LOADING

Type to search

இலங்கை அரசியல்

விநாயகர் விமர்சனம் | இருப்பதை கொடுக்க மறுப்பதேனோ?

Share

(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத்தொடர்)

கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு 2023 பெப்ரவரி 4ஆந் திகதி சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்கப் போவதாக அறிவித்த போது தமிழ் தரப்பில் யாரும்; அதை சீரியஸாக எடுத்துக் கொண்டதாகத் தொரியவில்லை.

நாடு வங்குரோத்தடைந்து மக்கள் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள.; நாளொரு சுருக்கமும் பொழுதொரு பிரச்சினையுமாக பொருளாதாரம் முகங்குப்புற விழுந்து கொண்டிருக்கிறது. செவிடன் காதில் ஊதிய சங்காக அரசாங்கம் வழமைபோல அதிபர் பிரதமர் மற்றும் அமைச்சுகளுக்கு அதிகளவு நிதிகளை ஒதுக்கீடு செய்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும்; புதிய அமைச்சுக்களை உருவாக்குவதிலும் மின்கட்டணத்தை அதிகரிப்பதிலும் வரிகளை அதிகரிப்பதிலும் கோடிக்கணக்கில் செலவிட்டு சுதந்திர தினம் கொண்டாடுவதிலும் அதிக கவனஞ் செலுத்திவருகிறது.

மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதும் அரச தலைவர்கள் மீதும் உள்ள நம்பிக்கையும் செல்வாக்கும் சரிந்து சங்கடப்படுமளவுக்கு மிகக் கீழ் மட்டத்தை அடைந்து மக்கள் மத்தியில் செல்ல முடியாதுள்ளது. எந்த அளவுக்கென்றால் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ ஒரு சமூக வலைத்தளத்தின் ஊடாக மக்களுடன் நிகழ்நிலையில் அளவளாவ முற்பட்ட போது ஒபட்ட நிவன் சுவ லெபேவா என்று பலரிடமிருந்து பதில் கிடைத்தது. நிவன் சுவ லெபேவா என்பது ஒருவர் இறந்த பின்னர் Rest in Peace அல்லது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திப்பதன் சிங்கள வடிவம். ஒருவர் உயிருடன் இருக்கும் போது இவ்வாறு கூறுவது அவருக்குச் செய்யும் உச்சகட்ட அவமானமாகும். இது போல மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்த நிலையிலேயே அரசாங்கமும் அரச தலைவர்களும் உள்ளனர்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் இனப்பிரச்சினை தீர்வு புத்தபகவானுக்கு ஞானோதயம் கிடைத்தது போல ஆட்சியாளருக்கு திடீரென்று ஞானம் பிறந்து விட்டதா என்ற ஐயத்தை எழுப்பியது. அத்துடன் இனப்பிரச்சினை மூன்று மாதத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினை என்றால்hல்- ஏன்டாப்பா முப்பது வருஷம் வச்சு இழுத்த நீங்கள்? இத்தனை பேரை காவு கொடுக்க வச்ச நீங்கள்? ஏப்பவோ இதைச்செய்து இலட்சக்கணக்கானோரின் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றி இருக்கலாமே? இந்த நாடு எப்பபோதோ மலேஷியா சிங்கப்பூர் மாதிரி ஆகியிருக்குமே ஏன்று பலர் ஆதங்கப்பட்டதும் காதில் கேட்டது. இதுபற்றி அனைத்துலக செல்வாக்கு மிக்க ஒரு தமிழ் செய்தியாளரிடம் அபிப்பிராயம் கேட்டேன். ரணில் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. அவர் இனிமேலும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. ஆக தீர்க்க முடியாத இனப்பிரச்சினைக்கு தனது காலத்தில் தீர்வு வந்ததாக ஒரு ரெக்கோர்ட் இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டிருக்கலாம் மேலும்; இந்தியாவிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்து வந்த கடும் அழுத்தம் காரணமாகவும் இருக்கலாம் என்றார்.

நமது சந்தேகம் என்னவென்றால் இப்போது அவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிய அறிவிப்பு நொருங்கிப்போயுள்ள செல்வாக்கை மீளக் கட்டியெழுப்ப எத்தனிக்கும் ஒரு டெமேஜ் கொன்ரோலிங் ஸ்ரெட்டர்ஜி (Damage Controlling Strategy) ஆக இருக்குமோ என்பது தான். அரகலய (போராட்ட) காலப்பகுதியில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக அரசாங்கத்தை எதிர்த்துவந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான காரணம் பற்றியும் அரச அடக்குமுறைகள் பற்றியும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம் பெற்றதைக் காண முடிந்தது. ஆனால் அரகலயகாரர்களை குறிவைத்து அரச அடக்குமுறை பாயத் தொடங்கியதும் அந்தக் குரல்களும் மௌனித்துப் போயின. இந்த சூழ்நிலையில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த அறிவிப்பு வந்தால் அதில் யாருக்கு இலாபம் என்பதை கடந்த ஜனவரி மூன்றாம் நான்காம் வாரங்களில் இடம் பெற்ற இதனுடன் தொடர்புபட்ட சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தப்பிரச்சினை தொடர்பில் தமிழ்கட்சிகள் சூடுகண்ட பூனைகளாகப் பதுங்கி முதலில் தமிழ் மக்கள் தொடர்பில் எரிகிற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குங்கள் என்றார்கள.; கைதிகள் விடுதலைஇ காணிவிடுவிப்புஇ காணாமல் போனோர் பிரச்சினை ஆகியவை அதில் முன்னுக்கு வந்தன. இது தொடர்பில் ஒருசில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதையும் மறுக்க முடியாது. இலங்கைக்கு ஐஆகு நிதியுதவி செய்வது தொடர்பில் வெளிப்படையாக ஆதரவை வழங்கியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் நல்லிணக்கம் ஏற்படுவது தொடர்பில் 13வது அரசியல் யாப்புத் திருத்தத்தை முழுமையாக அமல் செய்ய வேண்டும் என்று தமது சந்திப்புக்களின் போது வலியுறுத்திச் சென்றார்.

13வது அரசியல் திருத்தம் 1987இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிறகு இப்போது 22வது அரசியல் யாப்புத்திருத்தம் வரையில் கடந்துவிட்ட நிலையில் அதனை முழுமையாக அமல் படுத்துவது இன்னும் நடக்காத காரியமாக உள்ளது என்பது ஒரு புறமிருக்க அதில் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரங்களும் கூட பல்லுப்பிடுங்குப்பட்ட பாம்பின் நிலையில் காணப்படுகின்றன. அதேவேளை அதனை வைத்தும் தமது சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் இலக்குகளை வெகு புத்திசாலித்தனமாக முஸ்லிம் சமூகம் அடையச் செய்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அத்துடன் 13ஆம் திருத்தத்தின் கீழ் வடக்கு கிழக்குக்கு வெளியே உருவாக்கப்பட்ட மாகாண சபைகளும் மத்திய அரசின் அனுசரணையுடன் சிறப்பாக இயங்குவதையும் காணலாம். தமிழர் தரப்பின் பெரும்பாலானோர் 13ஆம் திருத்தத்தை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்காவிட்டாலும் கூட இந்த குறைந்தபட்ச தீர்வினையேனும் முழுமையாக அமல்படுத்துவதிலே கூட அரச தரப்பு ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. அது மட்டுமின்றி மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக அரசியலமைப்பில் முறைப்படி செய்யப்பட்ட 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்தப்படாததே அரசியலமைப்பை மீறும் ஒரு செயலாகும்.

ஏற்கெனவே அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை நடைமுறைபடுத்தப் போவதாகவே ரணில் அறிவித்தார். ஆனால் அறிவிப்பு வெளியான உடனேயே அதற்கு எதிர்வினையாகத் தொடங்கிய குரைத்தல்களும் ஊளையிடல்களும் எத்தனை காலம் ஆனாலும் நாடு எத்தகைய படு பாதாளத்தில் வீழ்ந்தாலும் இனவாதக் கூட்டம் ஒருNபுhதும் திருந்தப் போவதில்லை என்பதை வெகு தெளிவாகக் காட்டியது. ஒரு மதகுரு 13ஆம் திருத்தத்திற்கு பே பே பேமய் (முடியாது முடியாது முடியாதென்றால் முடியாது தான்) என்று கணவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று காவல் நிலையத்தில் அதிகாரிகளிடம் அரற்றி முரண்டு பிடிக்கும் பெண் போல யூடியுபில் அலப்பறை செய்ததைக் காணமுடிந்தது. அத்தோடு நான்கு பீடங்களைச் சார்ந்த மகாநாயக்க தேரர்கள் 13ஆம் திருத்தத்தை தாம் எதிர்ப்பதாகவும் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த தலங்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ள படைகளை அங்கிருந்து அகற்றக் கூடாதென்று அதிபருக்கு கூட்டாக எச்சரிக்கை அஞ்சல் அனுப்பியுள்ளனர். வழமைபோலவே இனவாதம் கக்கும் வீரவன்ச விஜேசேகர கம்மன்பில அமரசேகர போன்றவர்களும் மூடியிருந்த தமது வக்கடைகளை மீளவும் திறந்து விட்டுள்ளனர். ஆக நாட்டின் பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டடிற்கும் பாரிய அச்சுறுத்தல்கள் 13ஆம் திருத்தத்தின் மூலம் மீண்டும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டைக்காக்கும் வீரருக்கான அவசரத்தேவை தேவை இப்போது ஏற்பட்டுள்ளது என்ற கருத்தை முன்வைத்து ராஜபக்சக்களுக்கும் அவர்தம் தொண்டரடிப்பொடிகளுக்கும் அரசியல் ஆதாயம் தேடமுனையும் வேலை திட்டமிட்டபடி கனகச்சிதமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.

பிரதேச சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை சற்றே நிமிர்த்த இது உதவலாம். அதேவேளை அதிபர் தலைமையில் அண்மையில் அழைக்கப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் தேசியப்பட்டியல் மூலம் பதவிக்கு வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ரணிலின் முகத்துக்கு நேரே 13ஆம் திருத்தத்தை அமல்படுத்த தேசியப்பட்டியல் மூலம் வந்த உங்களுக்கு அதிகாரம் கிடையாது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த ஆணையின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்கே நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். மக்கள் உங்களுக்கு ஆணைவழங்கவில்லை. 13ஐ அமுல்படுத்துவதாயின் அடுத்த தேர்தலில் மக்கள் முன்சென்று மக்களாணையைப் பெற்றபின் அதனை அமல்படுத்தலாம் என்று கொக்கரித்தார். அதிபரோ சாவகாசமாக அவரைப்பார்த்து நீங்களும் தேசியப்பட்டியலில் தான் வந்திருக்கிறீர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக நான் அரசியல் அமைப்பில் உள்ளதை செயற்படுத்த கடைமைப்பட்டிருக்கிறேன் அது வேண்டாமென்றால் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று அதை நீக்ககுங்கள் வெறுமனே அதை வைத்துக் கொண்டிருக்க முடியாது என்று பதிலளித்தார்.
உண்மையில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின்படி 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த யாரிடமும் அவர் அனுமதி பெறவோ ஆலோசனை கேட்கவோ தேவையில்லை. ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதைச் செய்யலாம்.

