வலிகள் நிறைந்துள்ள வடக்கிலும் கிழக்கிலும் தேர்தல்கள் தேவைதானா?
Share
கதிரோட்டம் – 28-07–2023 வெள்ளிக்கிழமை
இலங்கையின் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பெற்று மாகாண அரசின் நிர்வாகங்கள் ‘தேவையற்ற’ வகையில் ஆளுனர்களின் கைகளில் ஒப்படைக்கப் பெற்று அந்த மாங்கனித் தீவின் நிர்வாகம் கேலிக் கூத்தாக மாறிவிட்டது. வடக்கு மாகாணத்தின் ஆளுனர் அவர்கள் இலங்கையில் நிர்வாக சேவையில் பல உயர் பதவிகளை வகித்தவர். நிறைந்த அனுபவம் கொண்டவர். ஏதோ! தன்னாள் இயலுமான வகையில் தனது நிர்வாகப் பணியைச் செய்து கொண்டுள்ளார். ஆனால் கிழக்கு மாகாண ஆளுனர் தனது தாயகமான தமிழகத்திற்கு அடிக்கடி பயணம் செய்து அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்திக்கத் துடிக்கின்றார். ‘கலைஞர்’ கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடத் துணிந்தவர். பின்னர் ‘வால் துண்டிக்கப்பட்டவராக தற்போது அமைதியாகிவிட்டார்.
இவ்வாறாக தமிழர் பகுதிகளில் மாகாண நிர்வாகங்கள் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் நகர்ந்து செல்லுகின்றன. ஆனால் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்து வரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘மாகாண சபைகளின்’ தேர்தல்கள் நடத்தப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை இலங்கை ஜனாதிபதியிடம் விடுத்தவண்ணம் உள்ளார்கள். அத்துடன் இந்தியப் பிரதமர் மோடி அவர்களிடத்திலும் இதே வேண்டுகோளையே அனுப்பிய வண்ணம் உள்ளார்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு தற்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தேவைதானா என்ற கேள்விகளை பலர் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.கிழக்கிலும் பார்க்க வட பகுதி மக்களுக்கு வலிகளும் சவால்களும் அதிகமாக உள்ளன. அவர்களில் மீனவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளும் அச்சுறுத்தல்களும் அளவிற்கும் அதிகமாக வளர்ந்து கொண்டே செல்கின்றன.
அவர்கள் செய்து வரும் மீன் பிடித் தொழிலுக்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் சுதந்திரமான செய்து வந்த மீன் பிடித் தொழில்கள் அவர்களை செல்வந்தவர்களாக ஆக்கி விடாது என்பது அரசாங்கத்திற்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் நன்கு தெரிந்த விடயமே.
இன்னொரு பக்கத்தில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அரசுடைமையாக்கி அங்கு ஆயுதப் படைகளின் முகாம்களை அமைப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் நடைபெற்று இறுதியில் களத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களும் பல்கலைக் கழக மாணவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் மட்டுமே களத்தில் நின்று போராடவும் குரல் கொடுக்கவும் முன்வருகின்றார்கள். ஆனால் மக்களிடம் சென்று வாக்குகளைப் பெற்று தற்போது வங்குரோத்து நிலையை நாடும் ஏழை மக்களும் அடைந்திருந்தாலும் அனைத்து வசதிகளையும் பெற்று ‘வசதிகளோடு’ வாழும் பிரமுகர்களாக அந்த தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்சி தருகின்றார்கள்.
இவ்வாறான ஒரு வலிகள் நிறைந்த காலப்பகுதியில் மாகாண சபையை நடத்துங்கள் என்று மக்கள் கேட்பதாகவும் தெரியவில்லை. மாறாக, தங்களுக்காக தொகுதிகளில் உதவியாளர்களாக உள்ள பதவி ஆசைகள் கொண்டவர்களுக்கு அரசியல் பதவிகளை வழங்கிவிடவே இவர்கள் மாகாண சபைத் தேர்தல்;களை நடத்துங்கள் என்பதை மட்டும் அரசாங்கத்திடமும் அவர்கள நண்பராகத் தெரியும் ரணில் என்னும் ஜனாதிபதியிடம் கேட்ட வண்ணம் உள்ளார்கள்.
இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதே பயன் தராத ஒன்றாக உள்ள நிலையில் மாகாண சபையின் ஆசனங்களை கைப்பற்ற நினைப்பது தங்களுக்கு சுகபோக வாழ்க்கையைத் தந்து கொண்டிருக்கும் அரசியல் பதவிகளோடு அவற்றில் தங்கள் ‘சகாக்களையும்’ இணைக்கும் நோக்கம் ஒன்றிக்காகவே என்பது வெளிச்சமாகத் தெரிகின்றது!.