”அரசுடன் இனி பேச்சு இல்லை” – சம்பந்தர் அறிவிப்பு
Share
நடராசா லோகதயாளன்
இலங்கை அரசுடன் இனி பேச்சுவார்த்தைகள் இல்லை என்று நாட்டின் மிக மூத்த தமிழ் தலைவரான இரா சம்பந்தர் அறிவித்துள்ளார்.
”இனஅழிப்பிற்கு நீதியான விசாரணை இல்லை, பேச்சுக்களில் தீர்வில்லை எனவே இனி எந்தப் பேச்சிலும் நாம் கலந்துகொள்ளப்போவதும் இல்லை” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே வியாழக்கிழமை (8) மாலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே சம்பந்தர் இதனை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
”பேச்சுக்கள் பேசி ஒய்ந்தனவே அன்றி எந்த தீர்வையும் வழங்க நீங்கள் தயாராகவில்லை. அதனால் இனியும் பேச நாங்களும் தயாராக இல்ல. பேசியவற்றிற்கே தீர்வில்லாதபோது இனியும் பேசுவது அர்த்தமற்றது” என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
”நீங்கள் அழைத்தபோதெல்லாம் நாம் பேச்சில் பங்குகொண்டோம் அதாவது ஒன்று இரண்டு ஆண்டுகள் அல்ல 14 ஆண்டுகளாக வந்துள்ளோம் ஏனெனில் வாய்ப்புக்களை அல்லது பேச்சுக்களை நாம் தள்ளிப்போட்டோம் அல்லது குழப்பினோம் என சர்வதேசம் எம்மை நோக்கி விரலை திருப்பக்கூடாது என்பதற்காக மட்டுமேயாகும்” என்று சினத்துடன் கூறியதாக பேச்சுவார்த்தைகளில் அவருடன் பங்குபெற சென்றவர்கள் ‘கனடா உதயனிடம்’ தெரிவித்தனர்.
அரசுகள் மாறினாலும் தமிழ் மக்களிற்கான நியாயமான மற்றும் நிலைத்திருகக் கூடிய தீர்வொன்றை பெற்றிட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியக முயன்று, அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்து பங்குபெற்றதையும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
”தமிழ் மக்களிற்கு தொலைநோக்கு பார்வையுடன் நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவோ எதிர்ப்பு எமக்கு வந்தபோதும் ஒத்துழைத்தோம். எப்போது பேச்சுக்கு அழைத்தாலும் ஒத்துழைத்தோம் மாறாக என்ன பயன் கிட்டியது. எமது மக்களிற்கு என்ன நன்மை கிட்டியது?”
ஏற்கனவே பேசிய விடயங்களை செய்து முடிக்கும்வரை இனி அரசுடன் பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கே இடமில்லை என கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதிபட கூறிவிட்டார்.
”நாம் இனியும் அரசுடன் பேசத் தயாராக இல்லை. பேச வேண்டியவை எல்லாம் பேசியாகிவிட்டது. இனி அந்தக் கருமங்களை செய்ய வேண்டியதுதான் உங்கள் கடமை. அவற்றை நீங்கள் செய்யும் வரைக்கும் எந்தப் பேச்சுக்கு அழைத்தாலும் இனி நாம் வரப்போவது கிடையாது”.
அரசுடன் முன்னர் இடம்பெற்ற பேச்சுக்களை நினைவுகூர்ந்த சம்பந்தர், எந்த அரசாக இருந்தாலும்,அவர்கள் இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவில்லை, இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் இழுத்தடிப்பு வேலையே செய்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார் என்று ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கூறுகின்றனர்.
”தீர்வு விடயத்தில் சந்திரிக்கா அம்மையார், மகிந்த ராஜபக்ச காலத்து தீர்வுகள் உள்ளன. ஒரு தீர்வை வழங்க இவற்றை ஆராய்ந்தாலே போதும் அது இல்லாமல் காலத்தை இழுத்தடிப்பதால் எந்தப் பயனும் கிட்டுவதாக நெரியவில்லை”.
இவ்வாறு சம்பந்நர் கடும் பிடிபிடித்தபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர் பேச்சின்றி வாயடைத்து போய் கேட்டுக்கொண்டிருந்தார் என்று அறிய முடிகிறது.
இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாவை சேனாதிராஜாவும் அரச தரப்பில் ரணில் விக்கிரமசிங்காவுடன் 6 அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
யதார்த்தமாக முடிவெடுத்து பொறுமை காக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவருமான இரா. சம்பந்தர் அரசுடன் இருந்த அத்தனை தொடர்புகள், உறவுகள், பேச்சுக்களை முறித்தமை தொடர்பில் ஆய்வாளர்கள் பெரும் அதிர்ச்சியில் அரசியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளதோடு அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதேநேரம் மாகாண சபையோ அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலோ இந்த ஆண்டு இடம்பெற மாட்டாது இருப்பினும் இடைக்கால சபை அமைக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்