LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகுவது அதிகரிப்பு

Share

எமது யாழ் செய்தியாளர்

யாழில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக அரச தரவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு இந்த இடைவிலகல் எண்ணிக்கை 355ஆக காணப்பட்டபோதும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் அந்த எண்ணிக்கை 200ஐ தாண்டி விட்டதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. 

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது இதன்போதே மேற்படி விடயமும் சுட்டிக் காட்டப்பட்டது. 

இதில்  மாணவர்கள் இடைவிலகளிற்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியே  பிரதான காரணியாக காணப்படுகின்றது. ஏனெனில், இடை விலகும் மாணவர்கள் தொழிலிற்குச் செல்கின்றனர் என யாழ்ப்பாணத்தின் 5 கல்வி வலயங்கள் சார்பிலும் சுட்டிக் காட்டப்பட்டது. 

இதேநேரம் அதிக மாணவர்கள் இடைவிலகும் கல்வி வலயமாக காணப்படும் வலிகாமம் கல்வி வலயத்துல் கடந்த ஆண்டு முழுமையாக 170 மாணவர்கள் இடை விலகிய நிலையில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 137 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். 

இதேநேரம் தென்மராட்சி கல்வி வலயத்தில் கடந்த ஆண்டு 7 மாணவர்கள் மட்டுமே இடை விலகியபோதும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 14 மாணவர்கள் இடை விலகியுள்ளனர். யாழ். வலயத்தில் கடந்த ஆண்டு 60 மாணவர்களும் தற்போது 20 மாணவர்களும் இடைவிலகியுள்ளதோடு வடமராட்சியில் கடந்த ஆண்டு 72 மாணவர்களும் இந்த ஆண்டு இதுவரை 25 மாணவர்களும் இடைவிலகியுள்ளதோடு தீவக வலயத்தில் கடந்த ஆண்டு 46 மாணவர்கள் இடைவிலகியபோதும் இதுவரை 4 மாணவர்கள் இடைவிலகியமை கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பொருளாதர நெருக்கடிகள் காரணமாக கல்வியை கைவிட்டு இடைவிலகுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் நாட்டிலிலேயே ஆகச்சிறந்த கல்விசார் சமூகமாக இருந்த நிலையில், அது காலவோட்டத்தில் படிப்படியாக குறைந்து இப்போது கவலையளிக்கும் நிலைக்கு வந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.