LOADING

Type to search

இலங்கை அரசியல்

பனையும் தமிழும்

Share

“உத்தமர் தாம் ஈயுமிடத் தோங்கு பனை போல்வரென
முத்தமிழ்த்தாய் சொன்ன முதுமொழி போல் இத்தரையில்
நல்ல பனைத்தொழில் நாட்டினில் ஓங்க அதில்
வல்லவர்கள் வாழ்க மகிழ்ந்து.”

-திருமுருக கிருபானந்தவாரியார்

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு ஆதியானது. மரங்கள் இன்றேல் மனிதர்கள் இல்லை என்னும் அளவுக்கு இவ்வுறவுப் பிணைப்பு மிக வலுவானது. அதுவும், ஒரு பிரதேசத்தின் பூர்வகுடி மரங்களுக்கும் அம் மண்ணின் பூர்வகுடி மக்களுக்கும் இடையிலான பந்தம் உணர்வுபூர்வமானது. இவற்றிலும் சில பூர்வகுடி மரங்கள் அம்மண்ணின் மைந்தர்களது தனித்துவமான அடையாளங்களாக மிளிர்கின்றன. அந்த வகையில் பனைமரங்கள் தமிழினத்தின் பேரடையாளம் ஆகும்.

இந்தியாவில் உள்ள பனைமரங்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு மேல் தமிழகத்திலேயே வேரூன்றியுள்ளன. இலங்கையிலும் தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கிலேயே பனைமரங்கள் மிகஅதிகமாக உள்ளன. தமிழர்களின் தாய்நிலத்தின் தான்தோன்றித் தாவரமாகித் தமிழர்களின் இயற்கைச்சூழலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் இரண்டறக்கலந்துவிட்ட பனைமரங்கள் பற்றித் தமிழ் ஏராளமாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. மிகவும் தொன்மையான தமிழ்மொழி இயற்கைச்சூழலுடன் சேர்ந்தே பரிணாமித்து, இயற்கையை அதிகம் உள்வாங்கி வளர்ந்து செழித்த ஒரு சூழலியல் மொழியாகும். இதனால், தமிழ்மொழி தமிழ் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என வகைப்படுத்தி அந்த ஐந்திணைகளிலும் உள்ள பெருவாரியான மரங்கள் பற்றிப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இம்மரங்களில், வேறு எந்த மரங்களைவிடவும் பனைமரங்கள் பற்றியே அதிகம் விரிவாகப் பேசுகிறது.

இயற்கையைத் தொழுகின்ற தமிழ்மரபு பனைமரங்களைக் கடவுள்களாக ஏற்றிப்போற்றியுள்ளது. நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பனையின் பெருமைகளைச் சொல்லும் சிற்றிலக்கியம் ஒன்றைத் தாலவிலாசம் என்ற பெயரில் படைத்துள்ளார். வேண்டியவர்களுக்கு வேண்டியனவற்றைத் தருகின்ற தேவலோகத்து மரத்தைக் கற்பகதரு என்பார்கள். இக்கற்பனை மரத்துக்கு நிகராகப் பூலோகத்தில் ஏராளமானவற்றைத் தரவல்ல கற்பகதரு பனைமரம் மட்டுமே ஆகும். வேறு எந்த மரமும் தராத அளவுக்குக் பனை அதன் உச்சிக் குருத்து முதல் வேர் அடிவரை தன் பாகங்கள் அனைத்தையும் பயன்களாக ஈய வல்லது. தாலவிலாசத்தில் புலவர் பனையைஇ “எல்லாம் தரவல்ல தெய்வப்பனை” என்று ஏற்றித்தொழுதும்இ “எந்நாளுங் கற்பகம் போலீயுங் கடவுட் பனை வாழி” என்று வாயார வாழ்த்தியும் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையின் பாடலொன்றில் ஆலம்பேரி சாத்தனார் என்ற புலவர் ஊர்ப் பொதுமன்றத்தில் உள்ள பருத்த அடியுடைய பெண்பனையை “தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை” என்று விளித்துள்ளார். இதன்பொருள் ‘ஊர்ப்பொதுவெளியில் உள்ள பருத்த அடியுடைய பெண்பனையில் கடவுள் குடிகொண்டுள்ளார்’ என்பதாகும்.

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவாசலில் ஒல்லாந்தர் பனைமர உருவத்துடன் கூடிய இலச்சினையைப் பொறித்திருந்தனர். அவர்களது யாழ்ப்பாணத்துக்கான கொடியிலும் பனையையே சின்னமாகப் பயன்படுத்தியிருந்தனர். தமிழ்நாட்டு அரசாங்கம் மாநில மரமாகப் பனையையே அங்கீகரித்திருக்கிறது. இலங்கையில் வடக்கு மாகாணசபையும் தன் இலச்சினையில் பனையைத் தாங்கியுள்ளது. இப்படிஇ பனையை அடையாளச் சின்னமாகப் பயன்படுத்துவது சங்ககாலம் முதலே இருந்து வந்துள்ளது. மூவேந்தர்களில் சேரர்கள் தங்கள் குல அடையாளமாகப் பனம்பூ மாலையைச் சூடுகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். சோழர்கள் ஆர் என்ற ஆத்திப் பூவையும், பாண்டியர்கள் வேப்பம் பூவையும் தங்கள் குலப் பூவாக அணிந்து கொண்டார்கள். தொல்தமிழின் இலக்கணச் செழுமையையும், தொல்தமிழ் நாகரிகத்தின் செம்மாந்த பெரு நிலையையும் விளக்கும் ஒப்பற்ற பெருநூல் தொல்காப்பியம். இக்காப்பியத்தில் இதனை யாத்த தொல்காப்பியர்,

“வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெரும் தானை மலைந்த பூவும்” – என்று மன்னர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அணியும் பூக்களில் மற்றைய இருபூக்களுக்கும் வழங்காத சிறப்பைப் பனைம் பூவுக்கு வழங்கி “ஏந்துபுகழ்ப் போந்தை” என்று பெருமைப்படுத்தியிருக்கிறார். சேரலாதன் என்ற மன்னனின் கொடைச்சிறப்பைப் பாடிய காக்கைப் பாடினியார் என்ற புலவர் “வாழ்க நின் கண்ணி” என்று குலப்பூவையும் சேர்த்து வாழ்த்திய பாடல் பதிற்றுப்பத்தில் பதியப்பெற்றுள்ளது. சேரர்களின் கிளைக்குடியினராகக் கருதப்படும் பழுவேட்டரையர்கள் சோழப்பேரரசில் அவர்களுடன் நல்லுறவு பூண்ட குறுநில மன்னர்களாக விளங்கினார்கள். இவர்களது குலக்கொடியாகவும் பனை இருந்துள்ளது. பறம்புமலையை ஆண்ட குறுநில மன்னன் வேள்பாரியும் தனது குல அடையாளமாகப் பனையையே ஏந்தியுள்ளான்.

