LOADING

Type to search

அரசியல்

போதைப்பொருள், கொலை, இடையறா வன்முறை: இதுதான் கமலஹாசனின் 2-ஆவது விக்ரம்

Share

நடிப்பிலும் ஒரு நடிப்பு என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது.

-நக்கீரன்

கோலாலம்பூர், ஜூன் 05:

கண்களுக்கு பசுமையையும் எண்ணத்திற்கு வெண்மையையும் கொஞ்சம்கூட அளிக்காமல், முழுக்க முழுக்க இருள்சூழ்ந்த வன்முறைக் காவியமாக உருவாகியுள்ள புதிய விக்ரம் படம், விட்டில் பூச்சிகளைப் போன்ற இளம் இரசிகர்களுக்கு வேண்டுமானால் ‘வேற லெவல்’-ஆக இருக்கலாம்.

ஆனால், உலகில் உள்ள அத்துணை ஆயுதங்களையும் காட்டிக் கொண்டு, படம் முழுக்க இரத்தக் கவிச்சை அடிக்கும் பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, போதைப் பொருளைப் பயன்படுத்துவது ஆண்மைக்கு அழகு என்பதைப் போல சித்தரித்துக் கொண்டு இப்பொழுது தமிழர் வாழும் நிலமெல்லாம் படமெடுத்து ஆடும் இந்த விக்ரம் படத்தில், சிந்தனைக்கான சிறு அம்சம்கூட சிறிதளவும் இல்லை;

தமிழ் நாட்டின் தொலைக்காட்சி ஊடகம், கோடம்பாக்கம், தின மலர்-குமுதம்-ஆனந்த விகடன் உள்ளிட்ட பார்ப்பன ஊடகத்துடன் சேர்ந்து தமிழ் இளைஞர்களும் தொடர்ந்து உச்சரிக்கும் சொல்லாடல்களான வேற லெவல், சைக்கிள் கேப், டிப்சோ டிப்ஸ், ஃப்லெக்சியோ ஃப்லெக்சி என்பதெல்லாம் என்ன தமிழ் என்று புரியவில்லை.

இந்த நூற்றாண்டுக்குள் அடியற்றுப் போகும் மொழிகளில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது என்று ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ மன்றம் எச்சரித்தது உண்மைதான் போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.

திரைப்பட வாய்ப்பு மங்கிய நேரத்தில் கமலஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம், பல செய்திகளை சொல்லாமல் சொன்னது; கமலஹாசனின் ஆழ்மனதில் பொதிந்துள்ள அம்சம் யாவும் வெளிப்படவும் அது துணை புரிந்தது.

அவரின் கட்சியின் பெயரில் உள்ள மையம் என்னும் சொல்லில் முதல் எழுத்தான மகர ஐகாரமான ‘மை’ என்பதற்குப் பதிலாக ‘ம’கர உயிர்மெய் எழுத்தையும் ‘ய்’ என்னும் மெய்யெழுத்தையும் பயன்படுத்தும்படி கமலஹாசனுக்கு சொல்லிக் கொடுத்த தமிழ் மேதை எதுவென்று தெரியவில்லை.

தொல்காப்பியர் வகுத்துள்ள தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெற்றுள்ள 247 எழுத்துகளில் ஒன்றான ‘மை’ என்னும் உயிர்மெய் எழுத்தை கொலை செய்ய கமலஹாசன் யார்? முதலில், மையம் என்பதே தமிழ்ச் சொல்ல அல்ல;

அதைப்போல, வகைதொகையின்றி கொலைச் சம்பவகள், அதுவும் கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ள திரைப்படமான விக்ரம் என்ற சொல்லும் தமிழ் அல்ல;

பொதுவாக, கோடம்பாக்கத்துக் கூட்டம் தமிழ்க் கொலை புரிய ஆரம்பித்து நெடுங்காலம் ஆகிறது.

ஏபிசிடி, ஆம்பள, மாஸ்டர், மஞ்சப்பை. ஆர்.ஆர்.ஆர்., கூர்கா, கே.ஜி.எஃப்., ஜாக்பாட், ராட்சசி, சாகோ, ரம்மி, சிக்சர், பிகில் என்றெல்லாம் நூற்றுக் கணக்கான தமிழ்த் திரைப் படங்கள் வேற்றுமொழி பெயர்களில் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றில் பிகில் என்பது பெருங்கேவலமான சொல். அது, எந்த மொழியிலும் இல்லாத சொல். ஊதல் என்னும் பொருள் கொண்ட ‘Whistle’ என்ற ஆங்கிலச் சொல்லைதான் பிகில் என்று கொச்சை நடையில் பயன்படுத்துவது, படிப்பறிவில்லாத அல்லது அரியாத சிலரின் வழக்கச் சொல்லாக இருந்தது.

இத்தகைய கேவலமான பிகில் என்னும் சொல், கமலஹாசன் போன்ற நடிகர்களின் பாடல் காட்சிகளிலும் இடம்பெற்ற நிலையில், அதையே ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைத்த கோடம்பாக்கத்து போக்கிரிக் கூட்டம், தமிழ் மொழிக்கு அப்பட்டமான கேடு விளைவித்து வருகிறது.

ஆண்பிள்ளை என்பதைத்தான் வளைத்து நசுக்கி ‘ஆம்பள’ என ஒரு சிலர் பேசுவதுண்டு; அதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைப்பதும் அதைப்போல மஞ்சள் பை என்பதை பேச்சு நடையில் சொல்லும் ‘மஞ்சப்பை’ என்பதையும் ஒரு படத்திற்கு பெயராக வைத்ததெல்லாம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரும் தமிழரல்லாதாருமான கூத்தாடிக் கூட்டம் கொட்டமடுத்துப் புரியும் அப்பட்டமான தமிழ்க் கொலை.