ஆனால் அதன் பின்னே வருபவற்றைச் சந்திக்கத்தான் துணிவு வேண்டும். பாராளுமன்றத்தில் 13ஐ நீக்கும் பிரேரணை வந்தால் அது வெற்றிபெறும் சாத்தியங்கள் உண்டு. இதிலே முக்கிய கேள்வி என்னவென்றால் இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்குவந்து 13ஐ முழமையாக அமல்படுத்தவேண்டும் என்று அழுத்திக் கூறிச் சென்ற பின்னரும் இலங்கை சித்துவிளையாட்டுக்காட்டி முழுமையாக 13ஐ நீக்கிவிட்டால் இந்தியா என்ன செய்யும் என்பதாகும். கடந்த கால அனுபவங்களின்படி 13ஆம் திருத்தத்தின் கீழ் இணைந்திருந்த வடக்கு-கிழக்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரித்து விடப்பட்டபோது அது இறைமையுள்ள இலங்கையின் உள் விவகாரம் என்று கருதப்பட்டது. ஆகவே இந்தியாவால் நேரடியாக இதிலும் தலையிட முடியாது. ஆனால் இந்தத் திருத்தத்தை நீக்கிவிடுவது இலங்கைக்கு தற்கொலைக்கொப்பான மிகப்பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புpராந்திய வல்லரசு நாட்டின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ் வந்த 13ஆம் திருத்தத்தை ஒருதலைப்பட்சமாக நீக்கிவிட்டால் இலங்கை நல்லிணக்கத்திற்குத் தயாரில்லை என்ற செய்தியை அது சர்வதேசத்திற்குச் சொல்லும். இது 13மூலம் ஏற்படும் என இனவாதிகள் கருதும் பாதிப்பை விட மிக மோசமான ஒன்றை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும். 13ஆம் திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் மாகாண சபைகளுக்கு பொருளாதார ரீதியான சில நன்மைகள் உண்டு.

காணிகளை திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்தும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு கிடைப்பதால் அவற்றின் மூலம் பொருளாதார நலன்கள் கிட்டும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் காரணமாக வினைத்திறனான முன்னுரிமைத் தெரிவுடன் கூடிய காணிப்பயன்பாட்டிற்கும் சாதகமான சூழற்பாதுகாப்பிற்கும் இட்டுச் செல்லலாம். உற்பத்தி நடவடிக்கைகள் மேம்படவும் வேலைவாய்ப்புகள் பெருகவும் கட்டடவாக்கம் உட்கட்டமைப்பு வசதிகளின் உருவாக்கத்திற்கும் இது துணைபுரியும். ஏற்கெனவே மாகாணசபைகளுக்கு பல்வகை வரிகளையும் கட்டணங்களையும் தண்டப்பணங்களையும் அறவிடும் அதிகாரம் உண்டு. ஆனால் அவற்றின் மூலம் திரட்டப்படும் நிதி செலவுகளை ஈடுகட்டப் போதுமானதல்ல இதனால் மத்திய அரசின் நிதிஒதுக்கீடுகள் ஊடாகவே மாகாண சபைகளுக்கு தேவையான நிதிகளில் பெரும்பகுதி கிடைக்கிறது. மாகாண சபைகளால் சுங்கவரி விதிக்கவோ வெளிநாடுகளிமிருந்து நேரடியாகக் கடன்பெறவோ நன்கொடைகளைத் திரட்டவோ முடியாது. இதனால் அவற்றால் வெளிநாடுகளிலிருந்து மேற்படி நிதிகளையோ வெளிநாட்டு முதலீடுகளையோ மத்திய அரசாங்கத்திற்கு ஊடாகவே பெறமுடியும்.

மத்திய அரசும் மாகாண சபைகளும் ஒரே கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சிகளாக இருந்தால் முறையான நிதிவசதிகளை உரிய காலத்தில் பெற்று நிருவாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எதிரெதிர் கட்சிகளாக இருக்கும் பட்சத்தில் மிகுந்த பிரயாசைப்பட்டே நிருவாகத்தை நடத்த வேண்டியிருக்கும். கிழக்கு மாகாண சபை சார்பளவில் சிறப்பாக இயங்கவும் வடமாகாண சபை மிகுந்த சிரமத்துடன் இயங்கவும் இதுவே முக்கிய காரணமாகும். ஆக மாகாண சபைகளை முமுமையாக இயக்கி சர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதா அல்லது கிடப்பில் போட்டு நீண்டகாலப் பொறிக்குள் சிக்கிக்கொள்வதா என்ற தெரிவினை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தமிழர்களைப் பொறுத்தவரை எப்போதும் போல சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது.