந்த் தொலைபேசியில் பேசியதை கேட்ட கிருஷ்ணா, அந்த பணத்தை அபகரிக்க தனது கூட்டாளி ரவி ராவிடம் இணைந்து திட்டம் தீட்டியிருக்கிறான்.

பண்ணை வீட்டில் வேலை செய்த தனது தந்தை விடுமுறை எடுத்துவிட்டு, நேபாளம் சென்றிருந்ததை சாதகமாக்கிக் கொண்ட கிருஷ்ணா, பக்காவாக திட்டம் போட்டு ஏற்கனவே பண்ணைவீட்டில் சவக்குழி எல்லாம் தோண்டிவைத்து, முதலாளி குடும்பத்தை கொன்று புதைத்திருக்கிறான்.

திருமணமாகி மனைவியை பிரிந்த கிருஷ்ணா தனது 15 வயது மகனை டார்ஜிலிங்கிலுள்ள பள்ளியில் படிக்க வைக்க முயற்சித்திருக்கிறான். அப்போது தான் அவனுக்கு ரவிராவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மகனை படிக்க வைக்க அதிக பணம் தேவைப்படும் என்பதால், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணா, ரவிராவிடம் இருந்து சுமார் ஆயிரம் சவரன் நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்திய இன்னோவா கார், 50கிலோ வெள்ளிப்பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொழிலதிபர்கள், பணக்காரர்கள் நகை, பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் காவல்துறையினர், பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் எனவும், அத்தோடு வீட்டு வேலைக்காரர்கள் முன் பணம் சம்பந்தமாகவோ, சொத்து மதிப்பு சம்பந்தமாக எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.