கேரளாவில் ஆட்ட பாட்டம், மேளதாளம், கும்மாளத்துடன் “கொட்டிக்கலாசம்”
Share
தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதால் அனைத்துக் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் 2.77 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுசல் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணி முதல் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குப்பதிவுக்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றுடன் அதிகாரிகள் உடனடியாக வாக்குப்பதிவு மையங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
கடந்த மார்ச் 16ம் தேதி தான் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. கேரளாவை பொறுத்தவரை அதற்கு பல நாட்களுக்கு முன்பே முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் சற்றும் தாமதிக்காமல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர். இடதுசாரி கூட்டணியில் உள்ள கேரளா காங்கிரஸ் (எம் ) கட்சி தான் தங்களது வேட்பாளரை முதன்முதலாக அறிவித்தது. கோட்டயம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான தாமஸ் சாழிக்காடனை கடந்த பிப்ரவரி 12ம் தேதியே இந்த கட்சி அறிவித்துவிட்டது. அன்றே பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
பிப்ரவரி 26 ம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தங்களது 4 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. இவர்களும் உடனடியாக பிரசாரத்தை தொடங்கினர். மறுநாள் பிப்ரவரி 27ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களது 15 வேட்பாளர்களை அறிவித்ததை தொடர்ந்து அவர்களும் அன்றே களத்தில் குதித்தனர்.
மார்ச் 1ம் தேதி பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அவர்களும் உடனடியாக பிரசாரத்தை தொடங்கினர். காங்கிரஸ் கட்சி தான் கடைசியாக மார்ச் 8ம் தேதி வேட்பாளர்களை அறிவித்தது. மொத்தத்தில் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே கேரளாவில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
இந்த முறை கேரளாவில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. ஆனால், அதையும்
பொருட்படுத்தாமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அனல் பிறந்த இந்த பிரச்சாரம் இன்று (ஏப் 24) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
கேரளாவில் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமாக இருக்கும் தேர்தல் பிரசாரம் முடியும் நேரத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் ஒரே இடத்தில் குவிந்து ஆட்டம், பாட்டம், மேளதாளம், கும்மாளத்துடன், பிரசாரத்தை முடிப்பார்கள்.ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் “கொட்டிக்கலாசம்” என்ற பெயரில் இந்த அரிய சம்பவம் நடைபெறும். நேற்று இந்த “கொட்டிக்கலாசம்” நடைபெற்றது. அப்போது சில இடங்களில் தொண்டர்களுக்கிடையே மோதலும் நடைபெற்றது.
தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று மாலை 6 மணி வரை மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் போடுவது நேற்று நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால், தபால் ஓட்டு போடுவதற்கு இன்று (ஏப் 24) வரை மேலும் ஒரு நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது