திருக்குறள் கூறும் நன்றியின் மேன்மையும், உதவியின் தன்மையும்
Share
திருமதி. ஜோதி. ஜெயக்குமார் (B.Com,MA)
வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி-கனடா
நிறுவுநர், தமிழ்மொழி திருக்குறள் ஆசிரியர்.
தமிழிலே பிறந்து பல மொழிகளிலும் பரந்து அகிலமெங்கும் அறவழி காட்டி நிற்கும் அரியநூல் திருக்குறள். இன, மத பேதம் கடந்து உலகப் பொதுமை நெறியாக இந்நூல் விளங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினாலும் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ள வியக்கத்தகு நூலிது. தெய்வப்புலவர் முப்பாலிலும் தந்தருளிய 1330 குறள்களும் நமக்கு வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டி நிற்கின்றன. அறத்துப்பாலிற் பதினோராவது அதிகமாக அமைந்துள்ள “செய்ந்நன்றியறிதல்” என்ற அதிகாரத்தினை மையமாக வைத்து நன்றியின் மேன்மையையும், உதவியின் தன்மையையும் ஆராய்வதே எனது கட்டுரையின் நோக்கமாகும்.
“நன்றி” என்பது வெறும் வார்த்தையல்ல. உள்ளத்தோடும், உணர்வோடும் ஒன்றிணைந்தது. இது மாபெரும் மரியாதைக்குரிய சொல்லாகும். மிகவும் சக்தி வாய்ந்த சொல் இது. தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலுமே நன்றியெனும் வார்த்தை போற்றுதலுக்குரியதொன்றாகவே இருக்கிறது. தைப்பொங்கல் போன்று பல்லின மக்களும் நன்றிக்கான சிறப்பு நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
நாம் மிகப்பெரும் சாதனையாளர்களாக இருக்கலாம், ஆனால் ஏதோ ஒரு வகையில் நம்மைப் பெற்றவர்களையும், மற்றவர்களையும் சார்ந்துதான் வாழ்கிறோம். ஆதலால் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறிய விடயங்களுக்கும் நன்றியுள்ள மனிதர்களாக வாழவேண்டும். எமது ஒவ்வொரு முன்னேற்றங்களின் பின்புலத்திலும் யாரோ ஒருவர் இருக்கின்றார் என்ற புரிதல் நமக்குள்ளே இருந்தால் எமது மனம் தெய்வத்தன்மையடையும்.
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”
(செய்ந்நன்றியறிதல் அதிகாரம், குறள் 104)
சிறு உதவியாக இருந்தாலும், அவ்வுதவியின் நற்பயனை அறிந்தவர்கள் அந்த உதவியினைப் பனையளவாகக் கொள்வார்கள். பனை என்ற கர்ப்பகதரு முழுமையும் பயன் தரவல்லது. ஒருவர் செய்யும் உதவியினைப் பனை மரத்தோடு திருவள்ளுவர் ஒப்பிட்டு நன்றியின் மகிமையை உணரவைத்துள்ளார்.
பிறர் நமக்குச் செய்யும் உதவிகளை நாம் மறக்கலாகாது. மறந்து போதல் மனிதப்பண்பு அல்ல. நன்றியுணர்வுடன் வாழ்வதே சிறந்த பண்பாடாகும். ஆனால் நவீன உலகில் மனித மனங்கள் மாறிச் செல்கின்றன. நன்றியெனும் வார்த்தையின் பெறுமதியைப் பலரும் உணர மறுக்கின்றனர். பெற்றெடுத்து இன்னோரன்ன தியாகங்களின் மத்தியில் வளர்த்து, தம் பிள்ளைகளைச் சான்றோராக்கிய பெற்றோர்களை அவர்களது வயதான காலத்திற் சரியான முறையிற் பாதுகாக்காத பிள்ளைகள் நன்றியுணர்வு அற்றவர்கள். மனிதம் மரணித்துப்போவதற்கான அறிகுறிகளிவை.
வாழ்வில் எந்த நன்மைகளையும், அறங்களையும் மறந்தவர்களுக்கும் மீட்சி பெற வழியுண்டென்றும், ஒருவர் செய்த உதவியினை மறந்தவர்களுக்கு வாழ்வில் ஈடேற்றம் இல்லையென்றும் திருவள்ளுவம் இடித்துரைக்கின்றது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
(செய்ந்நன்றியறிதல் அதிகாரம், குறள் 110)
ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்….
(புறநானூறு, பாடல் 34)
ஒருவர் செய்யக்கூடாத பாவச் செயல்களாகக் கருதப்படும் பசுவின் முலையை அறுத்தல், தாலி அணிந்த பெண்ணின் கருவைச் சிதைத்தல், பார்ப்பனரைத் துன்பப்படுத்துதல் போன்றவற்றைச் செய்தவர்களுக்கும் அப் பாவங்களிலிருந்து விடுபடப் பிராயச்சித்தம் உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு அப்பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வேறு வழிகளில்லையென்றெழுதிய ஆலத்தூர் கிழாரின் செய்யுளையும் இங்கு ஒப்புநோக்கலாம்.
“இறைவன் வாழும் இடங்களிலொன்று சுவர்க்கம், இன்னொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம்” என்றார் எழுத்தாளர் ஐசாக் வோல்டன்(Izaak Walton) அவர்கள். உங்கள் வாழ்விலும் இதனை உணர்ந்திருப்பீர்கள். நன்றியுணர்வு என்பது நான், எனது என்ற அகந்தையை அகற்றி மனித மனங்களை ஐக்கியப்படுத்தவல்லது. எதிர்மறையான தருணங்களைக் கூட நேர்மறையாக மாற்றத்தக்க சக்திவாய்ந்த சொல் நன்றியாகும்.
