உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி:கார்ல்சன்-பிரக்ஞானந்தா: 2-வது சுற்று ஆட்டமும் டிரா
Share
நடப்பு உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் (ஓபன் பிரிவு) கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்துள்ளது.
உலகக் கோப்பை செஸ் தொடர், அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முதல் நிலை சதுரங்க ஆட்டக்காரராக திகழும் நார்வே நாட்டை சேர்ந்த கார்ல்சனுடன் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் கார்ல்சன். அவரை எதிர்த்து வெற்றி பெற்று உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்புடன் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்.
மொத்தம், இரண்டு சுற்றுகளை உள்ளடக்கியது இந்த போட்டி. கடந்த செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இரண்டாவது சுற்று நடைபெற்றது.
இதில் கருப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டமும் டிரா ஆன காரணத்தால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
இந்த ஆட்டம் வியாழன் நடைபெறுகிறது.