LOADING

Type to search

இலங்கை அரசியல்

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு – காற்றோடு போயாச்சு

Share

சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்

அரசியலில் பதவி எனும் சுகத்தை அனுபவித்துவிட்டால், அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். இது நாடுகளைக் கடந்த ஒன்று. உலகின் மிகவும் வல்லரசான, செல்வந்த நாடான அமெரிக்கா தொடக்கம் மிகவும் வறிய நிலையிலிருந்தாலும் தம்மை வல்லரசாகக் காட்டிக் கொள்ள முனையும் வடகொரியாவும் இதில் அடங்கும். பதவி மற்றும் குடும்ப அரசியல் என்பது ஆசியா மற்றும் ஆப்ரிகாவில் சர்வ சாதாரணம். 

இந்தியாவின் நேரு குடும்பம் தொடங்கி இலங்கையின் பண்டாரநாயக்க குடும்பம் வரை இது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஒரு முறை பதவியில் இருந்து அதிலுள்ள சுகம், சொத்துக்கள், படாடோபம், கேட்காமலேயே கொட்டும் பணம், அதிகாரம் போன்றவற்றை இழப்பதற்கு யாரும் தயாராவதில்லை. பதவி என்ற அதிகாரத்தின் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களைப் பாதுகாக்க வாரிசுகளை களத்தில் இறக்குவது முறையற்ற வகையில் சேர்த்த பணத்தைப் பாதுகாக்க மட்டுமல்ல அதை மேலும் பெருக்குவதற்கு ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பதவி என்று வரும் போது கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்படுவது இயற்கையானது மட்டுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது. தொடர்ச்சியாக பதவியில் இருப்பது ஊழலிற்கு வித்திடும் என்பதும் மறுக்க முடியாதது. மக்கள் சேவைக்கு பதவி என்பது ஒரு கருவி மற்றும் வாய்ப்பாக உள்ளது என்கிற காற்றில் கம்பு சுற்றும் வாதத்தை அரசியல்வாதிகள் வைப்பார்கள் ஆனால் அது உண்மையில்லை என்பது அவர்களுக்கும் தெரியும் அடுத்தவர்களுக்கும் புரியும்.

அரசியலும் பதவியும் தண்ணீரும் மீனும் போல் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது தண்ணீர் சுத்தமாக இருக்க மீன்கள் தேவை அதே போன்று மீன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் தேவை என்பதே அதன் அடிப்படை. அதை அரசியலிற்கு பொருத்தி பார்த்தால் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்க பதவி தேவை அதேவேளை பதவி இருந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும்.

இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இந்த பதவி மோகம் அல்லது தேவை என்பது அரசியல் மட்டுமல்ல அது வர்த்தகம், கலைத்துறை, தொழிற்துறை என அனைத்திலும் வியாபித்திருக்கும் ஒன்று. இவை அனைத்திலும் இழையோடும் அடிநாதம் ஒன்றுதான். ஈட்டலும், ஈட்டியதைப் பாதுகாத்தலுமே.

இலங்கையில் கட்சி, ஆட்சி மற்றும் தனிப்பட்ட ரீதியில் பலவீனமாக இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார். அவர் பதவியில் தங்கியிருப்பதும் ஆட்சி செய்வதும் ராஜபக்சக்களின் தயவிலேயே உள்ளது ஊரும் உலகமும் அறியும். ஆனால் தான் சுயாதீனமாக முடிவெடுப்பதாக அவர் வெளியுலகிற்கு காட்டிக்கொள்ள விழைகிறார் என்றே தோன்றுகிறது.

ராஜபக்சக்களின் கண் அசைவு அல்லது ஒப்புதலின்றி அவரால் அரச பதவியில் யாரையும் சுயாதீனமாக அமர்த்தவும் இயலாது என்பதே யதார்த்தம்.

இதன் பின்னணியிலேயே அவர் ஜனவரி 19 ஆம் திகதி இரு அமைச்சர்களை நியமித்துள்ளதை பார்க்க வேண்டியுள்ளது என்று கருதுகிறேன். இலங்கை இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் நிதியுதவிகள் தேவையென்றால் செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று கடன் வழங்கும் நாடுகளும் நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன. அதில் முக்கியமானது அரச செலவினங்கள் குறைக்கப்பட வேண்டுமென்பதாகும். அப்படியான சூழலில் ரணில் விக்ரமசிங்க புதிதாக இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமித்துள்ளார். இதில் அமைச்சரவையிலேயே மிகவும் இளையவரான ஜீவன் தொண்டமான் மற்றொருவர் மொட்டுக் கட்சியின் பவித்ரா வன்னியராச்சி. இருவரும் முன்னர் ராஜபக்ச அமைச்சரவையில் இருந்தவர்கள்.