பலராமன் திருமாலின் எட்டாவது அவதாரமாகவும்இ கண்ணனின் மூத்த சகோதரராகவும் கருதப்படுபவர். ஆதித் தமிழ்நாட்டில் பலராமன் வழிபாடு இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் அறியத்தந்துள்ளன. வலிமை பொருந்திய இவர் ஒரு கையில் ஆயுதமாகக் கலப்பையையும் மறுகையில் பனைக்கொடியையும் ஏந்தியவராகக் காணப்படுகிறார். இவரது பனைக்கொடி சங்கஇலக்கியங்களில் பலஇடங்களில் உதாரணம் காட்டப்பட்டுள்ளது. காரிக்கண்ணனார் என்ற புலவனார் பெருந்திருமாவளவன் என்ற சோழமன்னனும் பெருவழுதி என்ற பாண்டியமன்னனும் ஒருங்கே வீற்றிருந்த ஒரு அரியசந்தர்ப்பத்தில் இருவரும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பாடலொன்றை யாத்துள்ளார். புறநானூறில் அடங்கியுள்ள இந்தப் பாடலில் “பால்நிற உருவின் பனைக்கொடியோனும்இ நீல்நிற உருவின் மேனியோனும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளைநிறம் கொண்ட பனைக்கொடி தாங்கிய பலராமன் போன்றும் நீலநிறம்கொண்ட திருமால்போன்றும் நீவிர் இருவரும் இருக்கின்றீர் என்பது இதன் விளக்கமாகும். நன்மாறன் என்ற பாண்டிய மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நக்கீரனார் என்ற புலவனார் பாடல்களை இயற்றியுள்ளார். புறநானூறில் இடம்பிடித்துள்ள இந்தப் பாடல்களிலொன்றில் “அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடியோனும்” என்று நன்மாறன் வலிமையில் பலராமனுக்கு நிகரானவனாகப் போற்றப்பட்டுள்ளான். கலித்தொகையில் காளைகளை அடக்குகின்ற ஏறுதழுவுதல் பற்றிய பாடல்களும் அடங்கியுள்ளன. இதில் பங்கேற்கும் காளையொன்று அப்பழுக்கற்ற வெள்ளைநிறம் கொண்டவை. இந்தக் காளையைச் சுட்டுவதற்கு சோழன் நல்லுத்திரன் என்ற புலவர் “ஒளிர்பனைக்கொடிப் பால் நிறவண்ணன் போல பழிதீர்ந்த வெள்ளையும்” என்று பலராமனைப் உவமைக்கு அழைத்துள்ளார்.

சங்க இலக்கியங்களின் போர்க்களக் காட்சிகளில் யானைகளின் துதிக்கைகளை உவமிக்கும் விதமாகப் பல பாடல்களில் புலவர்கள் பனையை எடுத்தாண்டுள்ளனர். புறநானூறில் உறுதியான பெரிய தும்பிக்கையுடைய யானை “இரும்பனை அன்ன பெருங்கை யானை” என்றும்இ போர்க்களத்தில் சிதறுண்டு விழ்ந்துகிடக்கும் யானைக்கூட்டம் “வெளிற்றுப்பனந் துணியின் வீற்று வீற்றுக் கிடப்ப” என்று வீழுந்துகிடக்கும் இளம்பனந்துண்டுகளுக்கு ஒப்பிட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்திலும் கைகள் வெட்டப்பட்டு யானைகள் வீழ்ந்து கிடக்கும் இடம் “பனைதடி புனத்தில் கைதடி பலவுடன்” என்று பனைமரங்கள் வெட்டப்பட்டுக் கிடக்கும் இடம்போன்று காட்சி தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூறில் மேகத்தை நோக்கிப் பிளிறும் யானைகள் “வெளிற்றுப் பனைபோலக் கைஎடுத்து யானை பெருநிரை வானம் பயிரும்” என்றும், அவற்றின் பெரிய துதிக்கைகள் “ பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கை” என்றும் பாடப்பட்டுள்ளது. அகநானூறில், காட்டுவழியிலுள்ள நடுகல்லை மனிதன் என நினைத்து உதைத்த காட்டு யானையின் காலிலுள்ள நகம் பெரிய பனை நுங்கின் தலையிலுள்ள தோடுபோலக் கழன்று வீழ்ந்ததாகப் பொருள்படும் பாடல் ஒன்றும் உளது.

“அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்
இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங் கண்” – என்ற இந்தப் பாடலை மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் பாடியுள்ளார்.

பனைமரங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக விளங்குகின்றமையைச் சங்க இலக்கியங்கள் சுற்றுச்சூழல் அவதானிப்புகளாகப் பதிவு செய்து வைத்துள்ளன. இரவில் பனைமரங்களில் பறவைகள் அடைக்கலம் தேடுகின்றன. இதனால், இவற்றுக்கு இடையூறுகள் ஏற்படாதெனக் கருதி அந்தணர்கள் அவ்விடங்களைத் தவிர்த்து வேள்விச் சாலைகளில் உள்ள தூண்களிலேயே விளக்கினை ஏற்றுவர். இதனை, உருத்திரங் கண்ணனார் என்ற புலவனார். தனது பெரும்பாணாற்றுப்படையில்,

“புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடற்செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசைக் கொண்ட – என்று பாடி வைத்துள்ளார்.

அகநானூறில் நக்கீரர் என்னும் புலவர் இரவுநெருங்கும்போது நாரை இரையைத் தின்னாது பனைமரத்தில் தனியாகத் தவிக்கும் பசுமையான கால்களை உடைய தன் குஞ்சுகளை அணைத்து ஒலி எழுப்பும் காட்சியை,
“அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசையாது
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென
அம்கண் பெண்ணை அன்புற நரலும்” – என்றவாறு பாடியுள்ளார்.

பனைமரம் பல்லினப் பறவைகளும் தங்குவதற்கு இடம் வழங்கும். நாரைகளோடு சேர்ந்து அன்றில் பறவைகளும் தங்குவதை அகநானூறில் மதுரைக் கண்ணத்தனார் “இன மீன் அருந்து நாரையோடு பனைமிசை அன்றில் சேக்கும் முன்றில்” என்று பாடியுள்ளார். காற்று பலமாக வீசும்போது பனை தலைவிரித்தாடும். ஓலைகள் சலசலக்கும் அந்த ஆட்டத்தில் பறவைகள் திகிலுற்று அபயக்குரல் எழுப்பும். அவ்வாறு அன்றில் பறவையொன்று என்புருகக் கத்துவதை நற்றிணையில் வெள்ளிவீதியார் என்னும் புலவர் “மைஇரும் பனைமிசைப் பைதல உயவும்இ அன்றிலும் என்புற நரலும்” என்றவாறு குறிப்பிட்டுள்ளார். புலம்பெயருகின்ற பறவைகளை வலசைப் பறவைகள் என்பார்கள். அப்படி வலசை போகும் பறவைகள் பற்றிய வருணனைகளிலும் பொருத்தமான இடம்பார்த்துப் பனையைச் செருகுவதற்குப் புலவர்கள் மறக்கவில்லை. இதற்குஇ சத்திமுத்தப் புலவர் இரண்டாகப் பிளந்த பனங்கிழங்கை நாரையின் அலகுகளுக்கு ஒப்பிடும்

“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்”

என்ற பிரசித்தமான நாரைவிடு தூதுப் பாடல் சிறந்த உதாரணம் ஆகும்.
தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் “பனையென் அளவும்” என்று தொடங்கும் நூற்பா உள்ளது. இது அளவுப் பெயராகப் பனை பயன்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றது. பொய்யா மொழிப்புலவரான திருவள்ளுவரும் “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” என்ற குறளிலும், “தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழி நாணுவார்” என்ற குறளிலும், தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்” என்ற குறளிலும் பனையைத் தினையுடன் ஒப்பிடும் ஒரு பேரளவையாகப் பயன்படுத்தியுள்ளார். திருக்குறளினதும் திருவள்ளுவரினதும் பெருமைகளை விளம்பும் பண்டைப் புலவர்கள் பலரது பாக்கள் திருவள்ளுவர் மாலை எனும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் கபிலர் என்பார் (இவர் குறிஞ்சிப் பாட்டுக் கபிலர் அல்லர்) “தினையளவு போதாச் சிறு புன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படிமத்தால்” என்று, சிறு குறளில் பெரும்பொருள் பதிந்திருப்பதைப் புல்லின் நீர்த்துளியில் நெடும் பனையின் விம்பம் தெரிவதுடன் உவமித்திருப்பார். ஈரடித் திருக்குறளைப் போன்றே சமண முனிவர்களின் நாலடியாரிலும்,

“தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர், சான்றோர்-பனையனைத்
தென்றும் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு”. – என்று பனை தினையுடன் ஒப்பிடப்படும் பேரளவையாகவுள்ளது. மன்னவன் ஒருவரை விளிக்கும் இந்தப் பாடல், தினையளவே உதவி செய்தாலும் சான்றோர் அதனைத் பனையளவாகக் கருதிப் போற்றுவர் ; நாளும் பனையளவு உதவி செய்தாலும் நன்றி உணர்விலார் அதனை ஒரு உதவியாகவே நினைக்கமாட்டார்கள் என்பதைப் பொருளாகக் கொண்டுள்ளது. பாரதத்தின் பதின்நான்காம் போர்ச்சுருக்கத்தில் “இன்னம் ஒரு பனைத்தனைப் போழ்து உண்டு” என்று பனை எனும் சொல் கால அளவைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் கிராமங்களில் பனையை நீட்டலளவையின் பேரளவையாகக் கொண்டு நீர் நிலைகளின் ஆழத்தை கால் பனைஆழம்இ அரைப்பனை ஆழம் என்று அளவிடுவதைக் காணலாம்.

காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர். கற்காமலே கவிபாடும் ஆற்றலைப்பெற்றவராகக் கருதப்படும் இவர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவர் பனையையும் விலைமாதையும் சிலேடையாகப் பாடிய,
“கட்டித்தழுவுவதால் கால்சேர ஏறுதலால்
எட்டிப்பண்ணாடை இழுத்தலால் முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
வேசை எனல் ஆமே விரைந்து” என்ற பாடல் பிரசித்தமானது.

கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்தவர்களை ஆசுகவி என்பார்கள். அத்தகைய கவிஞர்களுள் யாழ்ப்பாணம் வயாவிளானைச் சேர்ந்த கல்லடி வேலுப்பிள்ளை பிரபல்யமான ஒருவர். இவர்,

“அல்லையுற்று இரத்தினபுரியண்டி யப்பாலே நிவிற்றிக்
கொல்லையடைந்தலுப்புக் கொண்டற்கு கல்லடியான்
வண்டாரும் மாலையணி மற்புயச் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற்கூழ்” – என்றதொரு பாடலில் ஒடியற்கூழ் அருந்தியதை கொண்டாட்டமெனச் சுட்டியுள்ளார். இரத்தினபுரிக்கு அப்பால் நிவிற்றிக்கொலை எனுமிடத்தில் மருத்துவராகப் பணியாற்றிய தனது நண்பரான சுப்பையன் என்பவரை மிகுந்த அல்லற்பட்டுக் காணச்சென்ற புலவரை அவரது களைப்புத்தீர நண்பரும் அவர்தம் மனையாளும் சேர்ந்து ஒடியற்கூழ் வழங்கி உபசரித்திருந்தனர். ஒடியற்கூழ் உண்ட புலவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டதும் அவர் வாயில் இருந்து வந்த பாடல் இதுவாகும்.

மூவேந்தர்கள் அவர்களின் போர்க்குணத்தால் அறியப்பட வேள்பாரி கடையேழு வள்ளல்களுள் தலையானவராகச் சங்க இலக்கியங்களில் போற்றப்படுபவர். பாரியின் பெரும்புகழைப் பொறுக்காத மூவேந்தர்கள் தனித்தனியாகப் பாரியை வெல்ல முடியாத நிலையில் கூட்டுச்சூழ்ச்சியால் அவரைக் கொன்றுவிடுகின்றனர். பாரியின் இறப்புக்குப் பின்னர் ஆதரவின்றி அபலைகளாக அலைந்த அவர் மகளிர் இருவரையும் மூவேந்தர்களுடன் பகைக்க அஞ்சி எவரும் மணம் முடிக்க முன்வரவில்லை. பாரியைப் பாடிப் பொருள்பெற்ற நன்றிக்கடனாக ஒளவையார் முன்னின்று மூவேந்தர்களுடன் சமரசம்பேசித் திருமணத்தை ஒப்பேற்றி வைத்தார். மணவிழாவுக்கு வருகை தந்த மூவேந்தர்கள் பனை பழுக்காத அந்த அகாலத்தில் பனம்பழம் கேட்கின்றனர். விருந்தோம்பல் சரியில்லை என்பதைச் சாட்டாக வைத்து திருமணத்தை அவர்கள் நிறுத்திவிடக்கூடாது என்று அஞ்சிய ஒளவை அங்கிருந்த பனந்துண்டு ஒன்றை நோக்கி,
“திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும், பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே
சங்கொக்க வெண்குருத் தீன்று பச்சோலை சலசலத்துக்
கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பை விட்டு
நுங்குக் கண்முற்றி யடிக்கனி கறுத்து நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே” – என்று பாட பனந்துண்டமும் உயிர்பெற்றுக் குருத்தீன்று நுங்குக் குலைதள்ளி மூவேந்தர்க்குமாக ஒன்பது பனங்கனிகளை நல்கியதாம். ஒளவையின் இப்பாடல் இராமநாதபுரம் பண்டிதர் மு.இராகவையங்கார் தொகுத்த பெருந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

