LOADING

Type to search

இலங்கை அரசியல்

13-வது நடைமுறைப்படுத்த இந்தியா துணை வரலாம் நாங்கள் தான் போராடி பெற வேண்டும் – மனோகணேசன் எம்.பி

Share

பு.கஜிந்தன்

13-வது நடைமுறைப்படுத்த இந்தியா துணை வரலாம் நாங்கள் தான் போராடி பெற வேண்டும் – மனோகணேசன் எம்.பி

இலங்கையில் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய பிரதமர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் எமது தலைவர்கள் போராடி அதனை அமல்படுத்த முன்வர வேண்டும் என மலைய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய பிரதமர் மோடி தொடர்ந்தும் பழைய பாணியில் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்ற போது இந்திய பிரதமர் பதின்மூன்றை நடைமுறைப்படுத்துங்கள், மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள் எனக் கூறி இருக்கிறார்.

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாக கிடைக்கப்பெற்ற 13 வது திருத்தம் வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்திருந்த போது வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வடக்கு கிழக்கு ஒன்றாக இல்லை.

அது மட்டுமல்லாது பதின்மூன்றில் இருந்த அதிகாரங்கள் பல வர்த்தமானி மூலம் மத்திக்கு எடுக்கப்பட்டமை தவறான விடயம். அதை இந்தியாவும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா புதிதாக அழுத்தங்களை வழங்கவில்லை தொடர்ச்சியாகவே பதின் மூன்றை நடைமுறைப்படுத்துமாறு கூறி வருகின்ற நிலையில் இந்தியா எமக்கு துணை வர முடியுமே அல்லாமல் நாம் தான் போராடி உரிமைகளை பெற வேண்டும்.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்கள் எமது உறவுகள் நாம் ஒரே இரத்தம் ஒன்றாக குரல் கொடுப்பதற்கு மலைய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.