வடமராட்சியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரிச் சந்தை வெகுவிமர்சையாக இடம்பெற்றது
Share
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று (14-12-2023) காலை ஆரம்பப்பிரிவு பாடசாலையில் இடம்பெற்றது.
ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் வழிகாட்டலில் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற இந்த சந்தையில் மாணவர்களின் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், தேங்காய்கள், இலைவகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள், தீன்பண்டங்கள், பனைசார்ந்த உற்பத்திகளை பாடசாலையின் முன் முற்றத்தில் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.
ஆரம்பப்பிரிவு மாணவர்களிடம் சந்தையிலோ, கடைகளிலோ பொருள்களை வாங்கி விற்கும் திறனை ஏற்படுத்தவும், கணித அறிவை மேம்படுத்தவும், பொருள்களின் பணப்பெறுமதியை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாகவும், இப்படியான சிறிய ஒன்றுகூடல்களின் மூலம் மன மகிழ்வை ஏற்படுத்தவும், ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கும் பண்பை வளர்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
மிகுந்த ஆர்வமுடன் பொருள்களை விற்ற மாணவர்களிடம் இருந்து ஏனைய மாணவர்களும், கிராம மக்களும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.
சிறிய வயதுகளிலேயே இப்படியான அனுபவங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து எமது தற்சார்பு பொருளாதாரத்தை வளமாக்க இப்படியான கண்காட்சிகள் அவசியமானவை என கண்காட்சியில் பங்கேற்ற மக்கள் கருத்து தெரிவித்தனர்.