LOADING

Type to search

பொது

கடலூர் அருகே கழிவறைக்காக உயிரை மாய்த்த காதல் மனைவி..!

Share

கழிப்பறையின் தேவையை, சமுகத்திற்கு செவிப்பறையில் அறைந்தார் போல காட்சிகளால் ஜோக்கர் படம் சுட்டிக்காட்டிய நிலையிலும் அரசின் இலவச கழிப்பறை திட்டம் இன்னும் கிராமப்புற வீடுகளில் உள்ள மக்களை முழுமையாக சென்றடைந்தபாடில்லை..!

கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் ரம்யா. எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரை இரண்டு வருடமாக விரட்டி விரட்டி காதலித்த கடலூர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரம்யா மனதில் காதல் கோட்டை கட்டினார்.

கடந்த மாதம் 6-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலி ரம்யாவுக்கு தாலி கட்டி திருமணம் செய்ததால் தங்கள் காதலுக்கு மரியாதை செய்தார் கார்த்திகேயன். திருமணம் முடிந்து காதல் கணவனின் வீட்டிற்கு சென்ற பின்னர் தான் காதலன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது புதுப்பெண் ரம்யாவுக்கு தெரியவந்தது.

அப்போதைக்கு ரம்யாவை சமாதனம் செய்த கார்த்திகேயன், வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறியதோடு, இல்லையென்றால் தான் வீட்டில் கழிவறை கட்டிவிட்டு அழைத்துச்செல்கிறேன் எனக்கூறி திருமணமான மறு நாளே ரம்யாவை அவரது தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

தனது வீட்டில் கழிப்பறை கட்டவோ, கழிப்பறை உள்ள வேறு வீட்டிற்கோ அழைத்து செல்லவோ நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஏமாற்றுவது குறித்து கார்த்திகேயனிடம், கேட்டதால் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தன்னை உருக உருக காதலித்த கார்த்திகேயனால் தனக்கு அடிப்படை வசதியான கழிப்பறையை கூட வீட்டில் கட்டிதர இயலவில்லையே என்று ரம்யா மனமுடைந்தார்.

கழிப்பறை இல்லாத கணவன் வீட்டில் எப்படி குடித்தனம் நடத்துவது? என்ற விரக்தியில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகின்றது. மயங்கிய நிலையில் தொங்கிய ரம்யாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரம்யாவின் தாய் மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரில் வீட்டில் கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்காதது குறித்து தனது மகள் , கணவனிடம் நியாயமான கேள்வி எழுப்பியதற்கு ஆத்திரப்பட்டு ஆபாசமாக பேசிய கணவன் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே ஆவதால், இந்த சம்பவம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரித்து வருகிறார்.

காதலி பின்னால் சுற்றி அவள் மனதில் காதலுக்கு கோட்டை கட்டும் அதே நேரத்தில் காதலி தனக்கு மனைவியாகி வாழப்போகும் வீடு என்று கருதியாவது ஒரு கழிப்பறையை கட்டி இருந்தால் இந்த விபரீத சம்பவம் அரங்கேறி இருக்காது என்பதே உறவினர்களின் ஆதங்கமாக உள்ளது.