LOADING

Type to search

இலங்கை அரசியல்

பேரறிஞரும் பேராசிரியருமான கோபாலப்பிள்ளை மகாதேவா இங்கிலாந்தில் காலமானார்

Share

(யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது ‘ மைற்’ என்ற பொறியியல் நிறுவனத்தை உருவாக்கி யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆகிய இடங்களில் அழகிய நவீன சந்தைகளைக் கட்டிக் கொடுத்து நகர சபைகளினதும் அரசாங்கத்தினதும் மற்றும் பலரது பாராட்டையும் பெற்றவர் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

யாழ்ப்பாணம் மட்டுவில் தெற்கில் 1934ம் ஆண்டு பிறந்த பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா அவர்கள் தொடர்ச்சியான தமிழ்ப் பணிகள் மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து கடந்த 14-01-2023 அன்று இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தி எமக்கு கிட்டியபோது மொழியையையும் பண்பாட்டையும் நட்பையும் என்றும் மரியாதை செய்து வந்த மகத்தான மனிதர் பற்றிய பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்தோம்.

பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா அவர்கள் ஒரு பொறியியலாளர். ஆனால் அவர் இறுதிவரையிலும்; தமிழ் மொழியையும் தமிழிலக்கியத்தையும் நேசித்தும் யாசித்தும் வாழ்ந்த ஒரு அறிஞர் என்றால் அது மிகையாகாது. , 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கி வந்தவர் ; என்பது உலகெங்கும் இலக்கிய மற்றும் தமிழை நேசிக்கும் அனைவரும் நன்கு அறிவார்கள்

யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் தனது ஆரம்பக்கல்வியை கைதடிநுணாவில் சித்திவிநாயகர் இந்து கலவன் பாடசாலை, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகியவற்றிலும் இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றிலும் பெற்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவனாகச் சேர்ந்து தனது பட்டப்படிப்பை 1955ல் நிறைவு செய்து ஒரு பொறியியலாளரானார்.

பாடசாலைக் காலத்தில் உயரம் பாய்தலிலும், கைப்பந்தாட்டத்தில் பல்கலைக் கழகத்திலும், பங்குபற்றி பரிசில்களும் பெற்றுள்ளார். 1961 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியாவில் உள்ள பேர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் தனது பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு முதுமாணிப்பட்டம், கலாநிதிப்பட்டம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து எந்திரவியல், முகாமையியல், தொடர்பான ஏழு உயர் பட்டயங்களைப் பெற்றார். இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இடங்களில் பொறியியலாளர், ஆராய்ச்சி ஆசிரியர், கைத்தொழில் ஆலோசகர், இயக்குநர், பேராசிரியர் ஆகிய பதவிகளில் பணிபுரிந்த இவர், தனது வாழ்நாளில் சிறுவயது முதல் 1961வரையிலும் பின்னர் 1966 முதல் 1978 வரையிலும் இலங்கையில் வாழ்ந்தார். ஏனைய காலங்களில் மேற்கிந்திய தீவுகளிலும் பெரும்பகுதியை பிரித்தானியாவிலும் வாழ்ந்து அந்தந்த நாடுகளில் பணிபுரிந்தார். இங்கிலாந்தில் 41 வருடங்கள் வாழ்ந்துள்ளார்.

இவர் இங்கையில் இருந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்க சேவையில் பணியாற்றி களனி, பாணந்துறை, ஆகிவற்றில் அமைந்துள்ள பெரிய பாலங்களையும், மட்டக்களப்பு விமான நிலையத்தையும் கட்ட உதவினார். ‘மைற்’ என்ற தாபனத்தை உருவாக்கி யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆகிய இடங்களில் மாதிரி நவீன சந்தைகளைக் கட்டிக் கொடுத்துப் பலரது பாராட்டையும் பெற்றார்.

இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் நாடகக் குழுவின் அங்கத்தினராகவும் மகாவலித்திட்ட விசாரணைக்குழுவில் அங்கத்தவராகவும், இலங்கை கைத்தொழில் சபை, இலங்கை அரசாங்கக் கூட்டுத்தாபனங்களின் முகாமைத்துவக் குழுவின் அங்கத்தினராகவும், வட இலங்கை வர்த்தகர் -கைத்தொழிலாளர் சம்மேளனத்தின் (1970-78) நிறுவுதலைவராகவும் பணியாற்றினார்.

1960-1970 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்துச் சமகாலக் கல்விமான்கள் பலரால் ‘ஒரு யாழ்ப்பாணத்து மூளை’ என்ற பாராட்டைப் பெற்றார்.

பேராசிரியர் கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். இவர் தனது பதின்னான்காவது வயதில் யாழ். மத்திய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் ‘மகாத்மா காந்தி’ பற்றி ஒரு ஆங்கிலக் கவிதையை எழுதியதன் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து இவரது ‘விண்வெளி ஆராய்ச்சிக்’ கட்டுரைகள் இலங்கையின் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கில மற்றும் தமிழ்க்கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.

இவரது ‘வாழ்க்கையும் கவிதையும்’ என்ற தமிழ்க்கவிதை நூலில், இலங்கைக் கவியரங்குகளில் பாடப்பட்ட பல்வேறு கவிதைகளும் தமிழ்ச்சஞ்சிகைகளில் பிரசுரமான கவிதைகளும் அடங்கியுள்ளன. இவரது பரிசோதனை முயற்சியாக சில ஆங்கில ‘Nursery Rhymes’ என்னும் குழந்தைப் பாடல்கள் சிவற்றை தமிழாக்கம் செய்திருக்கிறார். இவருடைய ‘Life in Nutshells’ ஆங்கிலக்கவிதைத் தொகுப்பு 1997ல் பிரித்தானியாவின் கவிதை நூல்கள் போட்டியில் முதலாவது பரிசைப்பெற்றது. இவரது மூன்று நீண்ட ஆங்கிலச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியொன்றும் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கம் (ELAB) என்ற அமைப்பினை 2006 ஆம் ஆண்டில் நிறுவி அதன் தலைமைப் பதவியை ஏற்று மாதந்தோறும் இரண்டாவது புதன் கிழமைகளில் கூடி ஆக்க பூர்வமான செயற்பாடுகளை நடத்திவருகிறார். இதில் தமிழ் ஆங்கில மொழிகளில் சமகாலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் கவிதைகளும் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துரைகள் பரிமாறப்பட்டு ‘பூந்துணர்’ (Perceptions) என்னும் நூல் தொகுதிகளாக வெளிவருகின்றன. இத்தகைய பூந்துணர் தொகுதிகள் 2007, 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.
பேராசியர் அவர்கள் ஒரு சிறந்த நடிகனுமாவார். அவர் எழுதித் தயாரித்து நடித்த குறும்படங்களாக ‘திருக்குறள் தாத்தா’, ‘செல்லாச்சிப்பாட்டி’, ‘தாய்மை’ ஆகியவை விளங்குகின்றன.

வாழ்க்கையின் முடிவுரையை எழுதியது போன்று. தனது 89 வயதில் இறப்பு என்னும் ஓய்வில்லத்தை அடைந்துள்ள பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கி பலதரப்பட்ட சமூகப் பணிகளிலும் இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டு தனது இறப்பின் பின்னரும் பேசப்படும் ஒருவராக உள்ளார் என்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

ஆர். என். லோகேந்திரலிங்கம்
தலைவர். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்- கனடாக் கிளை