LOADING

Type to search

கனடா அரசியல்

வெள்ளிவிழா கண்ட கனடா உதயன் வைரவிழா காண வேண்டும் என்றும் பொன்விழா கண்ட ஆசிரியர் பவள விழா காண வேண்டும் என வாழ்த்துகிறேன்!

Share

நக்கீரன்- கனடா

ஊடகத்துறை நீண்டகாலமாக அரசாங்கத்தின் ஒரு முக்கிய சக்தியாகக் கருதப்படுகிறது, சனநாயகம் என்ற தேருக்கு அது அச்சாணியாக விளங்குகிறது. அதன் செயல்பாட்டிற்கு அது மிகவும் முக்கியமானது, அது சனநாயகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகச் சித்தரிக்கப்படுகிறது. 1841 இல், தொமாஸ் கார்லைல் (Thomas Carlyle – (1795 – 1881) என்ற ஸ்கொட்டிஷ் எழுத்தினார் “நாடாளுமன்றத்தில் மூன்று துறைகள் இருப்பதாக பேர்க் (Burke) கூறினார். ஆனால் இந்த மூன்று துறைகளைவிட நான்காவது துறையும் இருக்கிறது. இந்தத்துறை ஏனைய மூன்று துறைகளையும் விட முக்கியமானது. அந்த நான்காவது ஊடகத்துறை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

சனநாயகத்தின் பிறப்பு மற்றும் வளர்ச்சிக்கு பத்திரிகைத்துறை ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது. உண்மைகளையும் கருத்துக்களையும் பரப்பி, கொடுங்கோன்மைக்கு எதிரான புரட்சியைத் தூண்டும் கருவியாக கார்லைல் பத்திரிகைகளைக் கண்டார். பல சகாப்தங்கள் கழிந்தும் கார்லைல் சொன்னது இன்றும் உண்மையாக இருக்கிறது.

யாருக்கும் அஞ்சாத அரசாங்கம் பத்திரிகைத்துறையைக் கண்டு அஞ்சுகிறது. இன்று பத்திரிகைகள் மட்டுமல்ல தொலைக்காட்சி, வானொலி, ஊடுவலை, இணையம் அல்லது இணைய தளம் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் பல்கிப் பெருகிவிட்டன. இன்றைய சமூக ஊடகங்கள் நாட்டில் புரட்சிகளைத் தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்தவை.

இன்றைய உலகில் ஒருவன் உணவு உண்ணாமல் கூட இருந்துவிடுவான் ஆனால் செய்திகளைப் படிக்காது அல்லது கேட்காது இருக்க மாட்டான்.

இலங்கையில் இருந்து மேற்குலக நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் சொந்தமாகவே பத்திரிகைகளை வெளியிடத் தொடங்கினார்கள். தொடக்கத்தில் ஒரு வாரப் பத்திரிகையை கிழமை தோறும் வெளியிடுவது வில்லங்கமாக இருந்தது. தோராயமாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் கணினி, தமிழ் எழுத்துரு, இணையதளம், கூகிள் இருக்கவில்லை. இன்று அப்படியில்லை. ஒரே நேரத்தில் ஒரு பத்திரிகையை உலகத்தின் மூலை முடுக்குகளில் வெளிக்கொணரலாம்.

ஆசிரியர் லோகேந்திரலிங்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கனடா உதயன் வார இதழை வெளியிட்டு வருகிறார். எழுத்துத் துறையில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்துவருகிறார். இது ஒரு அசுர சாதனை. நான் அறிய இங்கு பல வார, மாத ஏடுகள் இங்கு தோன்றி மறைந்துவிட்டன. கோவிட் 19 கொள்ளை நோய்க்குப் பின்னர் பல இதழ்கள் மெலிந்து விட்டன. ஆசிரியரது வெற்றிக்கான காரணிகள் எவை?

(1) முழுநேரப் பத்திரிகையாளர்

(2) கடின உழைப்பு

(3) செய்யும் தொழிலே தெய்வம் என்கிற ஈடுபாடு

(4) குடும்பம் மற்றும் நண்பர்களது ஆதரவு

ஒரேயொரு குறை. கனடாவில் பத்திரிகைத் தொழில் இலாபம் தரும் தொழிலல்ல. ஆசிரியரது உழைப்புக்கேற்ற ஊதியம் என்றால் அவர் இன்று ஒரு இலட்சாதிபதியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படியில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திருமண விழாவில் அவரோடு உரையாடிய போது “அச்சுக் கூடத்துக்கு 80,000 டொலர் கொடுக்குமதியிருக்கிறது” என்றார்!

வெள்ளிவிழா கண்ட கனடா உதயன் வைரவிழா காண வேண்டும் பொன்விழா கண்ட ஆசிரியர் பவள விழா காண வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நக்கீரன்

கனடா