“கெஜ்ரிவால் சிறையில் மெதுவாக கொல்லப்படுகிறார்” – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
Share
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பெரிய சதி செய்யப்படுவதாகவும், அவர் மெதுவாக சிறையில் கொல்லப்படுகிறார் எனவும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், டில்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாட அனுமதிக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “இதுவரை 48 தடவை வீட்டிலிருந்து அனுப்பிய உணவில் மூன்று முறை மட்டுமே மாம்பழங்கள் அனுப்பப்பட்டன. ஏப்ரல் 8-க்கு பிறகு மாம்பழங்கள் அனுப்பப்படவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படவில்லை. மோசமான குற்றவாளியும் இல்லை. எனவே போதுமான சிகிச்சை பெறும் நோக்கில் சிறை துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டில்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் செய்தியாளர் சந்திப்பின் போது, “சர்க்கரை நோயாளிக்கு இன்சுலின் கொடுக்கத் தயாராக இல்லாத சிறை நிர்வாகம் அதற்கு எதிராக தினம் தினம் செய்திகளை விதைத்து வருகிறது. டில்லி மக்களிடம் கேட்கிறேன். அதற்கு நீங்கள் ஆதரவா இருக்கிறீர்களா? சிறை நிர்வாகத்தை நம்பலாமா? அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக பெரிய சதி செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் மெதுவாக சிறையில் கொல்லப்படுகிறார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பாஜகவினர் தினமும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.