ஜீவன் தொண்டமான் இப்போது நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறைக்கான அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.  முன்னர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் அவர் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஆகிய துறைகளிற்கு அமைச்சராக இருந்தார்.

அண்மைக்காலமாக அவர் தன்னை அமைச்சராக்கும்படி தொடர்ந்து ஜனாதிபதி ரணிலும் வேண்டி அழுத்தம் கொடுத்து வந்தார் என்று உள்தகவல்கள் கூறுகின்றன. 

சற்று பின்னோக்கிப் பார்ப்போம். கடந்த ஆண்டு (2022) மே மாதம் ஜீவன் தொண்டமான் ராஜபக்சக்களுடனான தமது 15 ஆண்டுக்கால உறவை முடித்துக் கொள்வதாக வெளிப்படையாக அறிவித்தார். கோட்டாபய அரசில் மக்களில் சொல்லொணா துன்பங்களிற்கு ஆளாகியுள்ள நிலையில் தாம் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்தார்.

ஆனால், இப்போது அதே ராஜபக்சக்களின் பின்புலத்தில், மொட்டுக் கட்சியின் தயவில் இயங்கும் அரசில் அவர் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். 15 மாதங்களிற்கு முன்னர் சொன்னதெல்லாம் காற்றோடு போயாச்சு. 

”அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று சூரியன் திரைப்படத்தில் வரும் ஒற்றை வரி வசனம் எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் பொருந்தும்.

ஆக சேவலிற்கு தை பிறந்தவுடன் வழி பிறந்துள்ளது. கூரைக்கு மேல் பறக்க முடியாத சேவல் இன்று யானையின் மேல் பலருடன் அமர்ந்துள்ளது. ஆனால் யானையே மொட்டின் பலத்தில் தான் நிற்கிறது என்பதை சேவல் அறிந்துள்ளதா?

இலங்கையில் அடிப்படை அதிகார அலகான உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை உறுதியாக நடைபெறுவதில் பல கேள்விகள் உள்ளன. இந்நிலையில் அந்த அடிப்படை அதிகார அலகில் தமது ஆளுமை மற்றும் அதிகாரத்தைக் காட்டுவதற்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. அதற்கு கூட்டணிகள் முக்கியமென்று கட்சிகள் கருதுகின்றன. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஐக்கிய(மில்லாத) தேசியக் கட்சி தனது யானை பலத்தை இழந்து அரசியல் அரங்கில் பரிதவித்து வருகிறது. அரசியல் அனுபவம் மிக்க ரணில் உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் கட்சியை பலப்படுத்த விழைகிறார். அதே போன்று சேவலும் மிகவும் நலிந்த நிலையில் உள்ளது. பதவி இல்லாமல் சேவல் ஊட்டச்சத்தின்றி காணப்படுகிறது. யானைக்கு கிடைக்கும் சோளப் பொரியில் தனக்கும் ஏதாவது மிஞ்சும் என்பது சேவலின் கணக்காக உள்ளது.

நீரின்றி மீன் உயிர்வாழ முடியாது என்பது போன்று தொண்டமான்களிற்கு பதவியின்றி அரசியல் செய்ய முடியாது என்பதே யதார்த்தம் என்பது நாட்டிலுள்ள அனைவரும் அறிந்ததே. பெற்ற பதவிகள் மூலம் பெரியவர் தொண்டமான் தொடக்கம் ஜீவன் தொண்டமான் வரை மக்களிற்கு சில நன்மைகளைச் செய்துள்ளார்கள் என்பதையும் மறக்க முடியாது. 

 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐக்கிய(மில்லாத) தேசியக் கட்சிக்கும்-இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் நெருக்கமான உறவே இருந்துள்ளது. பெரியவர் சவுமியமூர்த்தி தொண்டமானை 1978இல் ரணிலின் அரசியல் குரு மற்றும் மாமாவான ஜே ஆர் ஜெயவர்தன அமைச்சராக்கினார். தான் அமைச்சராக பொறுப்பேற்க பல காரணங்கள் இருந்தாலும், அதற்கான முக்கிய காரணம் ஜெ ஆர் ஜெயவர்தன என்று 4 செப்டம்பர் 1978 அன்று செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதுவும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. 