இதில் வேடிக்கை என்றால், மஞ்சள் பை என்பதன் திரிபுவடிவமான மஞ்சப்பை என்பதை, அண்மையில் நெகிழிப் பைகளை விளக்கி, துணிப் பைகளைப் பயன்படுத்தும்படி பொதுமக்களை ஊக்கப்படுத்துவதற்காக இன்றைய தமிழ் நாட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கும் ‘மஞ்சப்பை’ என்று பெயர் வைத்தது இன்னும் கொடுமையானது.

துணிப் பையின் அடையாளமான மஞ்சள் பையை, மஞ்சள் பை என்று சொல்வதில் இந்தப் பாழாய்ப் போனவர்களுக்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை. இதன் தொடர்பில், கொடைக்கானலில் வடிவமைக்கப்பட்ட மஞ்சள் பை மலர் வடிவமைப்பில்கூட, ‘மஞ்சப்பை’ என்றுதான் இருந்தது.

இவ்வாறாக, திரைப்படத்தின் பெயர், வசனம், பாடல் என அனைத்துக் கூறுகளிலும் தமிழைக் கொலைச் செய்ய துணிந்துவிட்ட கோடம்பாக்கத்துக் கூட்டத்தில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத வேற்றுமொழிக் காரர்களுக்கு தமிழர்களும் துணை போவது இன்னும் வேதனையானது!

ஃபிளிம் காட்டியே பிளிம் காட்டியே ஃபீலிங் ஏத்தாதே என்று பாடல் எழுதிய பிண்ணாக்குக் கவிஞன், அதை மனமுருகிப் பாடிய தெருவோரப் பாடகன், இசை அமைத்த புறம்போக்கு இசை அமைப்பாளன், இப்பாடலுக்கு ஆட்டம் போட்ட மேனி மினிக்கிகள், இதற்கான காட்சிகளை எடுத்த இயக்குனன், படத் தயாரிப்பாளன் உட்பட அத்துணை பேரும் நாசமாய் போகட்டும்.

கோடம்பாக்கத்தில் மட்டும் நில நடுக்கம் ஏற்பட்டு, அந்த இடமே அடையாளம் தெரியாமல் அழிந்து போகட்டும்; இந்தத் தமிழ்க் கொலைக் கூட்டமும் ஒழியட்டும்.

இல்லாவிட்டால், திரைப்பட வாய்ப்பு மங்கிய நிலையில், ஆட்டமும் பாட்டமும் ஓய்ந்து, மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் அரசியலிலும் மொத்துப்பட்டு, கடைநிலைக்கு சென்றபின், இளைஞர்களை மயக்குவதற்காக போதைப் பொருளையும் துப்பாக்கையையும் வெடிகுண்டுகளையும் காட்டியபடி கழுத்தைட்யும் கால் நரம்பையும் அறுத்து வரிசையாக கொலை செய்யும் காட்சிகளைக் கொண்டு ஆயிரம் விக்ரம்-களைத் தயாரிப்பது கோடம்பாக்கத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பவர்கள் பகவத் கீதையை படிக்க வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை என்றும் சொன்ன கன்னட மொழிபேசும் சூரப்பா போன்றவர்களுக்கு ஆதரவு அளித்த கமலஹாசன்; கலைஞர் மு.கருணாநிதி இறந்தபின்னும் அவரை சக்கர நாற்காலி என்று குத்தலாக விமர்சனம் செய்துவிட்டு பின்னர் 2 நாட்கள் கழித்து அறிவாலயம் சென்று மண்டியிட்டு வந்த கமலஹாசன்; தமிழக இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்.

படத்தை படமாக பார்க்க வேண்டும்; அத்துடன் நிறுத்திக் கொண்டு விமர்சனம் செய்யக்கூடாதென்று சொல்பவர்களுக்காக.. .,

படத்தைப் பார்த்துவிட்டு வெளியேவரும் விட்டில் பூச்சி இளைஞர்க் கூட்டம், “செம்ம”, “படம் சூப்பர்”, “நல்லா செஞ்சிருக்காங்க”, “ரொம்போ இண்ட்ரஸ்டிங்கா இருக்கு” என்றெல்லாம் சொல்லும் விமர்சனம் மட்டும் இனிக்குமோ?

கமலின் இந்த 2-ஆவது விக்ரம் படம் வெளிவந்த பின், எத்தனை பேர் குதிகால் நரம்பு அறுக்கப்பட்டு சாகப்போகிறார்களோத் தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் நாளைய சமுதாயம் திர்ப்பு சொல்லும்.

கமலஹாசன் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு, அன்பே சிவம் ஆகிய திரைப்படங்களை இந்திய பொதுவுடைமைக் கட்சிகள் கொண்டாடியதை புரிந்துகொள்ள முடிகிறது; தணிக்கை வாரியம் அனுமதி தராததால் வேறு பெயரில் வெளியான சண்டியர், தசாவதாரம், சலங்கை ஒலி, 16 வயதினிலே, குணா, கல்யாண ராமன், அபூர்வ சகோதரர்கள், ஆடுபுலி ஆட்டம், நிழல்கள், அபூர்வ ராகம் உள்ளிட்ட படங்களை வரிசையாக பார்த்த ரசிகர்களுக்கு, நான் உட்பட ஒருவித மயக்கம் இருந்தது உண்மைதான். கலைக்காக தன் வாழ்வை ஈகம் செய்து விட்டாரோ என்ற எணணமும் தோன்றியது;

எல்லாம் நடிப்பிலும் ஒரு நடிப்பு என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது.