LOADING

Type to search

கதிரோட்டடம்

பாராளுமன்ற அரசில் பதவிகளைத் பற்றிக் கொண்டவர்கள் அதை இழந்துவிடாது இருக்க ‘எதனையும்’ செய்வார்கள்

Share

கதிரோட்டம் 07-04-2023

இலங்கையில் மாத்திரமல்ல உலகில் பாராளுமன்ற அரசியல் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுக்கு முன்னாள் உள்ள சேவையாற்றும் பொறுப்பை காலக்கிரமத்தில் மறந்து விடுகின்றார்கள் போலும்.

அதற்கு உதாரணமாக இலங்கையில் பாராளுமன்ற அரசில் பதவிகளைத் பற்றிக் கொண்டவர்கள் அதை விட்டு விலகாமல் இருக்க ‘எதனையும்’ செய்யத் துணிவார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பல தவறுகளைச் செய்யத் துணிந்து நின்றார்கள்.

தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை சில நாட்களில் மறந்து விடுகின்றார்களா? என்று நினைக்கும் அளவிற்கு காரியங்கள் இடம்பெற்று வருகின்றதை நாம் கண்களால் பார்த்து வருகின்றோம்.

எமது இவ்வார உட்பக்கம் ஒன்றில் கனடா வாழ் அரசியல் பத்தி எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை ஒன்றின் தலைப்பு’ பாராளுமன்ற அரசில் பதவிகளைத் பற்றிக் கொண்டவர்கள் அதை விட்டு விலகாமல் இருக்க ‘எதனையும்’ செய்வார்கள்’ என்பதாகும். அவர் பொதுவாகவே அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டுள்ளமை ஏற்றுகொள்ளக் கூடியதாகும்.

தனது கட்டுரையை அவர் இவ்வாறு ஆரம்பிக்கின்றார். ‘ ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அதாவது தன் வீட்டு நெய் என்றால் மனைவி சிக்கனமாகவும் ஊரார் வீட்டு நெய் என்றால் வாரி இறைத்தும் செலவு செய்வார் என்பதை விளக்க இந்தப் பழமொழியைக் கூறுவர் அதுபோல இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதாரண பொதுமக்களைப் பார்த்து வாயைக் கட்டி வயிற்ளைக் கட்டி வாழுமாறு உபதேசம் செய்கிறார். ஆனால் தனது அமைச்சரவை செலவீனங்கள் பற்றியோ, நாடாளுமன்ற உறுப்பினர்களது செலவு பற்றியோ அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கவலைப்படாதது மட்டுமல்ல நாடாளுமன்றத்தின் செலவீனங்களை அதிகரிப்பதில்தான் குறியாகயிருக்கிறார்.

அமைச்சரவையில் இப்போதுள்ள அமைச்சர்கள் போதாது என்று மேலும் பலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்க அவர் ஆயத்தமாகி வருகிறார். இதற்கான செலவு அவரது வீட்டுப் பணம் அல்ல, நாட்டின் கருவூலத்தில் இருக்கும் பணம்! என்று.

தற்போதைய இலங்கை அரசியல் விவகாரங்கள் ஒரு ஸ்தீரமில்லா நிலையில் மக்களின் ஆதரவு எதுவுமின்றி ஜனாதிபதிப் பதவியை தட்டிப் பறித்துக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க. அந்தப் பதவியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவே முயன்று வருகின்றார் என்பது நன்கு தெளிவாகின்றது.

அதன் முதற்கட்டமாக சிலருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கலாம் என்ற உறுதியை வழங்கி. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய நிர்ப்பந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் எந்நேரமும் தயாராகவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த கூறியுள்ள விடயமானது ‘முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைத்தது போன்றே தெரிகின்றது.. , “ரணிலின் சிறந்த ஆட்சியாலும் நாட்டு மக்கள் மீதான அக்கறையாலுமே அவர்கள் அரசாங்கத்துடன் இணையத் தயாராகியுள்ளனர்” என்று அவர் தெரிவித்திருப்பது மக்கள் பற்றியும் நாடு பற்றியும் சிந்தித்துப் பார்க்கின்றார்களா? என்றே கேட்கத் தோன்றுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ரணில் விக்கிரமசிங்காவை தொடர்ந்து ஜனாதிபதிப் பதவியில் அமர்த்தும் வகையில் மக்களின் துன்பங்களை மறந்தும் அவரது பௌத்த மதத்தை தீவெங்கும் நிலை நாட்டும் முயற்சிக்கும் ஆதரவாகவே இருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. மாங்கனித் தீவிற்கு எப்போது வெளிச்சம் வரும் என் று மக்கள் காத்திருக்க. கயவர்களின் திட்டம் இருளைக் கொண்டு வருவதுதான்!