அதன் மூலம் `தலைவர்` தொண்டமான் என்று தோட்ட மக்களால் அழைக்கப்பட்டவர் `அமைச்சர்` தொண்டமான் என்று அழைக்கப்படும் நிலை உருவானது. இன்னும் சற்று பின்னோக்கிப் பார்த்தால் 1947 ஆம் ஆண்டு முதலே ஐ தே க மற்றும் இ தொ கா விற்கும் இடையே அரசியல் நல்லுறவு இருந்து வந்துள்ளது. பெரியவர் தொண்டமானிற்கு பிறகு அவரது பேரனும் அரசியல் வாரிசு என்று கருதப்பட்ட ஆறுமுகன் தொண்டமான் `அமைச்சர் பதவி மூலம் மக்கள் தொண்டு` என்கிற கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்தார். 

பன்னெடுங்காலமாக இந்த இரு கட்சிகளிடையே இருந்த உறவில் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உரசல் ஏற்பட்டு அது விரிசலாகி பின்னர் கசந்து போனது. ஆனாலும் ஆறுமுகன் தொண்டமானின் அகால மரணத்தை அடுத்து அவரது மகனும் தொண்டமான் குடும்பத்தின் அரசியல் வாரிசுமான ஜீவன் தொண்டமான கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் கோட்டா அமைச்சரவையில் இடமும் பெற்றார். 

ஜெ ஆர் ஜெயவர்தன ஆட்சிக் காலத்தில் 1977க்கு பிறகு 1989 ஆம் ஆண்டே பொதுத் தேர்தல் நடைபெற்றது என்பது வரலாறு. அப்போது நுவரெலியா மாவட்டத்தில் இ தொ கா வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். ஆனால் அரசியல் உறவு காரணமாக ஐ தே க தமது தேசிய பட்டியல் இடங்களில் இரண்டை அவர்களுக்கு அளிக்க பெரியவர் தொண்டமானும், தேவராஜும் நாடாளுமன்றம் சென்றனர். அமைச்சுப் பதவியும் பெற்றனர். அதே அமைச்சரவையில் ரணில் இருந்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளால் கொல்லப்பட- பிரதமராக இருந்த விஜேதுங்க ஜனாதிபதியானார். இதையடுத்து ரணில் பிரதமராக தொண்டமான் தலைமையிலான இ தொ கா ஆதரவளித்தது. 1994 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஐ தே க-இ தொ க உறவு தொடர்ந்தது. தேர்தலுக்குப் பின்னர் சந்திரிகா அம்மையார் தலைமையிலான கூட்டணிக்கு சேவல் ஆதரவுதர பெரியவர் தொண்டமான் மீண்டும் அமைச்சரானார்.

அரை நூற்றாண்டு காலம் மலையகம் மற்றும் தேசிய அரசியலில் ஆளுமை செலுத்திய பெரியவர் தொண்டமான் 1999 ஆண்டு காலமானதை அடுத்து இ தொ க வின் தலைமைப் பொறுப்பு ஆறுமுகன் தொண்டமானிடம் வந்தது. ஆறுமுகன் தொண்டமானும் அரசியலும்-அமைச்சுப் பதவியும் இணை பிரியாதது என்ற கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுத்தார். பதவியில் இருந்தால் அதிகாரம், அதன் மூலம் ஆளுமை, அந்த ஆளுமையின் காரணமாக தோட்ட மக்களைத் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க முடியும் எனும் எண்ணம் தொண்டமான்களிடம் இன்றளவும் உள்ளது என்கிற விமர்சனம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

இருந்த போதும் 2004 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் சேவலிற்கும்-யானைக்கும் இடையேயான உறவு கசந்தது. ஆறுமுகன் தொண்டமான் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். பிறகு வந்த தேர்தலில் மகிந்த தலைமையிலான கூட்டணியில் இ தொ க போட்டியிட்டது. 

அவருக்கு பிறகு தலைமைப் பதவிக்கு வந்த ஜீவன் தொண்டமான் ராஜபக்சக்களிற்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதை உணர்ந்த இ தொ க 2022 மே மாதம் மொட்டுக் கட்சியுடன் இனி உறவில்லை என்று கூறி அவர்களுடனான அரசியல் தொடர்புகளை முறித்துக் கொண்டார்.

பிறகு ரணிலுடனான உறவை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் பிரதமர் பதவியேற்ற போதும் பின்னர் ஜனாதிபதி தேர்தலின் போதும் இ தொ க ஆதரவளித்தது.

இப்போது மீண்டும் அமைச்சர் பதவி. இரட்டை குதிரை சவாரி ஆபத்தானது என்பதை இளம் தொண்டமான் புரிந்துகொள்வது அவசியம்.