கனடா நபர் கைதானார் மல்லாகம் நீதிமன்றத்திற்குள் வைத்து சட்டத்தரணி மீது தாக்குதல் முயற்சி
Share
கனடா வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரும் அவரது மகனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அண்ணாவை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த நபருக்கு அண்ணாவின் சொத்து மீது ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் சுன்னாகத்தை சேர்ந்த அண்ணாவின் மகளின் கணவனுக்கும் கனடாவைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பினரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இரு தரப்பினரையும் விசாரணை செய்து பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை கனடாவை சேர்ந்த நபரையும் அவரது மகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் இருவரும் வீட்டிற்கு திரும்பினர்.
இந்நிலையில் குறித்த வழக்கானது 05-06-2024 மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குறித்த வழக்கிற்கு வந்த கனடாவைச் சேர்ந்தவர், மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து எதிர் தரப்பு சட்டத்தரணியுடன் தகராறில் ஈடுபட்டு, தனது தோளினால் அவரை இடித்துவிட்டு “உன்னை பார்த்துக் கொள்கிறேன்” என்று அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.
இந்நிலையில் குறித்த சட்டத்தரணி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதன்பிரகாரம், குறித்த கனடாவை சேர்ந்த நபரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.