பக்தி இலக்கியங்களும் பனை பற்றிப் பரவசத்துடன் பேசியுள்ளன. சைவசமயக் கோவில்கள் பலவும் பனையைத் தலவிருட்சங்களாகக் கொண்டுள்ளன. இவற்றில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருப்பனங்காடுஇ திருவோத்தூர், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள்இ திருப்பனையூர்இ அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் திருமழபாடிஇ விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புறவார் பனங்காட்டூர் ஆகிய ஆறு தலங்களும் சமயகுரவர்கள் நேரில் சென்று தரிசித்துத் தங்கள் பாக்களால் அர்ச்சித்த திருத்தலங்களாக விளங்குகின்றன. திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் மீது சம்பந்தர் பாடிய பதிகமொன்றில் “குரும்பை ஆண் பனை ஈன்குலை ஓத்தூர்” என்ற வரி இடம்பெற்றுள்ளது. வேதபுரீஸ்வரருக்குச் சிவனடியார் ஒருவர் எழுதி வைத்த பனை மரங்கள் ஆண் பனைகளாக இருந்தமையால் அவை கனிகளைத் தரவில்லை. சிவன் மூலம் அவற்றைக் காய்க்கச் செய்யலாமே எனச் சமணர்கள் சிவனடியாரை எள்ளிநகையாட, அவர் இதனைச் சம்பந்தரிடம் மனம் வருந்தி முறையிட்டுள்ளார். மனம இரங்கிய சம்பந்தர் வேதபுரீஸ்வரரைத் திருப்பதிகங்களால் அர்ச்சிக்க, சிந்தை குளிர்ந்த சிவன் சம்பந்தரின் வேண்டுதலை ஏற்று ஆண் பனைகளைச் பெண்பனைகளாக்கிக் குரும்பைகளை ஈன வைத்தார் என்பது இவ் ஆலயத்து வரலாறாக உள்ளது. இத்திருத்தலத்தில் ஒருபுறம் ஆண் பாளையும் இன்னொருபுறம் பெண் பாளையும் இருப்பதுபோன்று கருங்கல்லினாலான பனைச் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
பனைகளை விளித்தும் வருணித்தும் உவமித்தும் பேசிய தமிழ் பனையின் பயன்களின் மிக நீண்ட பட்டியலையும் வாசிக்கிறது. பனை வருடத்தின் ஒவ்வொரு பருவத்திலும் பதநீராகஇ கள்ளாகஇ நுங்காகஇ பனம்பழமாகஇ பனங்கிழங்காக ஏதாவது ஒன்றை உண்பதற்காக வழங்கிக்கொண்டே இருக்கிறது. நலன்கிள்ளி மன்னவனின் படையணியின் பெருமையைச் சொல்ல வந்த ஆலத்தூர்கிழார் என்ற புலவர் பனையின் பருவஉணவுப் பயன்பாட்டைத் தொட்டுப்பாடியே அதனை விளக்கியிருக்கிறார். புறநானூறில் உள்ள இவரது பாடலில்,
“தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர” என்றவரிகள் இடம்பெற்றிருக்கின்றன.

படையணியில் பனையிருக்கும் இடத்துக்கு முதலில் சென்றோர் நுங்கையும் பின் தொடர்ந்தோர் பனம்பழத்தையும் கடைஅணியிற் சென்றோர் பனங்கிழங்கையும் உண்டார்கள் என்பதன் மூலம் படையணி பாதையைக் கடந்து செல்ல மிகநீண்ட காலம் எடுத்தது என்பதையும் படையணியின் பெருநீட்சியையும் புலவர் புலப்படுத்தியிருக்கிறார்.

சங்ககாலத்தில் ஒரு இயற்கை உணவாகக் கருதப்பட்ட கள் குறித்தும் இலக்கியங்களின் அதிகம் பேசப்பட்டுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சி நெஞ்சில் வேல் பாய்ந்து இறந்த பின்னர் கையறு நிலைக்கு ஆளான ஒளவையார் அவனது பெருமைகளை எடுத்தியம்பும் விதமாக பாடிய பாடலில்,

“சிறிய கட் பெறின் எமக்கீயும் மன்னே,
பெரிய கட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்துண்ணும் மன்னே” – என்ற வரிகள் உள்ளன. புறநானூறில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலின் பொருள், ‘சிறிதளவு கள் கிடைக்குமானால் அதை முழுவதுமாக எனக்கு உண்ணக் கொடுத்து விடுவான். பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவுக்கு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாட அதைக் கேட்டுக் கொண்டே அவனும் பருகுவான்.’ என்பதாகும். கள்ளில் ஆத்திரையனார் என்ற புலவர் அவரது பாட்டுடைத் தலைவனான ஆதியருமன் என்ற மன்னரின் ஊரைச் சுட்டும் விதமாகப் பாடிய,

“கள்ளிற் கேளிர் ஆத்திரையுள்ர்ப்
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதியருமன் மூதூரன்ன” – என்ற பாடல் குறுத்தொகையில் இடம்பெற்றுள்ளது. ‘ஆதியருமனுக்குரிய பழைமையான ஊரில் கள் குடிக்கச் செல்பவர்கள் கள்ளைக் குடித்து விட்டு திரும்பும்போது நுங்கையும் எடுத்துச் செல்வார்கள்’ என்பது இதன் பொருளாகும். ஆவூர் மூலங்கிழார் என்ற புலவனார் மல்லிகிழான் காரியவாதி என்ற மன்னனின் கொடையினைப் பாடும்; புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், “கள்மாறு நீட்ட நணி நணி இருந்த” என்று அவனது காவலரண்கள், அங்குள்ள காவலர்கள் கள்ளினை ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி நீட்டும் அளவிற்கு மிக நெருக்கமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். உறையூர் மருத்துவன் தாமோதரனார் என்ற புலவர் கிட்டம் கொற்றன் என்ற மன்னவனின் வல்லாண்மையைக் குறித்து பேசும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடலொன்றில் “நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்” என்று கள் பன்னாடையில் வடித்து உண்ணப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்.

சங்க இலக்கியங்கள் ‘உண்மின் கள்ளே’ என்று பதிற்றுப் பத்தில் உள்ளவாறும், ‘கள்ளார் உவகை’ என்று அகநானூறில் உள்ளவாறும், ‘கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்’ என்று புறநானூறில் உள்ளவாறும் கள்ளுண்பதை வாழ்த்திப் புகழ்ந்தபோதும் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கள்ளினை இகழ்ந்து கள்ளுண்ணாமை என்று ஒரு தனி அதிகாரத்தை படைத்திருக்கிறார். கள்ளின்மேல் ஆசை கொண்டவர்கள் எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார் ; தம் புகழையும் இழந்து விடுவார்கள் என்று “உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும், கட்காதல் கொண்டொழுகு வார்.” – என்ற குறளிலும், கள்ளுண்ணக்கூடாது ; சான்றோர்கள் நன்மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தேவையெனில் உண்ணலாம் என்று, “உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான், எண்ணப் படவேண்டா தார்.” – என்ற குறளிலும், உறங்குபவர் இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குவதால் நஞ்சுண்பவரே ஆவார் என்று“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும், நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” – என்ற குறளிலும், கள்ளுண்பவர் ஒருவர் தான் உண்ணாதபோது கள்ளுண்டு தள்ளாடும் பிறிதொருவரை பார்க்கும்போது தன்நிலையும் இப்படித்தான் என்று எண்ணமாட்டாரோ என்று “கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால், உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.” – என்ற குறளிலும் கள்ளுண்பது பிறரால் வெறுக்கத்தக்க செயல் என்பதாகவே பதிவு செய்கின்றார். கள்ளுண்ணும் பெருங்குற்றத்தைச் செய்பவரின் முன்னால் நாணம் என்னும் நற்குணம் இல்லாது போய்விடும் என்று “நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும், பேணாப் பெருங்குற்றத் தார்க்கு” – என்ற குறளில் கள்ளுண்பதை ஒரு பெருங்குற்றச் செயலாகவே கருதிப் பதிவிட்டிருக்கிறார்.

பனை பழந்தமிழ்ப் பண்பாட்டில் காதல் வாகனமாகவும் பயணப்பட்டிருக்கிறது. ஆணொருவர் அவரது காதலை ஏற்க மறுத்த பெண்னை வலிந்து இசைய வைக்கும் முயற்சியாக பனையின் கருக்கு மட்டைகளினால் குதிரை உருவொன்றையாக்கி அதில் ஏறி அமர்ந்துகொண்டு – பிறர் இழுக்க – ஊர்ந்து சென்று ஊராருக்குத் தன் ஒருதலைக் காதலை அம்பலப்படுத்துவார். ஊராரின் வற்புறுத்தலால் அல்லது மடந்தை மனமிரங்கிக் காதலை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் ஆடவர் கருக்குக்குதிரை ஏறுதல் ‘மடலேறல்’ என விழிக்கப்பட்டுள்ளது. ஆவிரைப் பூவுடன் எருக்கம்பூ மாலையையும் சூடி, பெண் பனை மடலால் செய்த குதிரையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க, அக்குதிரையில் ஏறி, எனக்கு நீங்க வருத்தத்தைத் தந்த என் காம நோயைத் தாங்க மாட்டாமல், அதனைப் போக்கவதற்காக மங்கை என்னை வருத்தியதை நான் பாடுவேன் என்ற பொருள்பட கலித்தொகையில்,

“அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வநோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது
பாடுவேன் பாய் மா நிறுத்து.” – என்ற நல்லந்துவனார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ளது. இதே புலவனார் கலித்தொகையில், ‘காதலித்ததால் வந்த வருத்தமும், வருத்தத்தால் பனை மடலால் செய்த குதிரை ஏறுதலும் நான் விரும்பியவள் எனக்கு அளித்தவையாகும்.’ என்ற பொருளில்,

“எல்லீரும் கேட்டீமின் என்று
படரும், பனை ஈன்று மாவும் சுடர் இழை
நல்கியாள், நல்கியவை.” என்ற பாடலை யாத்துள்ளார்.

திருக்குறளும் மடலேறுதலைத் தப்பவிடவில்லை. ‘நாணத்தோடு நல்ல ஆண்மையைக் கொண்டிருந்த நான் இன்று அவற்றை மறந்து காமம் உற்றவர் செய்யும் மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.’ என்ற பொருள்பட, திருவள்ளுவர்

“நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.” – என்ற குறளை இயற்றியுள்ளார்.

தமிழ் வாழ்வில் பனை ஒரு மருத்துவராகவும் பிணிபோக்கியிருக்கிறது. அகத்திய முனிவர் தலைமைச் சித்தராகப் பதினெண் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் பனையின் மருத்துவப் பயன்கள் பல எடுத்தியம்பப்பட்டுள்ளன. பனையின் வெல்லத்துடன் சுக்கும் சிறிதளவு நிலக்குமிழும் சேர்த்துக் காய்ச்சிய குடிநீரைக் காலையில் குடித்துவர சுரம், சமிபாடின்மை, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றாலும் வரும் நோய்களும், பால் வினைநோய்களும் இரத்தச் சோகையும் போய்விடும் என்று,

“வல்ல சுரம் பெரு மாந்தம் போம் தோஷம் போம்
சொல்லவெரு மேகம் போம் – நல்லாய்க்கேள்
தாலவெல்லஞ் சுக்குடனே சற்றே நிலக்குமிழுங்
காலமே காய்ச்சியுணக் கால்” – என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது. இப்பாடல் அகத்தியரின் குணபாடத்தில் இடம் பெற்றுள்ளது. அதே நூலில் நுங்கு வியர்வைக் குருவை நீக்கும், பசியைத் தூண்டும் தோலுடனேயுள்ள நுங்கு வயிற்றுளைவு நோயைப் போக்கும் என்ற பொருளில்,

“நீர்வார் வியர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தாணொழிக்குஞ் – சேர்வார்
விழிக்கரையாந் துஞ்சளிக்கு மென்சுரதமானே
கழிக்கரையாந் தாளியிளங் காய்” – என்ற பாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. அதேசமயம் பனம்பழத்தை அளவுக்கு அதிகமாக உண்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் சித்த மருத்துவம் விளம்பி நிற்கிறது. நல்ல உணவெனப் பனம்பழத்iதை நாளும் உண்ணும்போது எக்சிமா எனப்படும் கரப்பான், சிரங்கு, மலச்சிக்கல், என்பனவற்றுடன் பித்தத்தால் ஏற்படும் நோய்களும் சூழ்ந்து கொள்வதை,

“நாளும் பனம்பழத்தை நல்லமுதாய் உண்ணுங்கால்
ஆளுங் கரப்பான் அழுகிரந்தி – நீளுமலங்
சிக்கும்பித் தத்தில்வளி சேருதலால் நோய்க்கணமு
சிக்கும்ப லக்குமெனச் செப்பு” – என்ற பாடல் செப்புகின்றது. அற்புதசிந்தாமணியில் இடம்பெற்றுள்ள இப்பாடல் அளவுக்கு அதிகமானால் அமுதமும் நஞ்சாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.

பனைமரமே பயன்களை விளம்புவது போன்ற பல நாட்டார் பாடல்களும் கும்மிப்பாடல்களும் உள்ளன. பனைமர சோபனம் என்ற குறுநூல் திருப்போரூர் கோபால்நாயகர் என்பவரால் அவரது அச்சியந்திரசாலையில் 1914 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பின்னர் பனையைப் பெருக்குவதிலும் பனம்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் பெரும் பங்காற்றிய மில்க்வைற் சவர்க்காரத் தொழிலக அதிபர் க. கனகராசா அவர்களால் காசி குலரத்தினம் அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் “பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய்” என்ற கேள்விக்குப் பனைமரமே பதிலளிக்கும் விதமாக,
“நான் வளர்ந்த காரியத்தை நாட்டாரே சொல்லுகிறேன்
படுக்கப்பாய் நானாவேன் பாய்முடையத் தோப்பாவேன்
வெட்டநல் விறகாவேன் வீடுகட்ட வாரையாவேன்
பட்டுப்போற பயிர்களுக்கு பலத்தநல்ல யேத்தமாவேன்
அட்டடுக்குப் பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்
கட்டநல்ல கயிறாவேன் கன்று கட்டத் தும்பாவேன்
கிணற்று ஜல மொண்டுவரக் கைத்தாம்புக் கயிறாவேன்
பலத்த சுமைப்பாண்டங்கட்குப் பிரிமணையுந்தானாவேன்
ஏழைநல்ல சுமங்கலிக்கு ஏற்ற காதோலையாவேன்
எழுதுகின்ற பிள்ளைகட்கு எழுத்தாணிக் கூண்டாவேன்
வாசிக்கின்ற பிள்ளைகட்கு வண்ண நல்லத்தடுக்காவேன்
பசித்து வருவார்க்குப் பனம்பழமும் நானாவேன்
களைத்து வருவார்க்கு கள்ளமுதம் நானாவேன்
பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்
சித்திரைக்கோடையிலே சிறந்த நல்ல நுங்காவேன்
சண்டப்பிள்ளைத் தாய்மார்க்கு கற்பகக்கட்டி யான் தருவேன்
கன்றீன்ற மங்கையர்க்கு கற்பக்கட்டி நானாவேன்
சீமந்த வாசலுக்கு சீருடனே நான்போவேன்…..” – என்று இன்னும் ஏராள பயன்களை விடையாகப் பகர்ந்த பனை ஈற்றில்,
“இத்தனைக்கும் உதவியென என்னை ஐயன் சிருஷ்டித்தான்
ஊழியூழி காலமட்டும் உலகுதனிலே இருந்து
வாழிவாழி என்று சொல்லி வரமளித்தாரீஸ்வரநார்” – என்று தன் படைப்பின் மகிமையையும் பகிர்வதற்குத் தவறவில்லை.

இந்த மண்ணின் மரம் என்ற வகையில் பனை தன் போராட்டப் பங்களிப்பாகவும் பல பயன்களை நல்கியிருக்கிறது. இவற்றைத் தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் அறிவுமதி நாட்டார் பாடலாக வடித்திருக்கிறார். பனைமர சோபனத்தில் ஏன் பிறந்தாய் ஏன் பிறந்தாய் என்ற கேள்விக்குப் பனை பதிலளிப்பதைப் போன்றே இந்தப் பாடலிலும் பனை பதிலிறுத்திருக்கிறது.
“உண்பதற்கும் தின்பதற்கும் தருவதற்கா நீ வளர்ந்தாய்
தற்பெருமை பேசுதற்கா தலைநிமிர்ந்து நீ எழுந்தாய்”
என்று தமிழ்மொழி என்னும் பெண்ணொருவர் பனையை இகழ்ந்;துரைக்கஇ பனைஇ

“பொறுமகளே பொறுமகளே பொறுமையுடன் கேள்மகளே
புலிப்பிள்ளை போராட முதல்மார்பு நானல்லோ
உலங்கூர்தி தனை அடிக்க உயர்வட்டு நானல்லோ
தூரத்து எதிரிதனைக் கண்டுசொல்ல நானல்லோ
பதுங்குகுழி தானமைக்கப் பயன்பட்டேன் நானல்லோ
மறைவுகட்ட ஓலைகளாம் மறைந்தடிக்க பனங்குற்றி
ஓய்வெடுக்க அடிமரமாம் எதிரிவர நுனிமரமாம்
வழிகாட்டத் துணையாக நீரில் செல்லத் தெப்பமென
பயன்படவே பயன்படவே பனைமரமாய் நான் வளர்ந்தேன்.
உறுதியுடன் நான் நின்று எதிரிகளைத்தான் வென்று
உடம்பெல்லாம் உயிரெல்லாம் விடுதலைக்கே தான் தந்து
தலைவரது நெஞ்சத்தில் தமிழீழ வரலாற்றில்
புலிகளைப் போல் வாழ்வதற்கே பனைமரமாய் நான் வளர்ந்தேன்”
என்று பனை தன் போர்க்காலப் பயன்களைப் பெருமையோடு சொல்கிறது.
எழுத்து இலக்கியங்கள் மாத்திரமல்ல ; வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகளும் பனையைத் துணைக்கு அழைப்பதற்குத் தவறவில்லை. ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’, ‘பைய மென்றால் பனையையும் மெல்லலாம்’, ‘வடலியை வெட்டி ஆள் எருமையைக் கட்டி ஆள்’, ‘பங்காளியையும் பனங்காயையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்’, ‘காவோலை விழக் குருத்தோலை சிரித்ததாம்’, ‘ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக்குத்த ஒரு ஈர்க்கும் இல்லை’, ‘குருவி தலையில் பனங்காய் போல’, ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல’, ‘காகம் இருக்கப் பனம் பழம் விழுந்ததுபோல’, ‘தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது போல’, ‘வடலி வளர்த்து கள்ளுக் குடித்தது போல’, ‘கையால் கிழிக்கும் பனங்கிழங்குக்கு ஆப்பும் வல்லீட்டுக் குற்றியும் ஏன்?’ என்று பனை பற்றிய வாழ்வனுபவப் பாடத்தைப் பொருள் விளக்கம் தேவையற்ற வட்டார மொழியில் சொல்லும் மூதுரைகள் இன்னும் ஏராளம் உள்ளன. வாய்மொழி இலக்கியத்தின் விடுகதை என்னும் புதிர் வடிவத்திலும் நுங்கை மறைபொருளாகக் கொண்ட ‘தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான்’, பனம் பழத்தைப் மறைபொருளாகக் கொண்ட ‘தொப்பென்று விழுந்தான் தொப்பி கழன்றான்’ என்பன போன்ற பனையுடன் தொடர்புபட்ட பல நொடிகள் உள்ளன.

பனையைப் போற்றிய பழந்தமிழ் பனையால் தானும் செழிப்புற்று வளர்ந்தது. எஸ்கிமோக்களின் மொழியில் பனியைக் குறிப்பதற்கு உள்ள சொற்களின் எண்ணிக்கை பிறமொழிகளில் உள்ள பனியைக் குறிப்பதற்கான சொற்களைவிடவும் அதிகமாகும். அதேபோன்றே தமிழ்மொழியே உலகின் ஏனைய மொழிகளைவிடவும் பனையுடன்தொடர்புபட்ட சொற்களை மிகஅதிகமாகக் கொண்டிருக்கிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மரங்களின் அகரவரிசை என்ற நூலில் தாலம்இ தானிஇ நெடினிஇ நெடுமிஇ பெண்ணைஇ புற்பதிஇ போந்தைஇ மதுராசம்இ வரானிகம்இ கற்பகம்இ கரதாளமஇ; ஜலந்தாலம் என்று நூற்றியொரு பெயர்கள் பனையின் பெயர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பனைமரத்துக்கு ஏராளமான பெயர்கள் இருப்பதைப் போன்றே பனையின் இலையும் அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் அரசாணை எழுதப்பெறும் ‘கோனோலை’, அரச காரியங்களைப் பதியும் ‘பட்டோலை’, மன்னர்கள் தூதனுப்பும் ‘தூதோலை’, சீருடன் போகும் ‘சீரோலை’, தகவல் தெரிவிக்கும் ‘சீட்டோலை’, கணக்கெழுதும் ‘கணக்கோலை’, மரணச் செய்தி காவும் ‘இளவோலை’, எதுவுமே எழுதப்பெறா ‘வெள்ளோலை’ என்று வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளன. அதன் கள்ளைச் சுட்டவும் மதுஇ வடிஇ அம்மியம்இ கருப்பமஇ; கல்லியம்இ சுமாலிஇ சுலோகிஇ தேறல் என்று பல பெயர்கள் இருந்துள்ளன. பனம்பழத்துக்குக் கூட அவற்றின் வண்ணம்இ வாசனைஇ சுவை என்பவற்றின் அடிப்படையில் தொரைச்சிஇ கரிப்பச்சிஇ நரிக்காச்சிஇ கிளுவங்காச்சிஇ கற்பூரக்காச்சிஇ என்று பல பெயர்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. பொதுவாக பனம்பழத்தில் மூன்றுவிதைகள் இருக்கும.; சில சமயங்களில் முறைதவறி ஒருவிதை இருப்பதுண்டு. இந்த ஒற்றைவிதைப் பனம்பழம் குடவன் காச்சி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழுக்குப் பெரும் சொற்தேட்டம் தேடித்தந்த பனைஇ தமிழை அழியவிடாது பேணிப் பாதுகாக்கவும் செய்தது. பண்டிதர்களும், பாவலர்களும், அறிஞர்களும் ‘உரிய குருத்துப் பருவத்தில் இறக்கி, குறித்த அளவுகளில் நறுக்கி, பத்திரமாய்ப் பக்குவப்படுத்திய’ பனை ஓலைத் துண்டங்களிலேயே தம் சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தன. ஆணிகள் கொண்டு எழுத்தின் சுவடுகள் பதியப்பெற்ற பனை ஓலைத் துண்டுகள் சுவடிகள் என்று மதிப்புப் பெற்றன. மஞ்சள், வேம்பு, வசம்பு போன்ற இயற்கைப் பாதுகாப்புகளோடு ஓலைச் சுவடிகள் இருநூறு, முந்நூறு வருடங்கள் என்று நீண்ட ஆயுளோடு இருந்தன. பழுதடைவதற்கு முன்பாக மூல ஓலைகளில் இருந்து புதிய பனை ஓலைகளில் படியெடுத்துப் படியெடுத்துப் படியோலைகளாகப் பத்திரப்படுத்தப்பட்டன. இவ்வாறு, தொல்காப்பியம்இ அகநானூறுஇ புறநானூறுஇ பத்துப்பாட்டுஇ எட்டுத்தொகைஇ திருக்குறளஇ; தேவார திருவாசகங்கள்இ கம்பராமாயணம்இ சிலப்பதிகாரம், சித்த மருத்துவம் போன்ற தமிழின் உன்னதப் படைப்புகளைப் பதித்தும் பாதுகாத்தும் சுவடிகளாக எங்கள் கைகளில் சேர்ப்;பித்தவை பனைகளே. பனை ஓலைகள் இல்லாதுபோயிருந்தால் தமிழ் இந்த அளவுக்கு இலக்கண இலக்கியங்களால் வனப்புற்றிருக்க முடியாது. அறிவியல் மொழியென்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்க முடியாது. தொன்மைத் தமிழ் என நிறுவி உயர் தனிச் செம்மொழி என்ற செம்மார்ந்த பெருமையையும் எட்டியிருக்க முடியாது.

தமிழ்ப் பண்பாடே பனைப் பண்பாடு என்று சொல்லும் அளவுக்குத் தமிழர்களின் வாழ்வியலில் பனை இரண்டறக் கலந்ததால் பனம் பொருட்களுக்கான கேள்வி அதிகமாக இருந்தது. இதனால் பண்டைய காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் பனைப் பொருளாதாரம் விருத்தி பெற்றிருந்தது. தமிழகம் அதிக எண்ணிக்கையான பனைமரங்களைக் கொண்டிருந்தபோதும், வடக்கு இலங்கையில் இருந்து பனம்பொருட்களைத் தருவித்த வரலாறு தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இலங்கையில் கால் பதித்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எல்லோருமே பனையைச் சீனிமரம் என்றே அழைத்திருந்தார்கள். அந்த அளவுக்குப் பண்டைத் தமிழ் வாழ்வில் கற்பக்கட்டி என்னும் கருப்பட்டி இனித்திருந்தது. வாஸ்கொடகாமாவின் மகனான மானுவல் காமா என்ற போர்த்துக்கேய வாணிபர் கருப்பட்டிகளை வாங்கித் தூத்துக்குடி காயல் துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைத்ததாக 16 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் பனாட்டு, பனங்கிழங்கோடு பனை மரங்களும் தென்னிந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவர்களால் வடமராட்சியில் பனை வெல்லத் தொழிற்சாலை ஒன்றும் நிறுவப்பட்டது. பனைத் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வரிவசூலிப்பு நிகழ்ந்துள்ளதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கள் இறக்குவோர் ஈழவர் என்று அழைக்கப்பட்டதால் கள் இறக்குவோர் மீதான வரி ஈழப்பூச்சி என்று அழைக்கப்பட்டிருந்தது. வணிகப்பண்டமொன்றின் நுகர்வு அதிகமாக இருக்கும்போதே வரிவிதிக்கப்படும் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையில் முன்னர் பனைப் பொருளாதாரம் சிறப்புற்றிருந்தது என்ற முடிவுக்கு வரமுடியும்.
பனை எங்கள் சூழல்இ பனை எங்கள் பண்பாடுஇ பனை எங்கள் பொருளாதாரம் என்று இறுமாப்புற்றிருந்த தமிழ் துரஅதிர்ஷ்டவசமாகப் பனையின் அழிவுகளைப் பேசும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கிறது. கவிஞர் புதுவை இரத்தினதுரை

