கனடா மொன்றியால் நகரில் இயங்கிவரும் ‘விடியலைத் தேடி’ அமைப்பு தாயக மாணவர்களுக்கு வழங்கிய கற்றல் உதவித் தொகை மற்றும் உதவிகள்
Share
கனடா மொன்றியால் நகரில் இயங்கிவரும் ‘விடியலைத் தேடி’ அமைப்பு தாயக மாணவர்களுக்கு வழங்கிய கற்றல் உதவித் தொகை மற்றும் உதவிகள் பற்றிய செய்திகள் யாழ்ப்பாண குடாநாட்டில் வியந்து பேசப்படும் ஒரு தார்மீகச் செயல் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
கனடா மொன்றியால் வாழ் கெளரீஸ் சுப்பிரமணியம் என்னும் பார்வை குன்றிய ஒரு பாடகரின் பிறந்தநாள் நன்கொடையாக அவரும் அவரது அன்னையான சாரதா அம்மையாரும் இணைந்த விடியலைத் தேடி அமைப்பினூடாக எமது தாயக மண்ணில் மாணவர்களுக்கான உதவித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஊடாக விழிப்புலனற்றவர்களான யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்கப் பெற்று அதை வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் வழங்கி வைத்தார்
யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்த உதவித் தொகைகள் கையளிக்கும் வைபவத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் திரு நிரோஸ் தியாகராஜாவும் கலந்து கொண்டார்.
அத்துடன் சில ஆசிரியப் பெருந்தகைகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அன்றைய தினம் மேலும் கிராம சேவையாளர்களினால் தெரிவு செய்யப்பெற்ற சில மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பாதணிகள் கற்றல் உபகரணங்கள் ஆகியனவும் வழங்கப்பெற்றன.
இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாய்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் திரு நிரோஸ் தியாகராஜா கனடா உதயன் செய்தியாளருக்கு தெரிவித்தார்.
கனடா மொன்றியால் ‘விடியலைத் தேடி’ அமைப்பின் ஸ்தாபகர்கள் திருமதி சாரதா மற்றும் அவரது புதல்வர் கௌரீஸ் அவர்களுக்கும் கனடா உதயன் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.