2023 கம்போடியா சீ விளையாட்டு: மலேசிய இந்தியர்கள் 5 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்
Share
-நக்கீரன்
கம்போடியாவில் நடைபெற்ற 32-ஆவது சீ விளையாட்டு(South East Asian Games)ப் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் மலேசியக் குழுவில் கராத்தே நட்சத்திரம் ஷர்மேந்திரன் ரகுநாதன் கொடியேந்திச் சென்றார். இதற்கான அறிவிப்பை மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் நோர்ஸா ஸக்காரியா இவ்வாண்டு ஏப்ரல் 27-ஆம் நாள் அறிவித்தார்.
இது, மலேசிய இந்திய விளையாட்டாளர்களுக்கு பெருமையாக அமைந்தது-டன் உற்சாகத்தையும் அளித்தது. கடந்த ஆண்டு ஹனோயில் நடைபெற்ற 31-ஆவது சீ விளையாட்டுப் போட்டியின் தாக்கம் தணிவதற்குள் இந்த ஆண்டிலும் அடுத்தப் போட்டி நடைபெற்று முடிந்ததுள்ளது.
32-ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மலேசியக் குழுவில் 403 ஆண்கள், 274 பெண்கள் என 677 பேர் இடம்பெற்றிருந்தனர்; இவர்களை 237 அதிகாரிகள் வழிநடத்தினர். இந்த 677 வீரர்-வீராங்கணைப் பட்டியலில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்காக எண்மர் பட்டியலிடப்பட்டு, அவர்களில் மலேசிய விளையாட்டுத் துறைக்கு கடந்த காலத்தில் அளித்த பங்களிப்பு-வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் ஷர்மேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்குமுன் 2003 ஹனோய் சீ விளையாட்டுப் போட்டியின்போதும் ஒரு தமிழ் வீரரான புவனேசுவரன் இராமசாமி, மலேசிய அணிவகுப்பிற்கு தலைமையேற்று ஜாலோர் கெமிலாங்கை ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது
ஆனாலும், இந்த முறை மலேசிய அணியின் பதக்க அடைவு நிலை குறித்து, பொதுவாக அனைத்துத் தரப்பினருக்கும் மனநிறைவு தருவதாக இல்லை. இதற்கு, இளைஞர்-விளையாட்டுத் துறையின் இந்நாள்-முன்னாள் அமைச்சர்-களான ஹன்னா இயோ, கைரி ஜமாலுடின் ஆகியோர் வெளிப்படுத்திய கருத்துகளே தக்க சான்று; இலக்கு வைக்கப்பட்ட தங்க வேட்டையை எட்டமுடியவில்லை என்பதைவிட கடந்த சீ விளையாட்டைன.
கம்போடியாவின் நோம்பென் நகரில் 11 நாட்கள் நடைபெற்ற 32-ஆவது சீ விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மலேசிய அணியின் மொத்த பதக்க இலக்கு 141 ஆக இருந்தது. இவ்வாண்டு ஏப்ரல் 30-ஆம் நாள் கொடி கையளிப்பு நிகழ்ச்சியின்போது விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, 40 தங்கம், 37 வெள்ளி, 64 வெண்கலப் பதக்கங்களுக்கு மலேசியா இலக்கு கொண்டுள்ளதாக அறிவித்தார்.
மே 17-இல் நிறைவு நாளை எட்டியபோது தேசிய அணி 34 தங்கம், 45 வெள்ளி, 96 வெண்கலப் பதக்கங்களை வென்று, 11 நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஏழாவது இடத்தைப் பிடித்தது.
கடந்த முறை 6-ஆவது இடத்தில் நிலைத்த மலேசியக் குழு, இம்முறை ஓரிடம் சரிந்து 7-ஆம் இடத்தில் நிலைகொண்டது. குறிவைத்த மொத்த பதக்கங்களைவிட 34 அதிகமாகப் பெற்றிருந்தாலும் தங்க வேட்டையில் பின்னடைவு ஏற்பட்டது; இந்திய விளையாட்டாளர்களுக்கும் இந்தப் போட்டி பின்னடைவுதான். கடந்த முறையைவிட இந்த தடவை ஒரு தங்கம் குறைவாகவே கிடைத்தது.
ஒருவேளை 40 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாலும்கூட, மலேசியாவிற்கு 7-ஆவது இடம்தான் கிடைத்திருக்கும் எனத் தெரிகிறது. சிங்கப்பூர் 51 தங்கப் பதக்கத்துடன் 6-ஆம் இடத்தைக் கைப்பற்றியது;
உபசரணை நாடான கம்போடியா 81 தங்கத்துடன் 4-ஆம் இடத்தைப் பெற்ற வேளையில், வியட்நாம் முதல்(136) இடத்தையும், அரசியல் நிலைத்தன்மை இல்லாத தாய்லாந்து 2-ஆம்(108) இடத்தையும் இந்தோனேசியா 87 தங்கங்களுடன் 3-ஆம் இடத்தையும் பெற்ற வேளையில் பிலிப்பைன்ஸ் 58 தங்கத்துடன் 5-ஆம் இடத்தில் நிலைகொண்டது.
மலேசியா வென்ற 34 தங்கப் பதக்கங்களில் இந்திய விளையாட்டாளர்கள் பிரேம் குமார், ஷாமலா ராணி சந்திரன், சூரிய சங்கர் அரி சங்கர், கொடிவீரர் ஷர்மேந்திரன் ரகுநாதன் நால்வரும் கராத்தே மூலம் 4 தங்கப் பதக்கங்களை வென்றனர்; பிரேம் குமார், சூரிய சங்கர் அரி சங்கர், ஷர்மேந்திரன் ஆகிய மூவரும் இதேக் கராத்தேப் பிரிவில் வெள்ளியும் பெற்றனர்.
ஐந்தாவது தங்கத்தை ஷெரின் சாம்சன் வல்லபோய் ஓட்டப் போட்டி மூலம் பெற்றார்.
இந்தியர்கள் மொத்தத்தில் 13 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களை வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திரன் ராமகிருஷ்ணன் குத்துச் சண்டையில் வென்ற வெண்கலமும் இதில் அடங்கும்.