ஒருவர் செய்த உதவியின் தன்மைகளை செய்யாமல் செய்த உதவி, காலத்தினாற் செய்த உதவி, பயன்தூக்கார் செய்த உதவியெனத் திருவள்ளுவர் வகைப்படுத்தியுள்ளார். அளவிற் சிறிதாக இருந்தாலும், உற்ற நேரத்திற் செய்யப்படும் உதவிகள் மாண்பு மிக்கவை. அவை நிலவுலகத்தினும் மிகப்பெரியவை.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
(செய்ந்நன்றியறிதல் அதிகாரம், குறள் 102)
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
(நட்பு அதிகாரம், குறள் 788)
இக்குறள் என்ன கூறுகிறது.? உடலில் இருந்து உடை நெகிழ்ந்து வீழும்போது உடன்சென்று உதவும் கரங்கள் போல ஒருவரின் துன்பத்தைக் கண்டபோது முன்வந்து உதவுவதே உற்ற நட்பிற்கு அழகாகும். ஆதலால் ஒருவரது இடரான காலத்தில் ஓடிச்சென்று உதவும் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்வதனாற்தான் இவ்வுலகு வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
(மூதுரை-17)
குளம் வற்றிப் போகையில் ஒட்டி உறவாடிய நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோல ஒருவரது துன்பமான காலத்தில் விலகிச் செல்பவர்கள் உண்மை உறவாகவோ, நட்பாகவோ இருக்கமாட்டார்கள். நீரற்றுப் போனாலும் அக்குளத்திலேயே செத்துமடியும் கொட்டி, ஆம்பல், நெய்தல் என்ற மலர்க்கொடிகள் போல ஒட்டி இருப்பவர்கள் மட்டுமே உண்மையானவர்கள். எனவே செழிப்பான காலத்தில் மட்டுமல்ல வறுமையின் போதும் சேர்ந்திருப்பவர்களே மேன்மக்களாவர்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
(செய்ந்நன்றியறிதல் அதிகாரம், குறள் 101)
நாம் உதவி செய்யாதபோதும் ஒருவர் எமது இடர்காலத்தில் மனமுவந்து உதவுகிறாரென்றால் அவருக்கு இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது. கேளாமலே முன்வந்து செய்யும் உதவி உயர்வானது. மண்ணுலகு, விண்ணுலகு என்ற பிரமாண்டங்களைத் திருவள்ளுவர் இக்குறளில் எடுத்தாண்டுள்ளமை செய்ந்நன்றியறிதலின் மேன்மையை மனிதகுலத்திற்கு உணரவைக்கவே.
ஒருவருக்கு நாம் உதவி செய்தால் நமக்குக் கைம்மாறாக ஏதேனும் கிடைக்குமெனப் பயன் கருதிச் செய்யும் உதவிகள் ஒருபோதும் உயர்வானவையல்ல. வாழ்வில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மிகப்பெரிய நன்மைகளை நமக்குச் செய்துவிட்டுப் போகிறார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்.? அவர்களிடமுள்ள மனிதநேயமே அதற்குக் காரணமாகின்றது. நாம் பயன் கருதாது அறம் செய்ய வேண்டுமென்று திருக்குறள் பின்வருமாறு கூறுகின்றது.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
(செய்ந்நன்றியறிதல் அதிகாரம், குறள் 103)
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு.
(ஒப்புரவறிதல் அதிகாரம், குறள் 211)
என்ற குறள் மூலம் உலகு வாழ உதவும் மழைக்கு நாம் என்ன கைம்மாறு செய்கிறோம்.? வான்மழை போன்ற மனிதர்களும் மாற்று உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. இவர்களை நாம் மறந்துவிடலாகாது. அவர்களுக்குக் காத்திருந்து நாம் நன்றிகூற வேண்டுமெனத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
(செய்ந்நன்றியறிதல் அதிகாரம், குறள் 108)
மற்றவர்கள் செய்யும் உதவியை மறவாதீர்களென்று கூறும் திருவள்ளுவம், பிறர் நமக்குச் செய்யும் குற்றங்களை அன்றே மறந்துவிடுங்களென்கிறது. பழிவாங்கும் தீய செயல்களையும், வன்முறைகளையும் நீக்கி மன்னிக்கும் மனோநிலையை வளர்க்க வேண்டுமென வழிகாட்டி நிற்கின்றது.
இவ்வுலகில் நன்றியெனும் ஒரு வார்த்தை இல்லையென்றால் மனிதம் மரணித்து விடும். நன்றியுணர்வு நம்மிடம் பெருகப் பெருகப் போட்டியும், பொறாமையும், பகையுணர்வும், புறக்கணிப்புகளும் நம்மிடையே அற்றுப்போகும். அன்பு மட்டுமே நம் இதயங்களை அலங்கரிக்கும். நாம் பிறருக்குச் செய்யும் உதவிகளை மறந்தும், பிறர் நமக்குச் செய்யும் உதவிகளை நெஞ்சில் நிறுத்தியும் நன்றியுள்ள மனிதர்களாக வாழ்ந்து வாழ்வை வளப்படுத்துவோம்.
வாழ்க தமிழ்.!
வாழ்க திருவள்ளுவம்.!!