யாழ்ப்பாணம் மாதகல், உரும்பிராய் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக ஐவர் கைது
Share
நடராசா லோகதயாளன்
இலங்கையின் வடக்கே மாதகல், உரும்பிராய் பகுதிகளில போதைப் பொருள் கடத்தலில ஈடுபட முயன்றதான சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் சிங்களவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து யாழில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய வாகனம் ஒன்றை சோதனை செய்தனர். அந்த வாகனம் போதைப்பொருள் கடத்தலுக்காக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட ரகசிய அறை இருந்ததால் வாகனத்தில் இருந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், மூவரில் இருவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் கேரள கஞ்சா வாங்குவதற்காக மாதகல் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இரண்டு கோடியே முப்பத்தொரு லட்சம் ரூபாயும், உரும்பிராயில் வசிப்பவருக்கு 55 லட்சம் ரூபாவும் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 3 மணிநேர விசாரணை மூலம் கிடைத்த தகவலின்படி உரும்பிராய் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து 55 லட்சம் ரூபா பணமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 லட்சம் ரூபாவும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையை அடுத்து மாதகல் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் இந்த கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பணம், மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இப்படியாக போதைப் பொருட்களும், அது தொடர்பிலானவர்களும் கைது செய்யப்படுவது, யாழ்ப்பாண மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய இலங்கை கடற்பரப்பு போதைப் பொருட்கள் கடத்தலில் முக்கிய மையமாக மாறி வருகிறது என்பதை பன்னாட்டு அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகிறது என்று கூறப்படும் போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக பிடிபடுகின்றன. இதேவேளை வடக்கு மாகாண இளைஞர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதையும் காண கூடியதாகவும் உள்ளது.