பௌத்தமயமாகும் சைவ ஆலயங்கள்: பிள்ளையாருக்கே பாதுகாப்பில்லாத சூழல் உருவாகிறது!
Share
நடராசா லோகதயாளன்
இப்போது பிள்ளையாருக்கும் ஆபத்து வந்துள்ளது.
இது தான் இன்று யதார்த்த நிலை. தமிழ் மக்களின் வளமான காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் நிலையில் இப்போது ஆலய காணிகளுக்கு ஆபத்து வந்துள்ளது. இலங்கையின் வடக்கு- கிழக்கில் இன்னும் பல இடங்களில் சைவ ஆலயங்களும் அதை அண்மித்த பகுதிகளும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், இப்போது மற்ற ஆலயங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தொடரும் நில அபகரிப்பு, சைவ ஆலயங்களை குறி வைத்து திட்டமிட்ட செயற்பாடுகள் ஆகியவை தொடரும் நிலையில், இப்போது தமிழர் தாயகத்தின் முன்னணி துறைமுக நகரான திருகோணமலையிலுள்ள ஒரு பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை ஒன்றை வைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை மடத்தடி பகுதியில், பிரதான வீதிக்கு அருகாமையில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டுமானப் பணிகளுக்கு நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அரச திணைக்களங்களினுடைய அனுமதியும் பெறப்படாமல் சட்ட விரோதமான முறையிலேயே இந்த கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றன
இது தொடர்பாக நகர சபையின் செயலாளர் கடந்த மாதம் 23 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தார் எனினும் கட்டுமானம்
தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பாரிய புத்தர் சிலை வைக்கப்படவுள்ளதாகவும், ஒருகாலத்தில் அப்பகுதியில் விகாரை அமைக்கப்படலாம் எனவும் தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் இந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் காணிக்குரிய ஆவணங்களை வழங்கக்கோரி கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்கள்.
மடத்தடி பகுதியில் 2019 ஆம் ஆண்டு சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி ஓர் சிறிய புத்தர்சிலை வைக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் நிலையம் உட்பட அரச நிர்வாக மட்டங்களிலும் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அது அகற்றப்படும் என கூறப்பட்டதாகவும் எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது அந்த இடத்திலேயே பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் தமிழர் பகுதிகளில் பௌத்த ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு இனங்களுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் இவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயமானது கி.பி 1650 ஆம் ஆண்டளவில் பெரியராசகோன் முதலியார் என்பவரால் திருகோணமலை – மடத்தடி பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. குறித்த பகுதியில் 1958 ஆம் ஆண்டு கலப்பகுதியில் இந்தப் பகுதியை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். தற்போது 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் கோவிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக தெரிய வருகின்றது.