“கோடி பனை நிமிர்ந்த நாட்டில்
மாடி மனை நிமிர மரம் தறிப்பவனே
மழையற்றுப் போனதடா மண்
நிற்க நிழலற்ற நெடும்பாலையாவதற்கு
குற்றமென்ன செய்தாள் எம்தாய்” என்று வேதனையுடன் பனையின் இன்றைய யதார்த்தத்தைப் பாடிச் சென்றிருக்கிறார். சு.வி என்று இலக்கிய உலகில் அறியப்படும் கவிஞர் சு. வில்வரத்தினம்,
“நின்று நிமிர்ந்த பனைகளின்
நேர்த்தியாய் நின்ற கற்பகநாடு
இன்று வெட்டுண்டு வீழ்ந்திடலாச்சோ
வெறுங்கூடலாச்சோ பனைகளின் நாடு” – என்றும்,

“அதோ பருதிக் குஞ்சு எழுகின்றதே!
பக்குவமாய் அதைக் கைகொடுத்து ஏந்தி
பயணம் அனுப்புதல் போல
நின்றனவே நெடுங்கையெடுத்த பனைகள்
வெட்டி வீழ்த்தப் பட்டனவே
அவற்றின் ஒப்பாரி கேட்டு
வெறித்த பாழ்வெளிச் சூரியனும் நடுங்கினனே” – என்றும் தனது கவிதைகளில் பனைகளின் அழிவையிட்டுப் புலம்புகின்றார். புலம்பெயர்; ஈழக்கவிஞர் திருக்குமரன் தனது வடலிகளின் ‘வாழ்வெண்ணி’ என்ற கவிதையில்,
“பறந்தடித்த n~ல்லுக்கும்
பாய்ந்து வந்த குண்டுக்கும்
அறுத்துன்னுடலை அரணாய்க் கொடுத்தாய் நீ.
உயிராக, உடலாக,
உனை முழுதாய்க் காப்பரணாய்
தாரைவார்த்த எங்கள் தருவே!
போர்மேகம் ஆரைத்தான் இம்மண்ணில்
அழிக்காமல் விடவில்லை
பொழிந்தடித்த போர் மழையில்
பொசுங்கித் துடிதுடித்து
அழிவடைந்த சனத்துக்குள்
அடங்குதடா உன் சனமும்” – என்று பனையை நினைத்துக் கலங்குகிறார்.

யுத்தம் தின்றதுபோக எஞ்சியுள்ள பனை மரங்களை யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி அழித்துவருகிறது. பனங்கூடல்களை மெல்ல மெல்லத் தெங்குத் தோட்டம் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது. அபிவிருத்திகள் எவையும் பனை சார்ந்தும் இல்லை. வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி என தமிழுக்கு இனித்தனவற்றைக் கருப்பம் சீனியால் ஓரங்கட்டுவதும், தரிசு நிலங்களின் பரிசாக பனை மரங்கள் நெடுத்து நிற்கப் பயிர்செய் கரிசல் நிலங்களில் கரும்புச் செய்கைக்கு இடம்தேடுவதும், பனையோலை, பனம் நார்ப்பொருட்களை கைகழுவி விட்டு பிளாஸ்ரிக்கை ஏந்துவதும் உலகமயமாக்கலின் அகராதியில் அபிவிருத்தி என்றாகின்றன. ஆனால், இவை சூழலியற் பார்வை கிஞ்சித்தும் அற்ற அந்தக அபிவிருத்தியே ஆகும்.

ஒரு காலத்தில் ‘எல்லாம் தரவல்ல தெய்வப்பனை என்றும்’, ‘கற்பகம் போலியும் கடவுட் பனை’ என்றும் பனைகளைக் கொண்டாடிய நாம் இன்று அவற்றை அனாதரவாகக் கைவிட்டுள்ளோம். “பனையைக் கட்டி வாழ்வோமே தவிர கைகட்டி வாழமாட்டோம்” என்று இறுமாந்திருந்த பனைத்தொழில் செய்வோரே பனையுடனான உறவைத் துண்டிக்கத் தலைப்பட்டுள்ளனர். பேர்சிவல் பாதிரியார் 1874ஆம் ஆண்டில் திரட்டிய பழமொழிகளின் தொகுப்பில் ‘கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை’ என்ற மூதுரை இடம்பெற்றிருக்கிறது. செய்யும் தொழிலினாலேயே சாதியே தவிரப் பிறப்பினால் இல்லை என்றபோதும் தொழில் அடிப்படையில் ஏற்பட்ட பிரிவு சமுகத்தை ஏற்றதாழ்வுடைய சாதியப் பிரிவுகளாகப் பிளவுறுத்தியுள்ளது. சாதியக் கட்டமைப்பில் பனைத் தொழில் இகழப்பட, பனைத் தொழில் வல்லோர் இத்தொழிலில் இருந்து நீங்கி வருகின்றனர். அங்குலம் அங்குலமாகத் தன்மேனி முழுவதையும் ஈந்து தமிழர் தம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பனையை நவீனத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் ஒதுக்குவது விமோசனமற்ற சாபமாகவே அமையும். பனைகளைப் பெருக்கிஇ பனைவளத்தில் இருந்து உச்ச அளவில் விளைவுகளைப் பெறுவதில் இருக்கக் கூடிய தடைகளைக் களைந்து பனைக்குரிய மிடுக்கை மீண்டும் தமிழ் பெறவேண்டும். பனை அழியின் பனையாலேயே வாழ்ந்த தமிழும் தமிழரும் அழிய நேரிடும் என்பதைச் சிந்தையிற் கொள்வோமாக.